புஷ்பா ஸ்டார் அல்லு அர்ஜுன் முதல் நடிகை ரோஜா வரை! தெலுங்கு நடிகர்கள் எந்த கட்சிக்கு ஆதரவு?
விசாகப்பட்டினம்: ஆந்திர லோக்சபா, சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்று வரும் நிலையில் தெலுங்கு நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராம் சரண், பவன் கல்யாண் உள்ளிட்டோர் எந்த கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள் தெரியுமா?
நாட்டில் 18-ஆவது லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. அதன்படி கடந்த ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7 ஆகிய தேதிகளில் முதல் மூன்று கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்தன.

அந்த வகையில் இன்று 4ஆவது கட்ட தேர்தல் 96 லோக்சபா தொகுதிகளுக்கு நடைபெறுகிறது. அது போல் ஆந்திரா சட்டசபைக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த தேர்தலில் சிரஞ்சீவி, ஜூனியர் என்டிஆர், அல்லு அர்ஜுன் உள்ளிட்டோர் வாக்குகளை செலுத்திவிட்டனர். இந்த நிலையில் இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று முன் தினத்துடன் ஓய்ந்தது.
அந்த வகையில் தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் ஜன சேனா என்ற கட்சியை தொடங்கினார். இவர் நடிகர் சிரஞ்சீவியின் தம்பி ஆவார். அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர். இவர் தெலுங்கு தேசம் கட்சிக்கு தனது ஆதரவை அளித்திருந்தார். அதன் பிறகு தெலுங்கு தேசம் கட்சியின் நிலம் கையகப்படுத்துதலுக்கு எதிராக இருந்தார் பவன்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த ஆந்திரா சட்டசபை தேர்தலில் பவன் கல்யாண் இரு தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அவருடைய கட்சி 140 தொகுதிகளில் போட்டியிட்டது. தற்போது ஆந்திரா சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து பவன் கல்யாண் களம் இறங்கியுள்ளார்.
அவர் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள பிதாபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அவருடைய அண்ணன் மகன் ராம் சரண், நேற்று முன் தினம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது தனது சித்தப்பாவுடன் நின்றிருந்த ராம் சரண், எதையும் பேசவில்லை.
ஆனால் அவரை பார்க்கவே லட்சக்கணக்கானோர் கூடினர். அது போல் ஸ்டைலிங் ஸ்டார் என அழைக்கப்படும் அல்லு அர்ஜுனும் தேர்தல் பிரச்சாரம் செய்தார். பவன் கல்யாணுக்கு அல்லு அர்ஜுன் உறவினர் என்றாலும் கூட அவர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவு அளித்தார்.
நந்தியால் சட்டசபை தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஷில்பா ரவிசந்திரா ரெட்டிக்கு ஆதரவாக அல்லு அர்ஜுனும் அவருடைய மனைவி சினேகா ரெட்டியும் பிரச்சாரம் செய்தனர். அல்லு அர்ஜுனின் ஆதரவு என்பது எந்த கட்சிக்கும் இல்லை. ஆனாலும் தனது நண்பர் ஷில்பா போட்டியிடுகிறார் என்பதற்காக அவருக்கு பிரச்சாரம் செய்தார்.
அல்லு அர்ஜுனை பார்க்க அதிக கூட்டம் வந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அது போல் நடிகை ரோஜாவும் இந்த முறை நகரி சட்டசபை தேர்தலில் 3ஆவது முறையாக போட்டியிடுகிறார். அவர் முதலில் தெலுங்கு தேசம் கட்சியில் போட்டியிட்டு பிறகு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
எதிர்க்கட்சி வரிசையில் 5 ஆண்டுகளும் ஆளும் கட்சியாக 5 ஆண்டுகளும் ரோஜா நகரி தொகுதியில் பணியாற்றினார். தற்போது அமைச்சராகவும் இருக்கிறார். இந்த நிலையில் ரோஜாவுக்கு சீட்டு தரக் கூடாது என அவருக்கு எதிராக நகரி தொகுதியினர் ஆட்சேபம் தெரிவித்த நிலையிலும் ரோஜாவுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் மீண்டும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என ரோஜா தீவிர களப்பணியாற்றி வருகிறார். இயக்குநர் ராம் கோபால் வர்மாவும் பிதாபுரம் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார். அவருடைய திரைப்படம் வியூகம், ஆந்திர அரசியலை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்டது.
அந்த படத்தில் ஒய் எஸ் ராஜசேகர ரெட்டியின் விமான விபத்து இறப்பு குறித்து பல சர்ச்சைக்குரிய தகவல்கள் இருந்தன. இதனால் அவரை மாநிலத்தை விட்டே வெளியேற வேண்டும் என தெலுங்கு தேசம், ஜனசேனா உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின. பிறகு அவர் அரசியலுக்கு வரவில்லை, தேர்தலிலும் போட்டியிடவில்லை என தெரிவித்துவிட்டார். மேலும் தவறான தகவல் அளித்தமைக்கு மன்னித்துவிடுங்கள் என்று ராம் கோபால் கேட்டிருந்தார். எனினும் ராம் கோபால் வர்மாவின் ஆதரவு ஒய்எஸ்ஆர் காங்கிரஸுக்கு இருக்கும் என தெரிகிறது.
நடிகை ஜெயபிரதா பாஜகவில் இணைந்துள்ளார். அவருடைய ஆதரவு பாஜக கூட்டணியினருக்கு இருக்கும். அது போல் நடிகை ஜெயசுதா, தெலுங்கு தேசம் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்டவைகளில் இருந்த நிலையில் அதிலிருந்து விலகி கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்தார். அவருடைய ஆதரவும் பாஜக கூட்டணியினருக்குத்தான். நடிகை விஜயசாந்தி பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நடிகர், நடிகைகள் ஆந்திரா, தெலுங்கானாவை சேர்ந்தவர்களாக இருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக தெலுங்கு நடிகர்களின் ஆதரவு யாருக்கு என்பதைதான் இங்கு விவரித்துள்ளோம்.












Click it and Unblock the Notifications