மாயமான நிலக்கரி கோப்புகளில் சில சிபிஐயிடம் ஒப்படைப்பு! முக்கிய ஆவணங்கள் அழிப்பு?
டெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் மாயமான கோப்புகள் சிலவற்றை சிபிஐயிடம் மத்திய அரசு ஒப்படைத்திருக்கிறது. ஆனால் ஒப்படைக்கப்பட்ட கோப்புகளில் முக்கியமானவை எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
மத்திய அரசு நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் தவறான முறையை கடைபிடித்ததால் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது என்பது கணக்கு தணிக்கை குழுவின் அறிக்கை. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.

காணாமல் போன கோப்புகள்
இந்த விசாரணையின் போது சிபிஐ கோரிய முக்கிய கோப்புகளைக் காணவில்லை என்று மத்திய அரசு கையை விரித்தது. இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் நாடாளுமன்றமும் முடங்கியது.

உச்சநீதிமன்றம் உத்தரவு
இந்நிலையில் மாயமான கோப்புகளைத் தேடிக்கண்டுபிடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்காக 2 வார கால அவகாசமும் அளிக்கப்பட்டது.

ஸ்ரீவஸ்தவா குழு
இதையடுத்து கோப்புகளைக் கண்டு பிடிக்க நிலக்கரித்துறை அமைச்சக செயலாளர் எஸ்.கே.ஸ்ரீவஸ்தவா தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

தேடுதல் நடவடிக்கை
இந்த குழுவினர் சி.பி.ஐ. யுடன் இணைந்து நிலக்கரித்துறை அமைச்சகம், பிரதமர் அலுவலகம், தொழில் கொள்கை துறை ஆகிய இடங்களில் சோதனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து கிடைத்த சில கோப்புகள் மட்டும் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

அம்பானி, டாடா கோப்ப்புகள் அழிப்பு?
ஆனால் அதில் முக்கியமான கோப்புகள் இல்லை என்று சிபிஐ தரப்பில் கூறப்படுகிறது. குறிப்பாக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் பவர், டாடா நிறுவனம், ரதி ஸ்டீல்ஸ்-பவர் போன்றவை தொடர்பான கோப்புகள் மாயமாகி இருக்கின்றன.

புதிய வழக்கு?
அனேகமாக பெரிய நிறுவனங்களுக்கான நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான கோப்புகள் அழிக்கப்பட்டிருக்கலாம் என்றும் சிபிஐ தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது. இதனால் இது தொடர்பாக புதிய வழக்கை பதிவு செய்யவும் சிபிஐ திட்டமிட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications