பணமோசடி தடை சட்டத்தின் கீழ் கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
டெல்லி: பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் மணி லாண்டரி சட்ட பிரிவிற்கு கீழ் கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது, இதை தடுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அமலாக்கத்துறைக்கு எதிராக பலர் வழக்கு தொடுத்து இருந்த நிலையில் உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது.
அமலாக்கத்துறை அமைப்பு, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கைகளை செய்வது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது, சட்ட பிரிவு 20 மற்றும் 21க்கு எதிரானது என்று பலர் வழக்கு தொடுத்து இருந்தனர்.

அமலாக்கத்துறை
இது அமலாக்கத்துறைக்கு உட்சபட்ச அதிகாரம் வழங்குவதாகவும், எல்லா குற்றத்தையும் பண மோசடி குற்றமாக அமலாக்கத்துறை மாற்றி, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாகவும் வழக்கு தொடுக்கப்பட்டது. காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் உட்பட பலர் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தனர். ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூப் முப்தி, கார்த்தி சிதம்பரம் ஆகியோர் உட்பட பலர் தொடுத்த வழக்கில், பின் வரும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

கோரிக்கைகள் என்னென்ன?
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அனுமதி தர கூடாது.
2018ல் இது தொடர்பாக கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தத்தை நீக்க வேண்டும்.
இதில் பெயில் பெறுவதற்கு இரண்டு நிபந்தனைகள் (நிபந்தனை 1 - பெயிலுக்கு எதிராக அரசு தரப்பு வழக்கறிஞர் மனு தொடுத்தால் அவர்தான் முதலில் விசாரிக்கப்படுவார், நிபந்தனை 2 இதில் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றால் மட்டுமே பெயில் வழங்கப்படும்) இருப்பதற்கு எதிர்ப்பு.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சோதனை செய்ய, வழக்கு பதிய, சீல் செய்ய அமலாக்கத்துறைக்கு அனுமதி மறுக்க வேண்டும்.

எப்ஐஆர்?
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் அமலாக்கத்துறை தகவல் அறிக்கையை குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கு கொடுக்க வேண்டும். இதுவும் எப்ஐஆர் போன்றது என்பதால், அமலாக்கத்துறை தகவல் அறிக்கையை குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கு தர வேண்டும்.
2002க்கு முன் நடத்த முறைகேட்டு புகார்களில் அமலாக்கத்துறை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

தீர்ப்பு என்ன?
இந்த வழக்கில்தான் கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் குற்றத்தின் கீழ் கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
அதோடு மனுதாரர்கள் வைத்த பெரும்பாலான கோரிக்கைகளுக்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், தினேஷ் மகேஸ்வரி மற்றும் சி.டி. ரவிக்குமார் அளித்த தீர்ப்பில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சோதனை செய்ய, கைது செய்ய, வழக்கு பதிய, சீல் செய்ய அமலாக்கத்துறைக்கு அனுமதி உண்டு.

தீர்ப்பு விவரம்
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் அமலாக்கத்துறை தகவல் அறிக்கையை குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கு கொடுக்க வேண்டியது இல்லை. இதுவும் எப்ஐஆரும் ஒன்று அல்ல.
2002க்கு முன் நடத்த முறைகேட்டு புகார்களில் அமலாக்கத்துறை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அனுமதி உண்டு. இதில் பெயில் பெறுவதற்கு இரண்டு நிபந்தனைகள் தொடரும், என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அமலாக்கத்துறை இதன் மூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்க முடியும்.












Click it and Unblock the Notifications