அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி.. மத்திய அரசின் திடீர் சர்ப்ரைஸை பாருங்க.. 22ம் தேதி மதியானமாம்.. சூப்பர்ல
கான்பூர்: அயோத்தியில் வருகிற 22ம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப்பணிகள் முடிவடைந்துள்ளன. 54,700 சதுர அடி பரப்பளவில் 360 அடி நீளமும் 235 அடி அகலமும், தரையில் இருந்து 16.5 அடி உயரமும் கொண்டது இந்த கோயில்.

விவிஐபிகள்: நம்முடைய பின் இந்தியாவில் கட்டப்படும் மிகப் பிரம்மாண்டமான முதல் திருக்கோயில் இதுதான் என்பது கூடுதல் பெருமையாகும். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக பிரமுகர்கள் மற்றும் இந்தியா முழுவதுமுள்ள விவிஐபிக்கள் பலரும் பங்கேற்க உள்ளனர்.
இதனை முன்னிட்டு உ.பி.அரசு பக்தர்களின் வசதிக்காகவும் பாதுகாப்பிற்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், அயோத்தி நகருக்கு ரயில் சேவை, விமான சேவையும் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது... காரணம், கும்பாபிஷேக பணிகள் உட்பட பாதுகாப்பு பணிகளையும் கவனித்து வருவதே உபி முதல்வர் யோகிதான்.
அறிவிப்பு : இந்நிலையில், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, அதாவது வருகிற 22-ம் தேதி அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும் அரை நாள் விடுமுறை அளிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவித்திருக்கிறார்.. மக்களின் நம்பிக்கை உணர்வுகளைக் கருத்தில் கொண்டு அலுவலகத்தை அரை நாள் மூடுவது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர், "அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் சிலை பிரதிஷ்டை விழா இந்தியா முழுவதும் 22 ஜனவரி கொண்டாடப்படும். இந்த கொண்டாட்டங்களில் ஊழியர்கள் பங்கேற்க ஏதுவாக, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள், மத்திய நிறுவனங்கள் மற்றும் மத்திய தொழில் நிறுவனங்கள் அனைத்தும் ஜனவரி 22, 2024 அன்று 2.30 மணி மூடப்படும். இது தொடர்பான உத்தரவு அனைத்து மத்திய அரசின் அமைச்சகங்கள் / துறைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது" என்றார்.
அதேபோல, கோயில் திறப்பு விழா நிகழ்ச்சியில் ஊழியர்கள் கலந்துகொள்ளும்விதமாகவும், டிவி உள்ளிட்டவற்றில் நிகழ்ச்சியை நேரலையில் காணவும் வசதியாகவும், அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
பிரபலங்கள்: ஜனவரி 22ம் தேதி பகல் 12.20 மணிக்கு ராமர் கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளதால், இந்த நிகழ்வில் பிரதமர் மோடி முதல் பல்வேறு முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர். அன்றைய தினம் நாடு முழுக்க பல பகுதிகளில் இருந்தும் பொதுமக்களும் அயோத்திக்கு வருகை தர உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, பார் கவுன்சில், புதன்கிழமை சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு எழுதிய கடிதத்தில், ஜனவரி 22 ஆம் தேதி விடுமுறை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தது.
கடிதம்: அந்த கடிதத்தில், "அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோயிலின் திறப்பு விழா 2024 ஜனவரி 22 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த நிகழ்வு நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு மகத்தான மத, வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது,
இது நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட கனவை நனவாக்குவதையும், நாட்டின் கட்டமைப்பை வரையறுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் சட்ட நடவடிக்கைகளின் உச்சத்தையும் குறிக்கிறது" என்று இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications