போகமாட்டோம்.. வீடுகளை விட்டு வெளியேற மறுத்த கிராம மக்கள்! ராஜஸ்தான் முன்னெச்சரிக்கை பணியில் சிக்கல்!
ஜெய்சால்மர்: பைபர்ஜாய் புயல் குஜராத்தில் கரையைக் கடந்து ராஜஸ்தான் நோக்கி கிளம்பியதால், ராஜஸ்தானில் ஜெய்சால்மர், பார்மர் மாவட்டங்களில் தீவிர முன்னெச்சரிக்கை பணிகள் வேகமெடுத்துள்ளன.
குஜராத்தில் கடும் சேதங்களை விளைவித்த பைபர்ஜாய் புயல் சௌராஷ்டிரா - கட்ச் பகுதியை மையமாகக் கொண்டு நேற்று நள்ளிரவில் கரையைக் கடந்த நிலையில், தற்போது ராஜஸ்தானை நோக்கி நகர்ந்துள்ளது. இதனால் ராஜஸ்தானில் இன்று கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பைபர்ஜாய் புயல் வடகிழக்கு திசையில் நகர்ந்து ஜூன் 16ஆம் தேதியான இன்று அதிகாலையில் ஒரு சூறாவளி புயலாக வலுவிழந்து, இன்று மாலையில் தெற்கு ராஜஸ்தானில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ராஜஸ்தானில் இன்றும் நாளையும் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிவேக காற்று மற்றும் கனமழை காரணமாக மரங்கள் மற்றும் கிளைகள் முறிந்து விழும் அபாயம் உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதையொட்டி வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை மையத்தின் எச்சரிக்கையை அடுத்து ராஜஸ்தானில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.
பேரிடர் மீட்புக் குழுவினரின் உதவியுடன், பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் இருந்து மக்களை பாதுகாப்பான தங்குமிடங்களுக்கு மாற்ற மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரையோர மாவட்ட மக்கள் தங்குவதற்காக தற்காலிக தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஜெய்சால்மர் மாவட்ட நிர்வாகத்தினர், டப்லா கிராம மக்களை அங்கிருந்து வெளியேற்ற முயற்சித்தபோது, அவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற ஒப்புக்கொள்ளவில்லை. மாவட்ட நிர்வாகம் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வெளியேற்ற முயன்று வருகிறது.
ஜெய்சால்மர் மாவட்ட ஆட்சியர் டினா தாபி தலைமையில் நடைபெற்ற அவசர கூட்டத்தில் மாவட்ட எஸ்பி விகாஸ் சங்வான் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சமூக கூட்டங்கள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், போலீசார் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
அவசர வெள்ளக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு அங்கு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சூறாவளி புயல் மற்றும் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் ஜூன் 16 (இன்று) மற்றும் 17 ஆம் தேதிகளில் வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதாக பார்மர் மாவட்ட ஆட்சியர் அருண் குமார் புரோஹித் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications