குழந்தை இல்லாத மகளுக்கு தூக்கி கொடுப்பதற்காக.. பிஞ்சு பிள்ளையின் தாயை அடித்தே கொன்ற தம்பதி! பயங்கரம்
குவகாத்தி: தங்கள் மகளுக்கு ஒரு குழந்தை இல்லையே என்ற வருத்தத்தில் இருந்த அசாமைச் சேர்ந்த வயதான தம்பதியர் இருவர், மகளின் ஆசையை நிறைவேற்றுவதற்காக ஒரு பெண்ணை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விஷயத்தில் கொலை செய்த வயதான தம்பதியர் மீது மிகப்பெரிய தவறு இருக்கிறது என்பதை யாரும் மறுக்கப் போவதில்லை. ஆனால், இந்த சமூகம் அவர்களின் மகளுக்கு எவ்வளவு அழுத்தம் கொடுத்திருந்தால், தள்ளாத வயதிலும் அவர்கள் ஒரு கொலை செய்யும் வரை சென்றிருப்பார்கள் என்பதையும் இங்கு எண்ணிப் பார்க்க வேண்டும் என மனநல நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தக் கொலை சம்பவத்தில் தொடர்புடைய வயதான தம்பதியரையும், அவர்களின் மகனையும் அசாம் போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர்.

கசந்தது மகளின் திருமண வாழ்க்கை
அசாம் மாநிலம் தெங்காபுக்குரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பசந்த கோகோய் (65) - ப்ரனாலி கோகோய் (62) தம்பதியர். பசந்த கோகோய் வங்கி ஊழியராக இருந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு இவர்களின் மகள் கீதாவுக்கு திருமணம் முடிந்தது. மருமகன் இமாச்சலப் பிரதேசத்தில் பணிபுரிவதால் கீதாவும் கணவருடன் அங்கு சென்றார். முதலில், நன்றாக சென்று கொண்டிருந்த கீதாவின் திருமண வாழ்க்கையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு புயல் வீச தொடங்கியது.

குழந்தை இல்லாததால் விரக்தி
திருமணமாகி இரண்டு ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை என கணவர் வீட்டில் அனைவரும் கீதாவை மனம் புண்படும்படி பேச ஆரம்பித்திருக்கின்றனர். இதனால் தனது பெற்றோரை தொலைபேசியில் தொடர்புகொண்டு, தான் இங்கு படும் அவஸ்தைகளை கூறி தினமும் அழுதிருக்கிறார் கீதா. வருடங்களும் உருண்டோடின. கீதாவுக்கு குழந்தை உருவாகவில்லை. இதனால் கடுமையான மன விரக்தியில் கீதா இருந்திருக்கிறார்.

குழந்தையை கடத்த முடிவு
மகளுக்கு ஒரு குழந்தை இல்லையே என்ற மன வருத்தத்தில் பசந்த கோகோயும், ப்ரனாலி கோகோயும் நாட்களை தள்ளி வந்தனர். இதனிடையே, கடந்த மாதம் தனது பெற்றோரை போனில் அழைத்த கீதா, தனக்கு வாழ பிடிக்கவில்லை என்றும், தற்கொலை செய்ய தோன்றுகிறது எனவும் கூறியுள்ளார். ஒரே மகளின் இந்த முடிவை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், அவரை சமாதானப்படுத்தினர். பின்னர், மகளுக்கு ஒரு குழந்தையை கடத்தியாவது கொடுத்துவிட வேண்டும் என அவர்கள் முடிவு செய்தனர்.

ஊர் ஊராக திரிந்த தம்பதியர்
அதன்படி, இந்த மாதம் முழுவதும் குழந்தையை தேடி அந்த வயதான தம்பதியர் அசாம் முழுவதும் அலைந்து திரிந்துள்ளனர். அப்போது சராய்தியோ மாவட்டத்தில் நிதுமோனி (24) என்ற பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை இருப்பதை அவர்கள் பார்த்தனர். இந்தக் குழந்தையை எப்படியாவது பணம் கொடுத்து வாங்கிவிட திட்டமிட்ட அவர்கள், நிதுமோனியிடம் சென்று பேச்சு கொடுத்தனர். அப்போது, நிதுமோனி பணக் கஷ்டத்தில் இருப்பதை அறிந்த அவர்கள், தாங்கள் தங்கியிருந்த ஓட்டலுக்கு வந்து தங்களை பார்க்கும்படியும், வேலைக்கு ஏற்பாடு செய்து தருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். நிதுமோனியும் அவர்களின் பேச்சை கேட்டு அந்த ஓட்டலுக்கு சென்றுள்ளார்.

கொலை - கடத்தல்
அப்போது அந்த வயதான தம்பதியர், தங்கள் மகளின் நிலையை கூறி அழுதுள்ளனர். மேலும், எவ்வளவு வேண்டுமானாலும் பணம் தருகிறோம். உனது குழந்தையை மட்டும் எங்களிடம் கொடுத்துவிடுமாறும் அவர்கள் கெஞ்சியுள்ளனர். ஆனால், நிதுமோனி இதற்கு சம்மதிக்காமல் அங்கிருந்து வெளியேற முயன்றார். அப்போது பசந்த கோகோயும், ப்ரனாலியும் சேர்ந்து நிதுமோனியின் தலையில் ஹாக்கி மட்டையால் அடித்தனர். இதில் அதிக அளவில் ரத்தம் வெளியேறியதால் நிதுமோனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், அவரது குழந்தையை தூக்கிக் கொண்டு அவர்கள் சென்றனர்.

கைது நடவடிக்கை
இதையடுத்து, தங்கள் மகனை செல்போனில் தொடர்பு கொண்ட அவர்கள், உடனே இங்கு வருமாறு கூறினர். பின்னர், மகன் வந்ததும் குழந்தையை அவரிடம் கொடுத்துவிட்டு, மீண்டும் ஓட்டல் அறைக்கு சென்று நிதுமோனியின் உடலை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். அதன்படி, சாக்குப் பையில் நிதுமோனியின் உடலை வாடகை காரில் கொண்டு சென்று பாதாள சாக்கடைக்குள் அவர்கள் போட்டனர். இவர்களின் நடவடிக்கையால் சந்தேகமடைந்த கார் டிரைவர், போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கவே அவர்கள் அங்கு வந்து விசாரணை நடத்தியதில், நடந்த விஷயத்தை அந்த தம்பதியர் ஒப்புக்கொண்டனர். பின்னர், நிதுமோனியின் உடலை போலீஸார் சாக்கடையில் இருந்து வெளியே எடுத்தனர். அவரது குழந்தையையும் போலீஸார் மீட்டனர். பின்னர் நிதுமோனியை கொலை செய்ததற்காக தம்பதியர் இருவரையும், அவரது மகனையும் போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications