"யாருப்பா நீ.." ரூ 90,000 ஸ்கூட்டிக்கு.. ஒரு கோடி செலவு செய்து பேன்சி நம்பர்! ஸ்டன் ஆன அதிகாரிகள்
தனது டூவிலருக்காக ஒரு கோடி ரூபாய் செலவழித்து பேன்சி எண்ணை ஒருவர் வாங்கியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் 90 ஆயிரம் மதிப்பிலான ஸ்கூட்டிக்கு ஒரு கோடி ரூபாய் செலவழித்து பேன்சி எண்ணை ஒருவர் வாங்கியது பேசுபொருள் ஆகியுள்ளது. இந்த எண்ணுக்கு ஆரம்ப ஏல தொகை வெறும் ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
நமது நாட்டில் சாலைகளில் இயக்கப்படும் அனைத்து வாகனங்களையும் நிச்சயம் பதிவு செய்திருக்க வேண்டும். இதற்கு அனைத்து மாநிலங்களும் குறிப்பிட்ட தொகையை தனியாக கட்டணமாகவும் வசூலிக்கின்றன.
அதேநேரம் பல மாநிலங்கள் பேன்சி நம்பர்களை தனியாக ஏலமும் விடுகின்றன. பேன்சி நம்பர்களை பேர விரும்பும் நபர்கள் இதுபோன்ற ஏலத்தில் பங்கேற்று பிடித்த பேன்சி நம்பரை ஏலம் எடுத்துக் கொள்ளலாம்.

வாகனம்
அப்படிதான் இமாச்சல பிரதேசத்திலும் வாகன எண் ஒன்றுக்கு ஏலம் நடந்தது.. இதில் தான் வினோதமான ஒரு சம்பவம் நடந்தது. இமாச்சலப் பிரதேசத்தில் HP-99-9999 என்ற எண்ணுக்கு ஏலம் நடந்துள்ளது. இதில் பலரும் கலந்து கொண்ட நிலையில், ஒருவர் ரூ. 1.12 கோடிக்கு இந்த எண்ணை ஏலம் எடுத்துள்ளார். இதில் என்ன பெரிய விஷயம் என்றால்.. அவர் ஏலம் எடுத்தது சொகுசு காரு இல்லை. அவருடைய ஸ்கூட்டிக்காக.. ஆம்.. ஸ்கூட்டிக்காக தான் அவர் ரூ. 1.12 கோடிக்கு ஆடம்பர பதிவு எண்ணை ஏலம் எடுத்துள்ளார்.

ஒரு கோடி ரூபாய்
சிம்லா மாவட்டத்தில் தான் பதிவு எண்ணுக்கு ஏலம் நடந்தது. இமாச்சல பிரதேச போக்குவரத்துத் துறை சார்பில் நடந்த ஏலத்தில், குறிப்பிட்ட அந்த எண்ணுக்கான ஏலம் விறுவிறுப்பாக நடந்துள்ளது. ஏலம் ஒரு கட்டத்தில் ஒரு கோடி ரூபாயை தாண்டி சென்றுள்ளது. அப்போது தரம்வீர் என்பவர் தனது டூவிலருக்காக ஒரு கோடி ரூபாய்க்கும் சஞ்சய் குமார் என்பவர் தனது 4 சக்கர வாகனத்திற்காக 1.11 ரூபாய்க்கும் இந்த எண்ணை ஏலம் கேட்டுள்ளார். இருவரையும் ஓவர்டேக் செய்து தேஷ்ராஜ் என்பவர் 1.12 கோடிக்கு இந்த எண்ணை ஏலம் எடுத்துள்ளார்.

விசாரணை
இதுதவிர இன்னும் சில பேன்சி எண்களும் ஏலம் விடப்பட்டுள்ளது. இருப்பினும், இதுவரை இமாச்சல் பிரதேச போக்குவரத்து துறை அவர்களுக்கு எண்களை ஒதுக்கவில்லையாம். பேன்சி எண்களை ஏலம் எடுத்தவர்களின் சான்றுகளை சரிபார்க்கும் பணிகளில் இப்போது வருமான வரித்துறை மற்றும் மாநில போக்குவரத்து அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஏலம் எடுத்த நபர் குறித்த விரிவான தகவல்களையும் அவரது பின்னணி குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

90 ஆயிரம் ரூபாய் ஸ்கூட்டி
அவர் அனைத்து தகவல்களையும் சமர்ப்பித்தால் அவருக்கு அந்த எண் ஒதுக்கப்படும். 90 ஆயிரம் மதிப்பிலான ஸ்கூட்டிக்கு இந்த நபர் ஒரு கோடி மதிப்பிலான பேன்சி எண்ணை வாங்கியது பேசுபொருள் ஆகியுள்ளது. இந்த எண்ணுக்கு ஆரம்ப ஏல தொகை வெறும் ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இருப்பினும், பலரும் இதை தொடர்ந்து ஏலம் கேட்கவே.. அது மெல்ல மெல்ல அதிகரித்து ஒரு கோடியை தாண்டியுள்ளது.

விதிகள்
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "இப்போது நாங்கள் ஏலத்தை நிறுத்தியுள்ளோம்.. ஏலதாரர்கள் குறிப்பிடப்பட்ட தொகையில் குறைந்தபட்சம் 30% டெபாசிட் செய்ய வேண்டும்.. அப்போது தான் எங்களால் அவர்களுக்கு எண்களை ஒதுக்கீடு செய்ய முடியும்" என்றார்.. தற்போது அங்குள்ள விதிமுறைகளின்படி, ஏலம் எடுக்கும் முன்பு யாரும் எந்தவொரு தொகையையும் டெபாசிட் செய்ய தேவையில்லை..

அதிகாரிகள் தகவல்
இதனால் சும்மா விளையாட்டிற்கு கூட இப்படி அவர்கள் இஷ்டத்திற்கு ஏலம் கேட்டிருக்கலாம் என்றும் சில அதிகாரிகள் சந்தேகிக்ன்றனர். அவர் மேலும் கூறுகையில், "ஏலம் எடுப்பவர்கள் நாட்டின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம்.. இருப்பினும், வாகனப் பதிவுக்காக அவர்கள் லோக்கல் ஐடியை காட்ட வேண்டும். அப்போது தான் எங்களால் அவருக்கு எண்ணை ஒதுக் முடியும்" என்றார்.












Click it and Unblock the Notifications