அடங்கப்பா உலகமகா கேடியா நீ.. போலி நீதிமன்றத்தையே நடத்திய கும்பல்! குஜராத்தில் கொத்தாக தூக்கிய போலீஸ்
காந்தி நகர்: குஜராத் மாநிலத்தில் போலி ஐபிஎஸ், போலீஸ் கலெக்டர் வரிசையில் தற்போது போலியாக ஒரு நீதிமன்றத்தையே நடத்தி வந்ததோடு சொத்து வழக்குகளில் தீர்ப்பு கூறி வந்த போலி நீதிபதியை கைது செய்துள்ளனர் போலீசார். இந்த நிலையில் பல ஆண்டுகளாக கைவரிசை காட்டியவர்கள் கைதானது எப்படி என்பது குறித்தான பின்னணி வெளியாகி இருக்கிறது.
குஜராத் மாநிலம் காந்தி நகரைச் சேர்ந்த மோரிஸ் சாமுவேல் கிறிஸ்டியன் தான் அந்த ஜகஜால கில்லாடி. காந்தி நகரில் ஒரு அலுவலகத்தை நீதிமன்றம் போல செட்டப் செய்து அப்பகுதி பொதுமக்களை ஏமாற்றி வந்திருக்கிறார்.

சிட்டி சிவில் நீதிமன்றம் என போர்டு வைத்து நிலப் பிரச்சினை தொடர்பாக வரும் மக்களை ஏமாற்றி நீதிமன்றம் நியமித்த மத்தியஸ்தர் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு தீர்ப்பாயத்தில் விசாரண நடத்தி தீர்ப்பு அளிப்பதாக ஆசை காட்டி பலரை ஏமாற்றியுள்ளார். நீதிபதி இருக்கையில் மோரிஸ் சாமுவேல் அமர்ந்திருக்க அவருடைய கூட்டாளிகள் நீதிமன்ற டவாலி, வழக்கறிஞர்கள் மற்றும் ஊழியர்கள் போல நடித்திருக்கிறார்கள்.
உண்மையான நீதிமன்றம் போலவே செட்டப்பும் இருக்க, ஏமாந்து போன மக்கள் அவர்களது நடிப்பை பார்த்து கட்டணமாக ஒரு தொகையை கொடுத்திருக்கின்றனர். இப்படியாக பல ஆண்டுகள், பலரிடம் பணத்தை ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் போலீசாரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் தற்போது மோரிஸ் சாமுவேல் கிறிஸ்டியனும் அவரது கும்பலும் சிக்கி உள்ளது. இந்த நிலையில் பல ஆண்டுகள் ஏமாற்றிய மோரிஸ் சாமுவேலின் மோசடி கும்பல் சிக்கியது எப்படி என்ற தகவல் வெளியாகி உள்ளது.
மோசடியாக ஒரு நிலத்தை ஆக்கிரமித்து இருந்த காந்திநகரை சேர்ந்த பாபுஜி என்பவர் தான் சாமுவேல் சிக்குவதற்கு காரணம். அந்த நிலத்தை தனது பெயரில் பத்திர பதிவு செய்து தர வேண்டும் என போலி நீதிமன்றத்தில் சாமுவேலை அணுகியிருக்கிறார் பாபுஜி. தொடர்பாக மனு ஒன்றையும் தாக்கல் செய்தார். அதில் 50 ஆண்டுகளாக நிலத்தில் தான் குடியிருப்பதால் தனது பெயருக்கு நிலத்தை மாற்றித் தரவேண்டும் என கேட்டிருக்கிறார்.
இதை அடுத்து பாபுஜி இடம் இருந்து குறிப்பிட்ட தொகையை பெற்றுக் கொண்ட சாமுவேல் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியதாக கூறப்படுகிறது. இருந்தும் சும்மா இல்லாத பாபுஜி அந்த தீர்ப்பு நகலை எடுத்துக் கொண்டு அகமதாபாத் ஆட்சியரிடம் சென்று தனக்கு நிலத்தை பட்டா போட்டு தர வேண்டும், இந்தாருங்கள் அதற்கான நீதிமன்ற உத்தரவு எனக் அதனைக் காட்டி பேசியுள்ளார். ஆனால் மாவட்ட ஆட்சியர் அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் போலி நீதிமன்ற தீர்ப்பு நகலை இணைத்து அகமதாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார் பாபுஜி. தீர்ப்பு நகலை பார்த்து சந்தேகம் அடைந்த நீதிமன்ற பதிவாளர் இது குறித்து போலீசில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில் மோரிஸ் சாமுவேலில் தில்லாலங்கடி வேலைகள் அம்பலமான நிலையில் தற்போது அவரது குரூப் களி தின்று வருகிறது. குஜராத்தில் ஏற்கனவே கள்ளநோட்டு கும்பல், போலி ஐஏஎஸ், போலீஸ் ஐபிஎஸ், போலி பல்கலைக்கழகங்கள் என பல போலிகள் நடமாடி வரும் நிலையில் தற்போது போலி நீதிபதியே மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு போட்ட சம்பவம் இந்தியா முழுவதும் பேசுபொருள் ஆகியிருக்கிறது.












Click it and Unblock the Notifications