வரி ஏய்ப்பு வழக்கு: கலாநிதி மாறன் ஆஜராக டெல்லி கோர்ட் மீண்டும் உத்தரவு
டெல்லி: ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்துக்கு எதிரான வருமான வரி வழக்கில் அதன் முன்னாள் தலைவர் கலாநிதி மாறன் செப்டம்பர் 21-ந் தேதி ஆஜராக டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் 2013-14, 2014-15 ஆகிய நிதியாண்டுகளில் ஊழியர்களிடம் பிடித்தம் செய்த வரித் தொகையை வருமான வரித் துறைக்கு முறைப்படி செலுத்தவில்லை. அதாவது 2013-14 நிதியாண்டில் ரூ. 110.6 கோடி, 2014-15 நிதியாண்டில் ரூ. 36.5 கோடி அளவுக்கு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த தொகையை ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் வருமான வரித் துறைக்கு செலுத்தவில்லை என்பது புகார்.

இதையடுத்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனத் தலைவராக இருந்த கலாநிதி மாறன், மேலாண் இயக்குநராக இருந்த எஸ்.நடராஜன் ஆகியோருக்கு எதிராக டெல்லி பெருநகரக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வருமான வரித் துறை வழக்குத் தொடுத்தது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது வருமான வரித் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரிஜேஷ் சிங், இந்த வழக்கில் சம்மன் பெற்றுக் கொண்டது பற்றிய விவரம் இதுவரை கிடைக்கவில்லை. குற்றம் சாட்டப்பட்டுள்ள கலாநிதி மாறன், நடராஜன் ஆகியோர் தரப்பில் இருந்தும் யாரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றார்.
இதையடுத்து நீதிபதி பிரீதம் சிங், சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் கிடைக்காமல் இருக்கலாம். எனவே இருவரும் வரும் செப்டம்பர் 21-ந் தேதி ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications