மகனே அங்குசாமி.. நிஜமாவே பாஜக-வோட பி டீம்தான் போல.. காங். கூட்டணியை கவிழ்த்து விட்ட பிரசாந்த் கிஷோர்
நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள், மகாகட்பந்தனுக்கு மட்டுமல்ல, பிரசாந்த் கிஷோரின் புதிய கட்சியான ஜனசுராஜ் கட்சிக்கும் (JSP) எதிர்பாராத அதிர்ச்சியை அளித்தன.
மொத்தம் 238 தொகுதிகளில் போட்டியிட்ட ஜனசுராஜ் கட்சி, ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. 236 தொகுதிகளில் அதன் வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.
இருப்பினும், 35 தொகுதிகளில் ஜனசுராஜ் கட்சி ஒரு 'வோட்டு பிரிக்கும்' சக்தியாக செயல்பட்டது. இந்தத் தொகுதிகளில் வெற்றி பெற்ற வேட்பாளரின் வாக்கு வித்தியாசத்தைவிட, ஜனசுராஜ் கட்சி பெற்ற வாக்குகள் அதிகமாக இருந்தன.

ஜனசுராஜ் கட்சி இரு கூட்டணிகளுக்கும் இழப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. எதிர்கட்சிகள் பிரசாந்த் கிஷோரை பாஜகவின் ஏஜென்ட் என்று குற்றம் சாட்டினாலும், அவரது கட்சி வேட்பாளர்கள் இரு கூட்டணிகளின் வேட்பாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தினர்.
ஒரு காலத்தில் மோடி-நிதீஷ் குமாரின் அரசியல் வியூக நிபுணராக இருந்த பிரசாந்த் கிஷோர், 2022-ல் ஜனசுராஜ் கட்சியைத் தொடங்கி, 'மாற்றம்' என்ற முழக்கத்தை முன்வைத்தார். தனது கட்சி உச்சத்தை அடையும் அல்லது முற்றிலும் தோல்வியடையும் என்று அவர் அப்போது கூறியது, இப்போது உண்மையாகியிருக்கலாம்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது அவரது கூட்டங்களில் திரண்ட கூட்டத்தைப் பார்த்த சிலர், அவர் தனது முன்னேறிய ஜாதி அடையாளம் காரணமாக பாஜகவின் வாக்குகளைப் பிரிப்பார் என்று கருதினர். வேறு சிலரோ, புலம்பெயர்வு போன்ற பிரச்சினைகளைப் பேசி, அரசாங்க எதிர்ப்பு இளைஞர்களின் வாக்குகளைப் பிரிப்பார் என்று வாதிட்டனர்.

இருப்பினும், அவரது செயல்பாடுகளால் ஒரு கூட்டணிக்கு அதிக லாபம் கிடைத்தது என்பதில் சந்தேகமில்லை. பிரசாந்த் கிஷோரின் உத்தியால் எந்தக் கூட்டணிக்கு அதிக நன்மை கிடைத்தது? ஜனசுராஜ் கட்சி போட்டியிட்ட 238 தொகுதிகளில், 236 தொகுதிகளில் டெபாசிட் இழந்தாலும், இந்த கட்சி பல தொகுதிகளில் ஒரு 'கேம் சேஞ்சராக' செயல்பட்டது என்பதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
35 சட்டமன்றத் தொகுதிகளில், ஜனசுராஜ் கட்சியின் வாக்குகள், அத்தொகுதி வேட்பாளரின் வெற்றி வித்தியாசத்தை விட அதிகமாக இருந்தன. இவற்றில், NDA 19 இடங்களையும், மகாகட்பந்தன் 14 இடங்களையும் வென்றன.
AIMIM மற்றும் BSP கட்சிகளும் தலா ஒரு தொகுதியில் பிரசாந்த் கிஷோரின் வேட்பாளர்கள் வாக்குகளைப் பிரித்ததால் நன்மை அடைந்தன. ஜனசுராஜ் கட்சி மொத்தமாக 3.5% வாக்குகளைப் பெற்றது, இது AIMIM, BSP போன்ற கட்சிகளை விட சிறந்தது.
காங்கிரஸ் போன்ற சீனியர் கட்சியை ஒப்பிட்டால் ஜனசுராஜ் பெற்ற வாக்கு சதவீதம் மோசமில்லை என்று கூறலாம். காங்கிரஸ் கட்சி 8.3% வாக்குகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த கட்சி 115 தொகுதிகளில் மூன்றாவது இடத்தையும், ஒரு தொகுதியில் இரண்டாவது இடத்தையும் பிடித்தது. எனவே, பிரசாந்த் கிஷோரை ஒரு 'கேம்சேஞ்சர் என்று கருதினால் மிகையாகாது.
கிஷோரின் கட்சிக்கு கிடைத்த வாக்குகளால், JDU 10 இடங்களிலும், பாஜக 5 இடங்களிலும் நன்மை அடைந்தன. LJP-RV 3 இடங்களையும், RLM ஒரு இடத்தையும் பெற்றன.
மகாபந்தனில், RJD 9 இடங்களையும், காங்கிரஸ் 2 இடங்களையும் வென்றன. CPM, CPIML-L, மற்றும் IIP கட்சிகள் தலா ஒரு இடத்தைப் பெற்றன.
பிரசாந்த் கிஷோர் தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது, தேஜஸ்வி யாதவை '9 ஆம் வகுப்பு பெயிலானவர்' என்று தொடர்ந்து கிண்டல் செய்தும், 'ஜங்கிள் ராஜ்' பற்றிய பயத்தை ஏற்படுத்தியும், RJD-ன் இளைஞர்களை ஈர்க்கும் சக்தியை தகர்த்தெறிந்தார்.
ஜனசுராஜ் கட்சியின் 3.5% வாக்கு சதவீதம், மகாபந்தனுக்கு 10-15 இடங்களை இழக்கச் செய்திருக்கலாம். முன்னாள் வியூக நிபுணரான கிஷோர், சமூக வலைத்தளங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களில் இந்த நேரேட்டிவை பரப்பி, RJD-ன் பிம்பத்தை 'படிக்காத ஜங்கிள் ராஜ்' ஆக மாற்றினார்.
கிஷோர், தேஜஸ்வியின் கல்வித் தகுதியை நேரடியாகத் தாக்கினார். தேஜஸ்வி 2015-ல் துணை முதல்வரானபோது, தனது 9-ஆம் வகுப்பு தோல்வியை 'சாதாரணமானது' என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், கிஷோர் இதை 'திறமையின்மை'க்கான அடையாளமாக பிரச்சாரத்தின்போது மாற்றினார்.
அக்டோபர் 2025 பொதுக்கூட்டங்களில் கிஷோர், "9-ஆம் வகுப்பு பெயிலான தலைவர் பீகாருக்கு வேலை கொடுப்பாரா? முதலில் நீங்களே ஸ்கூல் போய் படித்துக்கொள்ளுங்கள்" என்று கூறினார். தேஜஸ்வியை 'புதிய தலைமுறை' தலைவராக கருதிய இளைஞர் வாக்காளர்கள் (60% மக்கள் தொகை) 9ம் வகுப்பு பெயிலான விஷயத்தை 'அவமானகரமானது' என்று பேசத் தொடங்கிவிட்டனர்.
இந்த பிரச்சாரம் RJD-ன் இளைஞர் வாக்கு வங்கியை 5%-மாவது குறைத்தது. தேஜஸ்வி இதற்குப் பதிலளித்து, "கல்வி பட்டத்தால் வருவதில்லை, செய்யும் நல்ல வேலையால் வருகிறது" என்று கூறினார். ஆனால், கிஷோரின் அம்பு குறி தவறிவிடவில்லை.
இந்த பிரச்சார தாக்குதல் RJD-ன் இளைஞர்களுக்கு 'வேலை கொடுப்போம்' என்ற வாக்குறுதியை மங்கச் செய்தது. ஏனெனில், வேலைவாய்ப்பின்மை (14.5%) குறித்த இளைஞர்களின் அதிருப்தி ஜனசுராஜ் கட்சிக்குச் சென்றது.
தேர்தல் பிரச்சாரத்தின்போது ஒருமுறை ஒரு பத்திரிகையாளர் பிரசாந்த் கிஷோரிடம், நிதீஷ் மற்றும் தேஜஸ்வி இருவரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க நேர்ந்தால் யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள் என்று கேட்டார். கிஷோர், நிதீஷ் குமாரை ஆதரிப்பேன் என்று சொன்னார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications