காங்கிரஸ் ஓட்டு வங்கியாக மாறிய ஊடுருவல்காரர்கள்? ஜார்கண்ட்டில் இருந்து வெளியேற்ற அமித்ஷா திட்டம்
ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின மக்களின் உரிமைகளை ஊடுருவல்காரர்கள் பறிக்கின்றனர். இவர்கள் ஹேமந்த் சோரன், ராகுல் காந்தியின் வாக்கு வங்கியாக உள்ளனர். பாஜக ஆட்சியை பிடித்ததும் ஒவ்வொரு ஊடுருவல்காரர்களும் அடையாளம் காணப்பட்டு விரட்டியடிக்கப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாக்குறுதி அளித்துள்ளார்.
ஜார்கண்ட்டில் தற்போது ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இதில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவரான ஹேமந்த் சோரன் முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்துக்கு கடந்த 2019ல் சட்டசபை தேர்தல் நடந்தது.

ஜார்கண்ட் சட்டசபையின் 5 ஆண்டு பதவிக்காலம் விரைவில் முடிவுக்கு வர உள்ளது. இதனால் விரைவில் ஜார்கண்ட்டுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்துடன் சேர்த்து ஜார்கண்ட் மாநிலத்துக்கு சட்டசபை தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது.
ஜார்கண்ட் மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படாவிட்டாலும் கூட அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன. சட்டசபை தேர்தலையொட்டி பாஜக சார்பில் பரிவர்த்தன் யாத்திரை தொடங்கியது. இந்த யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தொடங்கி வைத்தார். அதன்பிறகு அவர் பேசியதாவது: ஜார்கண்ட் சட்டசபை தேர்தலுக்கான பரிவர்த்தன் யாத்திரை இன்று தொடங்கப்படுகிறது. வரும் நாட்களில் இந்த யாத்திரை ஒவ்வொரு கிராமமாக செல்லும்.
அமித்ஷாவை விமர்சித்த பிரதமர் மோடி? இதுதான் ஊமைக்குத்தா? ஜார்கண்ட்டில் சொன்னதை கவனிச்சீங்களா..
இந்த தேர்தல் என்பது மாற்றத்துக்கான தேர்தலாக இருக்க வேண்டும். மாற்றம் என்பது வெறுமனே ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் ஆட்சிக்கு பதில் பாஜகவை அரியணை ஏற வைப்பதாக மட்டும் இருக்கக்கூடாது. இந்த ஊழல் அரசாங்கத்தை அகற்றி ஊழலை தடுக்கும் அரசை கொண்டு வருகிறோம் என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும். அதேபோல் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் அரசை கொண்டு வர நினைக்க வேண்டும்.
இங்குள்ள பழங்குடியின மக்கள், விவசாயிகள் வேலைதேடி வெளியூர் செல்லும் நிலை உள்ளது. இது மாற வேண்டும். இதனை மாற்ற பாஜகவால் மட்டும் தான் முடியும். இதனால் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நரேந்திர மோடியின் ஆட்சியை இங்கு கொண்டு வர வேண்டும்.
இங்குள்ள பழங்குடியின சிறுமிகளின் கலாசாரம் மற்றும் கலாசாரத்தை ஊடுருவல்காரர்கள் பறிக்கும் பணியை ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் அரசு செய்கிறது. ஊடுருவல்காரர்கள் லாலு யாதவ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் ராகுல் காந்தியின் காங்கிரஸ் கட்சிக்கான வாக்கு வங்கியாக இருக்கின்றனர்.
நீங்கள் (பொதுமக்கள்) ஜார்கண்ட்டில் ஆட்சியை மாற்றினால் ஜார்க்கண்டில் இருந்து ஊடுருவல்காரர்கள் ஒவ்வொருவரையும் அடையாளம் கண்டு வெளியேற்றுவோம் என்று நான் உறுதியளிக்கிறேன். ஏனென்றால் ஜார்கண்ட்டில் பழங்குடியினருக்கு பதிலாக ஊடுருவல்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை நாம் தடுக்க வேண்டும். இந்த பணியை பாஜகவால் மட்டுமே செய்ய முடியும்’’ என்றார்.












Click it and Unblock the Notifications