திமுகவின் ஆட்டம் ஆரம்பம்! வக்பு சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஆ.ராசா!

Subscribe to Oneindia Tamil

டெல்லி மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமல்படுத்தி உள்ள வக்பு வாரிய சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக இன்று வழக்கு தொடர்ந்தது. திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்பி, உச்சநீதிமன்றத்தில் இன்று வக்பு வாரிய சட்டத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தார். உச்சநீதிமன்றத்தில் வக்பு சட்டத்துக்கு எதிராக இதுவரை 8 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மத்திய அரசின் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் லோக்சபா, ராஜ்யசபா ஆகிய இரு சபைகளிலும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே நிறைவேறியது. இதனைத் தொடர்ந்து இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார். இதனால் வக்பு வாரிய சட்டம் நடைமுறைக்கு வந்தது.

வக்பு சட்டத்துக்கு எதிர்ப்பு ஏன்?

வக்பு வாரிய சட்டமானது, இஸ்லாமியர்களுக்கு எதிரானது; இஸ்லாமியர்களின் வக்பு சொத்துகளை அரசு கையகப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டது என்பதால் திமுக இந்த சட்டத்தை கடுமையாக எதிர்க்கிறது. இந்த நிலையில் மத்திய அரசின் இந்த சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடரும் என்று தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். உதகையில் நேற்று நடைபெற்ற விழாவிலும் முதல்வர் ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

உச்சநீதிமன்றத்தில் ஆ.ராசா வழக்கு

இதனையடுத்து இன்று உச்சநீதிமன்றத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்பி, வக்பு வாரிய சட்டத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்டவை வழக்கு தொடர்ந்துள்ளன. உச்சநீதிமன்றத்தில் இதுவரை வக்பு சட்டத்துக்கு எதிராக 8 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஜனநாயக விரோதம்

உதகையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தை எப்படி நள்ளிரவு 2 மணிக்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு அனைத்து எதிர்க்கட்சிகளுடன் கடும் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றி இருக்கிறார்கள் என்று பார்த்திருப்பீர்கள். தொடக்கம் முதலே தமிழ்நாடு அரசும், தி.மு.க.வும் அதைக் கடுமையாக எதிர்த்தோம். நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில் இடம்பெற்றிருந்த நம்முடைய திரு. ஆ.ராசா அவர்களும், திரு. அப்துல்லா போன்றவர்கள் எல்லாம் அந்தப் பரிந்துரைகளை படித்துப் பார்த்துவிட்டு எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், எதையும் காதில் வாங்காமல், 'வக்ஃபு திருத்த சட்டம்' ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அப்போதும், அனைத்து எதிர்க்கட்சிகளும் விவாதத்தில் கலந்து கொண்டு ஆவேசமாக, அறிவுப்பூர்வமாக, விளக்கமாக தங்களுடைய நிலைப்பாட்டை முன் வைத்தார்கள்.

ஆ.ராசா, திருச்சி சிவா

மக்களவையில் நம்முடைய அருமை சகோதரர் ஆ.ராசா அரைமணி நேரத்துக்கு மேலாக நெருப்பு பறக்க பேசியது தலைப்புச் செய்தி ஆனது. மாநிலங்களவையில் நம்முடைய திருச்சி சிவா அவர்கள் 20 நிமிடத்துக்கு மேல் பேசி உணர்ச்சிபூர்வமாக அங்கே முழங்கியிருக்கிறார்.

அடக்கி வாசித்த அதிமுக தம்பிதுரை

இது ஒருபுறம்! இன்னொரு பக்கம், அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை - எவ்வளவு நேரம் பேசினார் தெரியுமா? ஒரே ஒரு நிமிடம்தான்! கிரிக்கெட்டில் முதல் பந்திலேயே 'டக்-அவுட்' ஆகின்ற பேட்ஸ்மன் கூட இதை விட அதிக நேரம் களத்தில் இருப்பார். அப்படி அவர் பேசிய ஒரு நிமிடத்திலேயும் அ.தி.மு.க. இதை எதிர்க்கிறதா? ஆதரிக்கிறதா? என்று சொல்லவில்லை. ஆனால், நாங்கள் இந்த மசோதாவை நிறைவேற்றப்பட்ட அன்று காலையிலேயே சட்டமன்றத்துக்கு கருப்பு பட்டை அணிந்து கொண்டு வந்து எதிர்ப்பைப் பதிவு செய்தோம்! அதுமட்டுமல்ல, தி.மு.க. சார்பிலும், உச்சநீதிமன்றத்தில் வக்ஃபு திருத்தச் சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்வோம் என்று சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறேன். நாளை நம்முடைய துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா பேரில் வழக்குத் தொடுக்கப்படும் என கூறியிருந்தார்.

தமிழக சட்டசபையில்..

இதேபோல தமிழக சட்டசபையில், வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் பின்னர் சட்டசபையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், கடந்த 27-ந் தேதி இந்த மாமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினோம். இந்திய திருநாட்டின் மத நல்லிணக்கத்திற்கும் சிறுபான்மையின இஸ்லாமிய சமுதாய மக்களுக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில், 1995ம் ஆண்டின் வக்பு சட்டத்தினைத் திருத்துவதற்கு மக்களவையில் அறிமுகம் செய்துள்ள வக்பு சட்டத் திருத்த முன்வரைவினை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்ற தீர்மானம் பாஜ நீங்கலாக அனைத்துக் கட்சிகளாலும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டு நிறைவேற்றப்பட்டது.

வக்பு சட்ட மசோதா நிறைவேற்றம் கண்டனத்துக்குரியது

இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான அரசியல் கட்சிகளால் இந்த வக்பு சட்டத் திருத்தம் எதிர்க்கப்பட்டது. இவை அனைத்தையும் மீறி நாடாளுமன்ற மக்களவையில் வக்பு சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டிருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது. வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக 232 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளார்கள். ஆதரவாக 288 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளார்கள். இந்தச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு இருந்தாலும் எதிர்த்து வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 232 என்பது சாதாரணமான எண்ணிக்கை அல்ல, எண்ணிக்கை கூடுதலாகக் கிடைத்து இருக்கலாம்.

மதநல்லிணக்கத்தை குலைக்கும் செயல்

ஆனால், இந்தச் சட்டத் திருத்தம் எதிர்க்கப்பட வேண்டியது மட்டுமல்ல; முழுமையாக திரும்பப் பெற வேண்டியது என்பதுதான் நம் கருத்து. அதைத்தான் இங்கே தீர்மானமாக நிறைவேற்றி அனுப்பியிருந்தோம். இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மைக் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி ஒரு சில கூட்டணிக் கட்சிகளின் தயவால் அதிகாலை 2 மணியளவில் இத்தகைய சட்டத்தை நிறைவேற்றி இருப்பது இந்திய அரசியல் சட்டத்தின் கட்டமைப்பின் மீது செய்யப்பட்ட தாக்குதல்; மதநல்லிணக்கத்தை குலைக்கும் செயல். இதனை உணர்த்தும் வகையில் கருப்புச் சின்னத்தை அணிந்து இன்றைய பேரவை நடவடிக்கைகளில் நாங்கள் பங்கெடுக்கிறோம்.

திமுகவின் சட்ட போராட்டம்

சர்ச்சைக்குரிய இந்த சட்டத் திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்பதை இம்மாமன்றத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். வக்பு வாரியத்தின் தன்னாட்சியை அழித்து, சிறுபான்மை இஸ்லாமிய மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒன்றிய அரசின் சட்டத்துக்கு எதிராக தமிழ்நாடு போராடும்! போராடும்! போராடும்! அதில் வெற்றியும் பெறும். அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதலை சட்டப்பூர்வமாகவே தடுப்போம் என்று இந்த மாமன்றத்தில் உறுதி அளிக்கிறேன் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். இந்த நிலையில் வக்பு சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் ஆ.ராசா எம்பி இன்று வழக்கு தொடர்ந்துள்ளார். உச்சநீதிமன்றத்தில், ஆம் ஆத்மி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளும் வழக்கு தொடர்ந்துள்ளன. உச்சநீதிமன்றத்தில், வக்பு சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீது விரைவில் விசாரணை நடைபெறும் என்பது எதிர்பார்ப்பு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+