நீங்க மன்னிச்சாதான் உயிரோட இருப்பேன்.. மமதா பானர்ஜிக்கு பாஜகவுக்கு போன சோனாலி குகா உருக்கமான கடிதம்
கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி இல்லாமல் தம்மால் வாழ முடியாது; அவர் என்னை மன்னித்தால்தான் நான் உயிருடன் இருப்பேன் என பாரதிய ஜனதா கட்சிக்கு தாவிய திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனாலி குகா உருக்கமான கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக மமதா பானர்ஜியின் வலது, இடதுகரங்களாக் நம்பிக்கைக்குரிய தளபதிகளாக இருந்த பலரும் பாஜகவின் ஆசை வார்த்தைகளுக்கு சிக்கினர். சுவேந்து அதிகாரி உள்ளிட்ட பலரையும் பாஜக தன்வயப்படுத்திக் கொண்டது.
மேற்கு வங்கத்தில் பாஜகவால் தனித்து காலூன்ற முடியாது என்பதால் திரிணாமுல் 2-ம் கட்ட தலைவர்களை சகட்டுமேனிக்கு வளைத்துப் போட்டது. இப்படி பாஜக வலையில் சிக்கியவர்களில் மமதாவின் மிகவும் நம்பிக்கைக்குரியவரான, நிழல் முதல்வர் என விமர்சிக்கப்பட்ட முன்னாள் துணை சபாநாயகர் சோனாலி குகாவும் ஒருவர்.

உருக்கமான கடிதம்
4 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த சோனாலி குகா, தேர்தலுக்கு முன்னதாக பாஜகவில் ஐக்கியமானார். மமதா மீது அனல் பறக்கும் குற்றச்சாட்டுகளை அடுக்கி பரபரப்பை கிளப்பினார். ஆனால் சட்டசபை தேர்தலில் சோனாலி குகா போட்டியிடவில்லை. இந்த நிலையில் பாஜகவுக்கு தாம் தவியது தவறு என்பதை உணர்ந்து முதல்வர் மமதா பானர்ஜிக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

பாஜகவுக்கு போனது தப்புதான்..
அந்த கடிதத்தில் சோனாலி குகா எழுதியுள்ளதாவது: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை விட்டு வேறு ஒரு கட்சிக்கு சென்றது மிக தவறான முடிவு என்பதை மிகவும் நொறுங்கிய மனதுடன் எழுதுகிறேன். ஏதோ ஒரு உணர்வுவயப்பட்ட நிலையில் தவறான முடிவை எடுத்துவிட்டேன். என்னால் அந்த மாதிரி ஒரு கட்சியில் இருக்க முடியாது.

உங்களை விட்டு பிரிய முடியாது..
ஒரு மீன் தண்ணீரை விட்டு வெளியேறினால் எப்படி உயிர் வாழாதோ அதேபோல், உங்களை விட்டு பிரிந்து என்னால் வாழ முடியவில்லை தீதி.. நீங்கள் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்... நீங்கள் என்னை மன்னிக்காவிட்டால் நான் உயிருடன் வாழவே விரும்பவும் இல்லை...

சந்தித்து பேச வேண்டும்
நான் பாஜகவில் இணைந்தது தவறான முடிவு. அதற்காக இப்போதும் வருத்தப்படுகிறேன். என்னை மமதாவுக்கு எதிரான ஒரு கருவியாகவே பாரதிய ஜனதா கட்சி பயன்படுத்திக் கொண்டது. மமதா பானர்ஜியை நேரில் சந்தித்து பேச முயற்சிக்கிறேன். அவர் மாநிலத்தின் முதல்வர். இப்போதுள்ள சூழ்நிலையில் நாம் நினைத்த நேரத்தில் நமக்கு நேரம் ஒதுக்குவார் என எதிர்பார்க்க முடியாது. மமதாவின் வீட்டுக்கு அடுத்த வாரம் நேரில் செல்ல இருக்கிறேன். அவரது சகோதரரின் மறைவு சடங்குகளில் பங்கேற்க இருக்கிறேன். அப்போது மமதாவிடம் பேசுவதற்கு முயற்சிகள் எடுப்பேன். இவ்வாறு சோனாலி குகா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications