வீட்டு டாய்லெட்டுக்கு மாதம் ரூ.25 வரி.. நிர்மலா சீதாராமன் போட்ட போடு! காங்கிரஸ் முதல்வர் பல்டி
சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் நகர்ப்புறங்களில் உள்ள வீடுகளில் இருக்கும் ஒவ்வொரு டாய்லெட்டுக்கும் மாதம் ரூ.25 வரி வசூலிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இது கடும் சர்ச்சையான நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்பட பலரும் இமாச்சல பிரதேச முதல்வர் சுக்வீந்தர் சிங் சாகுவை கடுமையாக விளாசினர். இதனால் சிக்கலில் மாட்டிய சுக்வீந்தர் சிங் சாகு, கழிவறைக்கு வரி விதிக்கும் முறை அமல்படுத்துவதாக கூறுவது அடிப்படை ஆதாரமற்றது என ‛அந்தர்பல்டி’ அடித்துள்ளார்.
இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சுக்வீந்தர் சிங் சாகு செயல்பட்டு வருகிறார். இந்த மாநிலம் தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் அரசுக்கு கிடைக்கும் வரியை அதிகரிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி புதிய வரி விதிப்பு மற்றும் ஏற்கனவே இருக்கும் வரிகளில் உயர்த்துவது மற்றும் தேவையில்லாத செலவுகளை குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை முதல்வர் சுக்வீந்தர் சிங் சாகு மேற்கொண்டு வருகிறார். இது பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தினாலும் கூட நிதி நெருக்கடியில் இருந்து மீண்டு வர இமாச்சல் அரசுக்கு வேறு வழி எதுவும் இல்லை.
இநு்நிலையில் தான் இமாச்சல பிரதேசத்தில் ‛டாய்லெட்டுக்கு வரி’ விதிக்கப்படுவதாக ஒரு அறிவிப்பு என்பது வெளியானது. அதாவது ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் எத்தனை கழிப்பறைகள் வைத்துள்ளனரோ, அத்தனைக்கும் வரி செலுத்த வேண்டும் என்பதுதான் அந்த அறிவிப்பு. இது நகர்ப்புறங்களுக்கு மட்டும் பொருந்தும். அதன்படி ஒரு டாய்லெட்டுக்கு மாதம் ரூ.25 வரியாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. .
அதேபோல் குடிநீர் மற்றும் வடிகால் வரியாக மாதம் ரூ.100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ‛டாய்லெட் வரி’யை குடிநீர் மற்றும் வடிகால் வரியுடன் சேர்த்து மாதந்தோறும் செலுத்த வேண்டும். அந்த தொகை ஜல்சக்தி துறைக்கு செலுத்தப்படும். இந்த வரி விதிப்பு முறை அக்டோபர் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பை காங்கிரஸ் தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் நிலையில் காங்கிரஸ் அரசின் இந்த நடவடிக்கையை பாஜகவினர் விமர்சிக்க தொடங்கினர். இதுபற்றி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமது எதிர்ப்பை எக்ஸ் பக்கத்தில், ‛‛நம்பவே முடியவில்லை, இது உண்மைதானா? பிரதமர் மோடி நாடு முழுவதும் தூய்மை இந்தியா என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளார். ஆனால், காங்கிரஸ் அரசு கழிப்பறைகளுக்கான கட்டணத்தை கொண்டு வந்திருக்கிறது. நாட்டுக்கு மிகவும் அவமானமான ஒன்று’’ என விமர்சித்து இருந்தார்.
இது இமாச்சல பிரதேச காங்கிரஸ் அரசுக்கும், முதல்வர் சுக்வீந்தர் சிங்கிற்கும் பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. இதையடுத்து தான் சுக்வீந்தர் சிங் அந்தர்பல்டி அடித்துள்ளார். அதோடு டாய்லெட்டுக்கு வரி விதிக்க உள்ளதாக வெளியான தகவலை முற்றிலுமாக அவர் மறுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: ‛‛ஒரு கடும்பத்தின் குடிநீர் இணைப்புக்கு ரூ.100 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதுவும் கட்டாயம் அல்ல. டாய்லெட்டுக்கு வரி என்பது விதிக்கப்படவில்லை. அதுதொடர்பாக வெளியான தகவல் அடிப்படை ஆதாரமற்றது’’ என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications