'தலை'யை தட்டிதூக்கிய பாஜக.. கதிகலங்கும் எதிர்க்கட்சிகள்.. காங்கிரஸின் பலம் குறைகிறதா.. அடுத்து என்ன?
ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான கிரண் குமார் ரெட்டி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமராவதி: ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பதவி வகித்து வந்த கிரண் குமார் ரெட்டி தற்போது காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ளார். சமீப நாட்களாக டெல்லியில் உள்ள பாஜக தலைவர்களை நேரில் சந்தித்து வந்த இவர் விரைவில் பாஜகவில் இணையலாம் என்று சொல்லப்படுகிறது.
கடந்த இரண்டு நாடாளுமன்ற தேர்தல்களில் தோல்வி, கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்திக்கு எழுதிய கடிதம், பல தலைவர்கள் பாஜகவுக்கு தாவியது, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் ஆட்சியை இழந்தது போன்றவை காங்கிரஸ் கட்சியை கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக சோதித்திருக்கிறது. இருப்பினும், பாரத் ஜடோ யாத்திரை, கட்சிக்கு காந்தி குடும்பத்தில் அல்லாத ஒருவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது, இமாச்சல் பிரதேச மாநில தேர்தலில் வெற்றி ஆகியவை காங்கிரசுக்கு உற்சாகம் கொடுத்து வருகிறது.
இந்நிலையில் தற்போது மேலும் சில முக்கிய தலைவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைவார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த அதிருப்தி தலைவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர்தான் ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பதவி வகித்து வந்த கிரண் குமார் ரெட்டி. ஒன்றுபட்ட ஆந்திராவின் கடைசி முதலமைச்சர் இவர்தான். ஆந்திராவை பிரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது முதலமைச்சர் பதவியையே தூக்கியெறிந்தவர்.

பதவி விலகல்
கிரண் குமார் கடந்த 2011ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் ஆந்திர முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதுதான் ஆந்திரா VS தெலங்கானா மோதல் வெடித்தெழுந்தது. இதற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் இரண்டு பக்கங்களாக பெரும் போராட்டம் வெடித்தது. கிரண் குமார் ஒன்றுபட்ட ஆந்திரா பக்கம் நின்றார். ஆனால் அவரது காங்கிரஸ் கட்சி ஆந்திராவை இரண்டாக பிரிப்பதில் உறுதியாக இருந்தது. இதனையடுத்து கிரண் குமார் தன்னுடைய நிலைப்பாட்டை கட்சியிடம் எடுத்துக்கூறினார். கட்சி இதை ஏற்கவில்லை. எனவே தனது முதலமைச்சர் பதவியை துறப்பதாக அறிவித்து ஒன்றுபட்ட ஆந்திராவுக்கு ஆதரவாக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

புதிய கட்சி
அதன் பின்னர் 'ஜெய் சமகியாந்திரா சமதி' எனும் கட்சியை தொடங்கினார். எதிர்பார்த்ததை போல தொடக்கத்தில் இக்கட்சிக்கு அதிக ஆதரவு இருந்தாலும், நாளடைவில் ஆதரவு முற்றிலுமாக குறைந்துவிட்டது. இது அவர் போட்டியிட்ட அடுத்தடுத்த தேர்தலில் எதிரொலிக்க தொடங்கியது. மிக குறைந்த வாக்குகள் பெற்று 'ஜெய் சமகியாந்திரா சமதி' கட்சியின் வேட்பாளர்கள் அனைத்து தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்தனர். எனவே என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த கிரண் குமார் கடந்த 2018ம் ஆண்டு மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்த இணைவு என்னமோ பேருக்குதான் இருந்தது.

மீண்டும் காங்கிரஸ்
ஏனெனில் காங்கிரஸ் சார்பில் எவ்வித பெரிய இயக்கங்களையும், போராட்டங்களையும் இவர் முன்னெடுத்து செல்லவில்லை. இந்நிலையில்தான் கடந்த சில நாட்களாக பாஜக முக்கிய புள்ளிகளுக்கும் இவருக்கும் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது. இந்த விஷயம் வெளியில் தெரிய வந்த நிலையில், அவர் விரைவில் பாஜகவில் சேருவார் என்று சொல்லப்பட்டது. இந்த கருத்துகளுக்கு வலு சேர்க்கும் விதமாக கடந்த 11ம் தேதி காங்கிரஸ் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக கிரண் குமார் அறிவித்துள்ளார். இது தொடர்பாக கட்சி தலைமைக்கு அவர் எழுதியுள்ள கடிதம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

புது திட்டம்
மறுபுறம், இவர் என்னதான் பாஜகவில் வந்து சேர்ந்தாலும் முக்கிய பொறுப்புகள் எதுவும் வழங்கப்படாது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில் முதலமைச்சராக இருந்தபோதே கட்சியின் கட்டுப்பாட்டிற்குள் வராமல் பதவியை தூக்கியெறிந்ததுதான் இதற்கு காரணம் என்று சுட்டிக்காட்டப்படுகிறது. ஆனால், இவருக்கு தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்படுமா? அல்லது மாநில அளவில் பொறுப்பு வழங்கப்படுமா? என்பதே பெரிய கேள்வியாக இருப்பதாக கிரண் குமாரின் ஆதரவாளர்கள் கூறியுள்ளனர். இவர் விரைவில் மத்திய உள்துறை அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.












Click it and Unblock the Notifications