தமிழ்நாட்டில் 24 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்.. லிஸ்ட்டில் இருந்து தூக்க நடவடிக்கை!
டெல்லி: தமிழகத்தைச் சேர்ந்த 24 அரசியல் கட்சிகள் உட்பட நாடு முழுவதும் 345 அரசியல் கட்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
செயல்படாத பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்க தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு தேர்தலில் கூட போட்டியிடாத 345 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளை, பட்டியலில் இருந்து நீக்கும் நடவடிக்கையில் இந்திய தேர்தல் ஆணையம் முனைப்பு காட்டி வருகிறது.
அதன்படி, 2019 முதல் கடந்த 6 ஆண்டுகளாக ஒரு தேர்தலில் கூட போட்டியிடாத தமிழகத்தைச் சேர்ந்த 24 கட்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத 345 அரசியல் கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை இந்தியத் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.
தேர்தலில் போட்டியிடாதது குறித்து உரிய விளக்கத்தை சம்பந்தப்பட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றும், ஒரு மாதத்திற்குள் பதிலளிக்காத கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்க தலைமை தேர்தல் அதிகாரிக்கு பரிந்துரைக்க வேண்டும் எனவும் இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி தமிழகத்தில் அப்பா அம்மா மக்கள் கழகம், தமிழ் மாநில கட்சி, மீனவ மக்கள் முன்னணி, காமராஜர் மக்கள் கட்சி உள்ளிட்ட 24 கட்சிகள் உள்ளிட்ட நாடு முழுவதும் விதிகளுக்கு இணங்காத கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய தேர்தல் ஆணையத்தில் தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள 2,800க்கும் மேற்பட்ட பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளில் பல கட்சிகள் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளாக தொடர தேவையான நிபந்தனைகளை பூர்த்தி செய்யாதது தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு வந்துள்ளது.
பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் 6 ஆண்டுகளுக்குள் ஏதேனும் ஒரு தேர்தலில் போட்டியிட்டிருக்க வேண்டியது கட்டாயம். 2019 ஆம் ஆண்டில் இருந்து நாடாளுமன்றம் மற்றும் மாநில, யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கான பொதுத்தேர்தல் அல்லது இடைத்தேர்தல்களில் எதிலும் போட்டியிடாத கட்சிகளையும், இருப்பிடம் கண்டறிய முடியாத கட்சிகளையும் நீக்குவதன் மூலம் அரசியல் அமைப்பை தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
முதல் கட்டமாக 345 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் நிபந்தனைப்படி கடந்த 6 ஆண்டுகளில் எந்தவித தேர்தலிலும் போட்டியிடவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த அரசியல் கட்சிகளை முதற்கட்டமாக பட்டியலிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கையை இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையாளர்கள் டாக்டர் சுக்பீர் சிங் சந்து மற்றும் டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோர் கொண்ட குழு தொடங்கியுள்ளது.
அதே நேரத்தில் எந்த ஒரு அரசியல் கட்சியும் தேவையில்லாமல் பட்டியலிலிருந்து நீக்கப்படக்கூடாது என்பதற்காக, சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள் வாயிலாக, அடையாளம் காணப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது.
அதன் பிறகு, தலைமை தேர்தல் அதிகாரிகளால் நடத்தப்படும் விசாரணையின் போதும் அத்தகைய அரசியல் கட்சிகளுக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பு தரப்படும். எந்தவொரு பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை பட்டியலிலிருந்து நீக்குவது தொடர்பான இறுதி முடிவை இந்திய தேர்தல் ஆணையமே எடுக்கும். அரசியல் அமைப்பை சீர்படுத்தும் நோக்கத்துடன் இந்நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் 1951ஆம் ஆண்டின் மக்களாட்சித் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 29A இன் கீழ் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்தச் சட்டப்பிரிவின் கீழ், அரசியல் கட்சிகளாக பதிவு செய்யப்பட்ட அமைப்புகள் வரிவிலக்கு போன்ற பல நன்மைகளை பெறுகின்றன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications