நடுநிசி விசும்பல், ஓயாத அழுகுரல்! மாணவர்கள் பீதி! சடலங்கள் வைக்கப்பட்ட பள்ளியை இடிக்கும் ஒடிசா அரசு
ஒடிசா: சமீபத்தில் ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் பிணங்களை வைத்திருந்த அரசு மேல்நிலை பள்ளியின் ஒரு பகுதியை மாவட்ட நிர்வாகம் இடித்திருக்கிறது. மாணவர்கள் பள்ளிக்கு வர பயந்த நிலையில், பிணம் வைக்கப்பட்டிருந்த கட்டிடம் மட்டும் இடிக்கப்பட்டு புது கட்டிடம் கட்டப்படும் என்று நிர்வாகம் கூறியுள்ளது.
ஒடிசா மாநிலத்தின், பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் ரயில் நிலையம் அருகே இரண்டு பயணிகள் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் என மூன்று ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கியது. இதில் 288 பேர் உயிரிழந்தனர். 1,000க்கும் அதிகமானோர் காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மீட்பு பணியின் போது, கண்டெடுக்கப்பட்ட சடலங்கள் அருகில் இருந்த பஹனாகா பஜார் மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டிருந்தது.

இரண்டு நாட்களுக்கு பின்னர் இந்த உடல்கள் புவனேஸ்வருக்கு மாற்றப்பட்டன. இதுவரை எந்த பிரச்னையும் இல்லை. இந்த பள்ளியில் மொத்தம் 566 மாணவ/மாணவிகள் பயில்கின்றனர். வரும் 16ம் தேதி மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கப்பட இருக்கின்றன. எனவே பள்ளியில் சுத்தம் செய்யும் பணிகள், வருகை பதிவு தயாரிப்பு, மாணவர்களுக்கான புத்தகங்கள் ஆகியவற்றை பிரித்து வைக்கும் பணிகளை ஆசிரியர்களும், ஊழியர்களும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளிக்கு மாணவர்கள் மீண்டும் வரமாட்டார்கள் என்று பெற்றோர்கள் கூறி வருகின்றனர். இந்த பள்ளி கட்டிடத்தில்தான் சடலங்கள் வைக்கப்பட்டிருந்ததால், இறந்து போனவர்கள் இந்த பள்ளியில்தான் குடியிருப்பதாகவும், எனவே பள்ளிக்கு சென்றால் இறந்தவர்களின் ஆவி தங்கள் பிள்ளைகளையும் பிடித்துக்கொள்ளும் என்றும் கூறி பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்துள்ளனர்.
இரவில் பள்ளியிலிருந்து அழுகுரல் கேட்பதாகவும், எனவே ஊர் மக்கள் அந்த வழியாக செல்வதை தவிர்த்து வருவதாகவும் கூறுகின்றனர். இது குறித்து பெற்றோர்கள் கூறுகையில், "இரவு நேரத்தில் இந்த பள்ளியிலிருந்து பல வித்தியாசமான சப்தங்கள் வருகிறது. அது எங்களை அழைப்பதை போன்று இருக்கிறது" என்று கூறியுள்ளனர். இது தொடர்பாக பள்ளியை ஆய்வு செய்ய மாநில அரசு, குழு ஒன்றை அனுப்பி வைத்தது.
பாலசோர் மாவட்ட ஆட்சியர் தத்தாத்ரயா பாசுசாஹேப் ஷிண்டேவை தலைமையாக கொண்ட இந்த குழு, பள்ளி நிர்வாகம், பொதுமக்களிடம் கலந்துரையாடியது. ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் ஷிண்டே, "பள்ளியை நாங்கள் முழுமையாக ஆய்வு செய்த பின்னர் சில விஷயங்கள் தெரிய வந்தது. பள்ளியின் சில கட்டிடங்கள் 'ஆஸ்பெட்டாஸ்' கூரையுடன் இருக்கிறது. இது மிகவும் பழைய கட்டிடமாகும். கட்டிடத்தின் இந்த அமைப்பு கூட ஊர் மக்களிடையே பயத்தை ஏற்படுத்த காரணமாக இருந்திருக்கலாம்" என்று கூறியுள்ளார்.
இவரைத் தொடர்ந்து பேசிய மற்றொரு அதிகாரி, "மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஆலோசனை வழங்க இருக்கிறாம். தேவையற்ற பயத்தை போக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்த திட்டமிட்டுள்ளோம். நிச்சயம் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வருவோம்" என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து இந்த குறிப்பிட்ட கட்டிடத்தை மட்டும் இடித்துவிட்டு ஜூன் 19ம் தேதிக்குள் புதிய கட்டிடத்தை கட்ட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தற்போது அதன் ஒரு பகுதி இடிக்கப்பட்டுள்ளது. மற்றொரு பகுதியும் விரைவில் இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications