கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை.. குஜராத் சமண துறவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு!
சூரத்: 19 வயது பெண் சீடரான கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் திகம்பர சமண முனிவர் சாந்தி சாகருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது சூரத் நீதிமன்றம். ரூ.25,000 அபராதமாக செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள திமாலியாவாத் பகுதியில் இருக்கும் ஜெயின் ஆலயத்தில் துறவியாக இருந்தவர் சாந்தி சாகர் (57). ஜெயின் துறவி சாந்தி சாகரின் பிரசங்கத்தைப் பார்ப்பதற்காக அந்த தர்மசாலாவுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 1 அன்று வதோதராவில் இருந்து ஒரு குடும்பத்தினர் கல்லூரியில் படித்து வந்த தங்களது 19 வயது பெண்ணுடன் சென்றிருந்தனர்.

அப்போது, பிரசங்கம் இரவில்தான் நடக்கும் என்று தெரிவித்த சாந்தி சாகர் அவர்களை அங்கு தங்குமாறு கூறியிருக்கிறார். அந்தக் குடும்பத்தினரிடம் சடங்குகளைச் செய்வதாகக் கூறி அவர்களை சந்தனமரக் கட்டைகளால் சூழப்பட்ட வட்டத்திற்குள் அமரச் செய்த சாந்தி சாகர் மந்திரங்களை உச்சரிக்குமாறும் தன்னுடைய அனுமதியின்றி வெளியே வரக்கூடாது என்றும் கூறி உள்ளார்.
பின்னர் அந்த கல்லூரி மாணவியை மட்டுமே தனியே அழைத்துச் சென்ற அவர், தன்னை ஒரு நண்பனைப் போல நினைத்துக் கொண்டு பூஜை செய்வதற்காக நிர்வாணமாக புகைப்படம் எடுத்து அனுப்புமாறு கூறியுள்ளார்.
பின்னர், அந்தப் பெண்ணின் பெற்றோர் மற்றும் சகோதரருக்கு தனித்தனியே அறை அமைத்துக் கொடுத்த சாந்தி சாகர் அந்தப் பெண்ணை தனி அறைக்கு அழைத்துச் சென்று "உன் பெற்றோர் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்தாயா? நான் சொல்வதைக் கேட்காவிட்டால் அவர்கள் இறந்துவிடுவார்கள்" எனக் கூறி மிரட்டி உள்ளார்.
பின்னர் அந்தப் பெண்ணை அறையில் அடைத்து வைத்து மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். தான் எப்போது அழைத்தாலும் வரவேண்டும் என்றும் கூறி மிரட்டி உள்ளார். பின்னர் அந்தக் குடும்பத்தினர் சூரத்தில் இருந்து வதோதராவுக்கு கிளம்பி உள்ளனர்.
பின்னர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதால் அந்தப் பெண்ணின் பிறப்புறுப்பு மற்றும் வயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் சாந்தி சாகர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததை வெளியே கூறியதைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சாந்தி சாகர் அதே ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து, ஜனவரி 9, 2018 அன்று சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் காவல்துறையினர் குற்றப்பத்திரிகையை சமர்ப்பித்தனர். அவர்கள் 51 சாட்சிகளின் வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர், மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் பாதிக்கப்பட்டவரின் மருத்துவச் சான்றிதழ்கள் மற்றும் சிசிடிவி காட்சிகள் உட்பட 62 ஆவண ஆதாரங்களைச் சமர்ப்பித்தனர். பல ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்த சாந்தி சாகரின் மொபைல் போனும் சமர்ப்பிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம், மருத்துவ அறிக்கை, 32 சாட்சிகளின் வாக்குமூலம் ஆகியவற்றின் மூலம் துறவி சாந்தி சாகர் குற்றவாளி என்பது உறுதியானது. இந்த நிலையில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு சூரத் மாவட்ட கூடுதல் நீதிமன்றம் சாந்தி சாகருக்கு இன்று 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
மேலும், ரூ.25,000 அபராதமாக செலுத்தவும் சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் சாந்தி சாகர் சிறையில் இருப்பதால் அவருக்கு இன்னும் இரண்டரை ஆண்டுகள் மட்டுமே சிறைத் தண்டனை மீதமுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
