கணிப்புகளை பொய்யாக்கிய திரிணாமுல் காங்கிரஸ்! மேற்கு வங்கத்தில் வெற்றி எப்படி சாத்தியமானது? விவரம்
கொல்கத்தா: லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் பாகஜ கணிசமான இடங்களில் தோல்வியை தழுவியுள்ளது. தேர்தல் கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி திரிணாமுல் காங்கிரஸ் அதிகமான தொகுதிகளை கைப்பற்றியிருக்கிறது.
மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளுக்கு இந்த முறை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. ஜூன் 1ம் தேதி கடைசி கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகின. இதில், 25-27 தொகுதிகள் வரை வென்று பாஜக முன்னிலை பெறும் என்று பல்வேறு கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருந்தன.

இதனை தொடர்ந்து நேற்று தேர்தல் முடிவுகள் வெளியாகிய நிலையில், கருத்துக் கணிப்புகள் அனைத்தும் பொய்யாகி உள்ளன. மேற்கு வங்கத்தில் 29 இடங்களில் திரிணாமுல் காங்கிரசும், 12 இடங்களில் பாஜகவும், 1 இடத்தில் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது. பாஜக கடந்த முறை 18 இடங்களில் வென்ற நிலையில் இந்த முறை 6 இடங்களை திரிணாமுல் காங்கிரஸிடம் தோல்வி அடைந்திருக்கிறது.
இந்நிலையில் பாஜக எங்கே சறுக்கியது, திரிணாமுல் எங்கே பலம் வாய்ந்ததாக மாறியது போன்ற விவரங்கள் வெளியாகி வருகின்றன. இந்த தகவல்களின்படி, வடக்கு மேற்கு வங்கத்தில் இந்த முறை திரிணாமுல் காங்கிரஸ் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறது. கடந்த 2019ல் இங்குள்ள 8 தொகுதிகளில் பாஜக 7ஐ கைப்பற்றியிருந்தது. இந்த முறை கணிசமான தொகுதிகளை திரிணாமுல் கைப்பற்றியிருக்கிறது.
குறிப்பாக கூச்பெஹர் தொகுதியில் பாஜக களமிறக்கிய மத்திய அமைச்சர் நிசித் பிரமானிக்கை, திரிணாமுல் வேட்பாளர் ஜகதீஷ் சந்திர பர்மா பசுனியா தோற்கடித்தார்.
தெற்கு வங்க தேசத்தை பொறுத்த அளவில், ஏற்கனெவே இருந்த பலத்துடன், மேலும் சில இடங்களை பாஜகவிடமிருந்து பறித்து வெற்றி தக்கவைத்துக்கொண்டது. பர்தமான்-துர்காபூர், ஹூக்ளி, மேதினிபூர் மற்றும் பாரக்பூர் ஆகிய தொகுதிகளை பாஜகவிடமிருந்து திரிணாமுல் பறித்தது. வடக்கு மற்றும் தெற்கு மேற்கு வங்கத்தை தொடர்ந்து பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் பாஜக சரிவை சந்தித்துள்ளது.
ஜார்கிராம், பாங்குரா, பிஷ்ணுபூர், புருலியா என நான்கு தொகுதிகளில் பழங்குடியினர் அதிகமாக இருக்கின்றனர். இதில் நான்கையும் பாஜக கடந்த 2019ல் வென்றிருந்தது. ஆனால், இந்த முறை பிஷ்ணுபூரை மட்டுமே பாஜகவால் தக்க வைத்துக்கொள்ள முடிந்தது. அதுவும் இந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் வெறும் 5,557 வாக்குகள் வித்தியாசத்தில்தான் ஜெயித்திருக்கிறார்.
இப்படியாக திரிணாமுல் காங்கிரஸின் வாக்கு சதவிகிதம் 43.3லிருந்து 45.76 ஆக உயர்ந்திருக்கிறது. இது காங்கிரஸின் அதிர் ரஞ்சன் சௌத்ரி போன்ற முக்கிய தலைவர்களை வீழ்த்த உதவியாக இருந்திருக்கிறது. சௌத்ரி கடந்த 1999ம் ஆண்டிலிருந்து பஹரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்று வந்திருக்கிறார்.
இந்த சரிவு குறித்து பாஜக தலைவர்கள் கூறுகையில், "நாங்கள் ராமர் கோயிலை திறந்தபோது கொண்டாட்டங்கள் களைக்கட்டின. ஆனால், அவை அனைத்தும் வாக்குகளாக மாறவில்லை. மறுபுறம் திரிணாமுல் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு வாக்காளர்கள் தக்க பதிலடி கொடுக்கவில்லை" என்று கூறியுள்ளனர். மேலும் சிலர், பாஜகவுக்கு மே.வங்கத்தில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு தலைவர்கள் கிடையாது. மோடியின் பிம்பத்தை மட்டுமே நம்பி கட்சி இறங்கியதும், சில இடங்களில் உட்கட்சி பூசல்களும் தோல்விக்கு காரணம் என தெரிவித்துள்ளனர்.
வாக்களர்களை அறிவிப்பதிலேயே பாஜக சொதப்பி இருந்தது. மொத்தமுள்ள 42 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக 20 பெயர்களை கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. ஆனால் மீதமிருந்த 22 வேட்பாளர்களை அறிவிக்க பாஜகவுக்கு ஒன்றரை மாதங்கள் தேவைப்பட்டன. தோல்வி குறித்து பரிசீலனை செய்வோம் என்று அக்கட்சி தலைவர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications