"எல்லாமே பொய்..அரசியல் சுயநலம்.. சந்திரபாபு நாயுடு சிக்குவார்.." திருப்பதி லட்டு சர்ச்சை! ரோஜா பகீர்
அமராவதி: ஆந்திராவில் தனது சுய லாபத்திற்காகத் திருப்பதி லட்டின் புனிதத் தன்மையைக் கெடுக்கும் வகையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு செயல்பட்டுள்ளதாக நடிகை ரோஜா சாடியுள்ளார். மேலும், எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் லட்டு குறித்த குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக விமர்சித்த அவர், இதில் சிபிஐ விசாரணைக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.
நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற கோயில் தான் திருப்பதி ஏழுமலையான் கோயில். உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திருப்பதிக்கு வருவார்கள்.

திருப்பதி லட்டு: அப்படி திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்குப் பிரசாதமாக லட்டு வழங்கப்படும். இந்த லட்டு குறித்தே சமீபத்தில் மிகப் பெரிய சர்ச்சை வெடித்தது. அதாவது இந்த லட்டு செய்யப் பயன்படுத்தப்படும் நெய்யில் மாட்டு கொழுப்பு, மீன் எண்ணெய் இருந்ததாகச் சர்ச்சை எழுந்தது. சமீபத்தில் நடந்த எம்எல்ஏ கூட்டத்தில் முதலில் இந்த புகார்களை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு எழுப்பினர்.
அதைத் தொடர்ந்து அவரது கட்சியினர் இது தொடர்பான ஆய்வக ரிப்போர்ட்டையும் வெளியிட்டனர். இது நாடு முழுக்க பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இந்தச் சம்பவத்திற்குப் பலரும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், உரிய விசாரணை எடுத்துத் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்தனர்.
ஜெகன்மோகன்: அதேநேரம் இந்த விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு தரப்பு ஜெகன்மோகன் ரெட்டியை குற்றஞ்சாட்டியது. ஜெகன்மோகன் அரசு எடுத்த நடவடிக்கைகளே இதற்குக் காரணம் என்று சந்திரபாபு தரப்பு சாடியது. இருப்பினும் இந்தக் குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக மறுத்த ஜெகன்மோகன் ரெட்டி, எந்தவொரு தவறும் நடக்கவில்லை என்றே கூறினர்.
இந்த விவகாரத்தில் இப்போது ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் பிரமுகரும் முன்னாள் அமைச்சருமான நடிகை ரோஜா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். திருப்பதி லட்டின் புனிதம் கெடும் வகையில் வெறும் சுய லாபத்திற்காக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்த வீண் பழி சுமத்தியிருப்பதாக ரோஜா ட்விட்டரில் வீடியோ வெளியிட்டு விமர்சித்துள்ளார். மேலும், உச்ச நீதிமன்றம் சென்ற பிறகே ஆந்திர அரசின் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை தொடங்கி இருப்பது என்பது பொய்யை மறைக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்றும் அவர் சாடியுள்ளார்.
பரபர குற்றச்சாட்டு: இது குறித்து அவர் வீடியோவில் மேலும் கூறுகையில், "ஆந்திர முதல்வர் பொறுப்பில் இருப்பவர் சந்திரபாபு நாயுடு.. இந்த முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் லட்டு விவகாரத்தில் தவறு நடந்ததா இல்லையா என விசாரிக்காமல்.. எந்தவொரு சாட்சியும் இல்லாமல் இந்த புகாரைச் சொல்லி இருக்கிறார். ஜெகன்மோகன் ரெட்டி மீது பழி சுமத்த வேண்டும் என்றே ஒரே தீய எண்ணத்தில் லட்டு விவகாரத்தை எழுப்பியது இப்போது அம்பலம் ஆகியுள்ளது.
இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்திற்குச் செல்லும் வரை எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. இதை உச்ச நீதிமன்றம் விசாரிக்கும் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரே சந்திரபாபு நாயுடு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தார். சரியான முறையில் விசாரணை நடந்தால் தனது பொய்கள் அம்பலமாகிவிடும் என்பதால் அதை மறைக்கவே இப்போது சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளார்.
பொய்கள்: லட்டு சர்ச்சை குறித்து சிபிஐ விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை வெளிச்சத்திற்கு வரும். உச்ச நீதிமன்ற விசாரணையில் நிச்சயம் சந்திரபாபு நாயுடு பொய்கள் தெரிய வரும். அப்படி உண்மைகள் தெரிய வரும் போது பொய் சொன்னவர்கள் யாராக இருந்தாலும்.. எந்த பதவியில் இருந்தாலும் கண்டிப்பாகத் தண்டிக்கப்பட வேண்டும்" என்று அதில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications