உ.பி. அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு சிகிச்சை மறுப்பு... கழிப்பறையில் நடந்த பிரசவம்
லக்னோ: உத்தரபிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அவர் கழிப்பறையில் குழந்தையைப் பெற்றெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர் நகரில் தனபவன் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பாத்திமா (37) என்ற கர்ப்பிணிப் பெண் தனது கணவருடன் சிகிச்சைக்காக வந்துள்ளார். ஆனால், இது பிரசவ வலியல்ல, இன்னும் பிரசவத்திற்கு நாட்கள் இருப்பதாகக் கூறி அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை தர அங்கிருந்த மருத்துவர்கள் மறுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், பிரசவ வலியால் துடித்த பாத்திமாவிற்கு மருத்துவமனை கழிப்பறையிலேயே குழந்தை பிறந்தது.
அதனைத் தொடர்ந்து உடனடியாக தாயும், சேயும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது தாயும், சேயும் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்ட மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவமனை கண்காணிப்பாளர் ரமேஷ் சந்தர் தெரிவித்துள்ளார்.
இதேபோல், கடந்த இரு வாரத்துக்கு முன்னர் முசாபர் நகரில் அமைந்துள்ள மற்றொரு அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி ஒருவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து சாலையில் அவருக்கு பிரசவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications