கொல்கத்தா விவகாரம்.. போலீஸ் பேரம் பேசினரா, இல்லையா.. பெற்றோர் கூறும் அதிர்ச்சி தகவல்
கொல்கத்தா: கொல்கத்தா பயிற்சி பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு தினசரி பல்வேறு திருப்பங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில், கொல்கத்தா போலீஸ் வழக்கை முடிப்பதற்காக தங்களிடம் பேரம் பேசிய வீடியோவை திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்டிருந்த நிலையில், அந்த வீடியோ வற்புறுத்தப்பட்டு போலீஸார் எடுத்ததாக பெற்றோர் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கு நாடு முழுவதும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மருத்துவருக்காக நீதி கேட்டு நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சஞ்சய் ராய்க்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டு, சிபிஐ விசாரணை தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் தினசரி பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை. சஞ்சய் ராய்க்கு மட்டுமே தொடர்புள்ளது போன்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன
இந்நிலையில், பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டபோது, இந்த வழக்கை மேற்கொண்டு கொண்டு செல்லாமல் முடித்துக் கொள்வதற்காக கொல்கத்தா காவல் துறையினர் தங்களிடம் பேரம் பேசியதாக மருத்துவரின் பெற்றோர் கூறியுள்ளதாக நேற்று வெளியாகிய செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தின.
பெண் மருத்துவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மகளின் சடலத்தை வைத்துக் கொண்டே கொல்கத்தா போலீஸார் பேரம் பேசியதாகவும், தகனம் செய்வதற்கு நிர்ப்பந்தம் செய்ததாகவும், எவ்வளவு பணம் வேண்டும் என்றாலும் தருகிறோம். வெள்ளைக் காகிதத்தில் கையெழுத்துப் போட வேண்டும் என்று காவல் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாக குற்றம் சாட்டியிருந்தனர்.
ஆனாலும் இதனை மறுத்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் எதிர்க்கட்சியினர் இவ்வாறு சொல்ல வைத்துள்ளாக கூறியது. இதைத்தொடர்ந்து, கொல்கத்தா காவல் துறை தங்களிடம் பேரம் பேசவில்லை என்று மருத்துவரின் பெற்றோர் கூறும் வீடியோவை வெளியிட்டனர். அதில் பேசியிருந்த பெற்றோர் கொல்கத்தா காவல் துறையினர் தங்களுக்குப் பணம் எதுவும் கொடுக்கவில்லை. விசாரணையில் எங்களுக்கு முழு திருப்தி உள்ளது என்று அந்த வீடியோவில் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்டுள்ள வீடியோ குறித்து மருத்துவரின் பெற்றோர் அதிர்ச்சி தகவலைக் கூறியுள்ளனர். அவர்கள் அளித்துள்ள விளக்கத்தில், எங்களது மகளின் உடலைத் தகனம் செய்வுடனேயே எங்களை போலீஸார் வற்புறுத்தி அந்த வீடியோவை எடுத்ததாகக் கூறியுள்ளது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.
அதேபோல, நேற்று ஆசிரியர் தினத்தையொட்டி பெண் மருத்துவரின் தாய் தன் மகளின் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த கடிதத்தில், எனது மகள் மருத்துவராக உதவிய அனைத்து ஆசிரியர்களுக்கும் எங்களது நன்றி. நிறைய பட்டங்களைப் பெற வேண்டும் என்பது எனது மகளின் கனவாக இருந்தது. எனக்கு பணம் வேண்டாம், பட்டங்கள்தான் வேண்டும். அப்போதுதான் மக்களை ஆரோக்கியமாக வாழ வைக்க முடியும் என்று கூறுவார்.
மருத்துவக் கல்லூரியில் உள்ள மாணவர்களும், ஆசிரியர்களும் தங்களுக்குத் தெரிந்த உண்மைகளை சிபிஐ அதிகாரிகளிடம் கூறுங்கள். எனது மகளை நாங்கள் இழந்து 28 நாள்கள் ஆகிவிட்டன. ஆனாலும், இதுவரை விசாரணை முடியவில்லை என்று அவர் கூறியிருப்பது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications