அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. மலைச்சாமி பா.ஜ.க.வில் ஐக்கியமானார்!
பெங்களூரு: அண்ணா தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. மலைச்சாமி பாரதிய ஜனதாவுக்கு தாவி உள்ளார்.
தமிழக உள்துறை செயலர் மற்றும் தேர்தல் அதிகாரியாக இருந்தவர் மலைச்சாமி. பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு அவர் 1999 ஆம் ஆண்டில் அண்ணா தி.மு.க.வில் இணைந்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் அக்கட்சியின் சார்பில் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின்னர் ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு அதிமுக எம்.பி.யானார்.

கடந்த லோக்சபா தேர்தலின் போது வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள், பாரதிய ஜனதா கூட்டணிக்கு சாதகமாக இருப்பதாக தெரிவித்தன. இதனால் மோடி ஆட்சியமைத்தால் அதற்கு அதிமுக ஆதரவு அளிக்குமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த மலைச்சாமி, ஜெயலலிதாவின் சிறந்த நண்பர்களில் ஒருவர் மோடி. அரசியல் ரீதியாக அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், மோடி பிரதமரானால் அவருடன் நெருக்கமான உறவை ஜெயலலிதா பேணுவார் என்று கூறியிருந்தார்.
இது தேர்தல் முடிவு வெளியான பின்னர் பாரதிய ஜனதா கூட்டணியை அண்ணா தி.மு.க. ஆதரிக்கும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. இதனால் அதிருப்தி அடைந்த அண்ணா தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா, அதிரடியாக மலைச்சாமியை கட்சியில் இருந்து நீக்கினார்.
முன்னாள் பாராளமன்ற உறுப்பினர் திரு.மலைச்சாமி IAS இன்று திரு.அமித் ஷா முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் (1) pic.twitter.com/rrMIECp54I
— Pon Radhakrishnan (@PonnaarrBJP) April 4, 2015 கடந்த ஓராண்டு காலமாக அமைதியாக இருந்த மலைச்சாமி நேற்று பெங்களூருவில் அமித்ஷா முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.
அவருடன் புதுச்சேரி தி.மு.க.,வை சேர்ந்த சுப்ரமணியம், தி.மு.க.முன்னாள் எம்.எல்.ஏ., சோமசுந்தரம், கவிஞர் கண்ணதாசன் மகள் விஷாலி கண்ணதாசன், மக்கள் தமிழகம் புரட்சி கவிதாசன் ஆகியோர் பெங்களூருவில் அமித் ஷா முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்துள்ளதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications