ராஜபுத்திரர்களின் அடங்கா கோபம்.. குஜராத்தில் மீண்டும் வெடிக்கும் ஜாதி படுகொலைகள்.. பாஜக கதறுவது ஏன்?
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் 25 லோக்சபா தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 7-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. பாஜகவின் பிரதான வாக்கு வங்கிகளில் ஒன்றான ராஜப்புத்திரர் ஜாதியினர் அக்கட்சி மீது கட்டுக்கடங்காத கோபத்தில் இருப்பதால் ஒட்டுமொத்த பாஜகவும் மிகவும் மிரண்டு போயிருக்கிறது என்கின்றன கள தகவல்கள்.
குஜராத்தில் பெரும்பான்மை ஜாதிகளில் முக்கியமானவை பட்டேல்கள் மற்றும் ராஜபுத்திரர்கள். 1980களில் இருந்தே பட்டேல்கள், ராஜபுத்திரர்களிடையேயான ஜாதி படுகொலைகள் உக்கிரமாக நடைபெற்று வருகின்றன. காங்கிரஸுக்குப் பின்னர் குஜராத்தை பாஜக கோட்டையாக கைப்பற்றுவதற்கு இந்த இரு ஜாதிகளும் ஒருசேர பாஜகவுக்கு ஓட்டுப் போட்டு வருவதுதான். இதனால் பட்டேல்கள், ராஜபுத்திரர்கள் இடையேயான மோதல்கள் சற்று அடங்கி நீருபூத்த நெருப்பாகவே இருந்து வந்தது.

தற்போதைய லோக்சபா தேர்தலில் குஜராத்தின் 26 தொகுதிகளையும் அப்படியே பாஜக மொத்தமாக 3- வது முறையாக கைப்பற்றும் என கருத்து கணிப்புகள் தெரிவித்தன. இதன் முன்னோட்டமாக சூரத் தொகுதியில் போட்டியில்லாமல் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றார்.
இந்தப் பின்னணியில் ராஜ்கோட் தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா (பர்சோட்டம் ரூபாலா), " ஆங்கிலேயர்களுடன் இணைந்து செயல்பட்டவர்கள் ராஜபுத்திர அரசர்கள். ஆங்கிலேயர்களுக்காக தங்களது வீட்டுப் பெண்களை திருமணம் கூட செய்து கொடுத்தவர்கள் ராஜபுத்திரர்கள். ஆனால் பட்டேல்கள் அத்தகைய செயல் எதனையும் செய்யவும் இல்லை. மதமும் மாறவில்லை என பேசியிருந்தார். மத்திய அமைச்சர் பர்சோத்தம் ரூபாலாவின் இந்த பேச்சு ஒட்டுமொத்த வட இந்திய ராஜபுத்திரர்களையும் கொந்தளிக்க வைத்துவிட்டது. கடந்த சில வாரங்களாக வட இந்தியா முழுவதும் பல லட்சக்கணக்கான ராஜபுத்திரர்கள் பாஜகவுக்கு எதிராக ஒன்று திரண்டு, பாஜகவுக்கு பாடம் புகட்டுவோம் என எச்சரித்து வருகின்றனர்.
ராஜபுத்திரர்களின் கட்டுக் கடங்காத கோபம் பாஜகவை ரொம்பவே கதற வைத்துவிட்டது. மத்திய அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா தொடர்ந்து மன்னிப்பு கேட்டுக் கொண்டே இருக்கிறார். ஆனால் ராஜபுத்திரர்களோ விட்டுக் கொடுப்பதாக இல்லை; கோபத்தை தணிக்கவும் இல்லை. மத்திய அமைச்சர் பர்சோத்தம் ரூபாலாவை பாஜக திரும்பப் பெற வேண்டும் என்பதுதான் ராஜபுத்திரர்களின் கோரிக்கை. இதனை பாஜக மேலிடம் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதால் தேர்தலை எதிர்கொள்ளும் 25 தொகுதிகளிலும் பாஜகவை ஒழிக்காமல் விடமாட்டோம் என சபதம் எடுத்திருக்கின்றனர் ராஜபுத்திரர்கள். ராஜ்கோட்டில் ராஜபுத்திரர்கள் நடத்திய மிக பிரம்மாண்ட பேரணி, இந்தியாவின் எந்த மாநிலத்திலுமே பாஜகவுக்கு ராஜபுத்திரர்கள் வாக்களிக்கவே கூடாது என்கிற தீர்மானங்கள்தான் இப்போது பாஜகவின் தூக்கத்தைக் கெடுத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications