பம்பை ஆற்றில் பக்தர்கள் வேட்டி, துண்டுகளை வீச தேவசம் போர்டு தடை
சபரிமலை: சபரிமலைக்கு வரும் பக்தர்கள் பம்பை ஆற்றில் குளிக்கும் போது வேட்டி, துண்டுகளை வீசுவதற்கு தேவசம்போர்டு தடை விதித்துள்ளது.
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் கடந்த 15ம் தேதி மண்டல பூஜைக்காக நடைதிறக்கப்பட்டது. அன்று முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
கடந்த சில நாட்களாக சபரிமலை மற்றும் பம்பையில் மழை கொட்டியபோதும் பக்தர்களின் கூட்டம் குறையவில்லை. இம்முறை சபரிமலையில் பக்தர்களுக்கு பல்வேறு சிறப்பு வசதிகளை தேவஸ்தானமும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் செய்து உள்ளன. குறிப்பாக பம்பை ஆற்றை தூய்மை படுத்தும் பணி நடந்தது. மேலும் ஆற்றினை அசுத்தப்படுத்தாமல் இருக்க கண்காணிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
குறிப்பாக ஆந்திரா மாநிலத்தில் இருந்து வரும் அய்யப்ப பக்தர்கள் பலரும் பம்பை ஆற்றில் குளித்த பிறகு தாங்கள் அணிந்து வந்த வேட்டி மற்றும் துண்டுகளை ஆற்றில் எறிந்து விட்டு புதிய வேட்டி, துண்டுகளை வாங்கி அணிந்து செல்வது வழக்கம்.
ஆற்றில் வீசப்படும் துண்டுகள் ஆங்காங்கே தேங்கி அசுத்தம் ஏற்படுத்துவதோடு ஆற்றில் குளிக்க வரும் பக்தர்களுக்கு சுகாதார கேட்டை ஏற்படுத்தி வந்தது.
எனவே இம்முறை ஆற்றில் குளிக்கும் பக்தர்கள் யாரும் வேட்டி, துண்டுகளை ஆற்றில் வீசி எறியக்கூடாது என தேவசம்போர்டு தடை விதித்து உள்ளது. இதை கண்காணிக்கவும் ஆற்றில் பக்தர்கள் குளிக்கும் பகுதிகளில் ஊழியர்கள் கண்காணிப்புக்கு நிறுத்தப்பட்டு உள்ளனர். துண்டுகளை வீசும் பக்தர்களை பிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேவசம்போர்டு எச்சரித்து உள்ளது.
இதுதவிர சபரிமலை வரும் பக்தர்கள் பம்பைக்கு வந்தபின்பு இருமுடி கட்டி 18-ம் படி ஏறவும் இம்முறை சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி பம்பையில் உள்ள கணபதி கோவிலில் பக்தர்கள் இருமுடி கட்டி கொள்ளலாம். இதற்காக தேவசம்போர்டு அலுவலகத்தில் ரூ.200 கட்டணம் செலுத்தினால் அங்கிருந்து இருமுடி கட்டுவதற்கான அனைத்து பொருட்களும் வழங்கப்படும். அதற்கான ஏற்பாடுகளும் கோவிலில் செய்து கொடுக்கப்படும். பக்தர்கள் வேட்டி, துண்டு மட்டும் வாங்கி கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications