டார்கெட் விமான படை தளம்- முதல் முறையாக வான்வழி தாக்குதல்-டிரையல் பார்க்கிறதா பாக். தீவிரவாத கும்பல்?
ஜம்மு: டிரோன்கள் மூலம் ஜம்முவில் உள்ள இந்திய விமான படை தளத்தை இலக்கு வைத்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தீவிரவாதிகளின் இந்த தாக்குதல் மிகப் பெரிய வான்வழித் தாக்குதலுக்கு முன்னோட்டமாக இருக்குமோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டி ஊடுருவும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பொதுவாக கையெறி குண்டு தாக்குதல்கள், துப்பாக்கிச் சூடு நடத்திதான் பாதுகாப்பு படையினருடன் மோதலில் ஈடுபடுவர். அதேநேரத்தில் கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான் பகுதியில் இருந்து டிரோன்கள் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் ஆயுதங்களை இந்திய பகுதிகளில் தீவிரவாதிகளுக்கு வீசி செல்வது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

ஜம்மு விமான படை தளம் மீது தாக்குதல்
இதனை முறியடிக்க பாதுகாப்பு படையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டும் வந்தனர். இந்த நிலையில்தான் ஜம்மு விமானப் படை தளம் மீது டிரோன்கள் மூலம் குறைவான சக்தி கொண்ட வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது பயங்கரவாத கும்பல்.

2 வீரர்கள் காயம்
ஜம்மு வான்பரப்புக்கும் சர்வதேச வான்பரப்புக்கும் இடையே 14 கி.மீ தொலைவுதான் உள்ளது. பயங்கரவாதிகளின் இந்த டிரோன்கள் தாக்குதலில் 2 விமானப் படை வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். அதேநேரத்தில் விமானப் படை தளவாடங்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.

தீவிரவாதிகள் முன்னோட்டமா?
இந்த டிரோன்கள் மூலமான தாக்குதல் என்பதை தீவிரவாதிகள் முன்னோட்டமாக நடத்தி இருக்கலாம் என்றே பாதுகாப்பு படையினர் சந்தேகிக்கின்றனர். ராணுவ நிலைகள் மீது இதேபோல டிரோன்கள் தாக்குதல் நடத்தும் சதித்திட்டத்தை தீவிரவாதிகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

பாதுகாப்பு அமைச்சகம் ஆலோசனை
இன்னொரு பக்கம் மிகப் பெரிய வான்வழித் தாக்குதலுக்கான ஒத்திகையாகவும் இது இருக்கக் கூடும் எனவும் கருதப்படுகிறது. இந்த தாக்குதல் தொடர்பாக பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஜம்மு விமான படை தளம் தாக்குதல் குறித்த விவரங்களை பாதுகாப்பு அமைச்சகமும் கேட்டுள்ளது.

ஜம்முவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள்
இத்தாக்குதல் நடத்தப்பட்ட இடத்துக்கு தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் வருகை தந்துள்ளனர். இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என்றும் இந்த தாக்குதலின் முழுமையான பின்னணி என்ன என்பது குறித்த்ம் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் விரிவான விசாரணை நடத்தவும் உள்ளனர்.












Click it and Unblock the Notifications