வெற்றி துரைசாமியின் நிலை என்ன? நதியில் பொம்மை அனுப்பி டெமோ! தேடும் பணியில் போலீசார் தீவிரம்
சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் விபத்தின் போது மாயமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியை தேடும் பணியில் 7வது நாளாக போலீசார், மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று வெற்றி துரைசாமியின் எடை, உயரத்திற்கு ஏற்ற பொம்மையை சட்லஜ் நதியில் விட்டு அது செல்லும் திசையை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
அதிமுக முன்னாள் நிர்வாகியும், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயருமான சைதை துரைசாமி. இவரது ஒரே மகன் வெற்றி துரைசாமி. 45 வயதான வெற்றி துரைசாமி தொழில் அதிபர் ஆவார். பிரபல இயக்குனர் வெற்றிமாறனிடம் பயிற்சி பெற்ற வெற்றி துரைசாமி, கடந்த 3 நாட்களுக்கு முன்பு இமாசல பிரதேசத்தில் உள்ள லடாக் பகுதிக்கு சுற்றுலா சென்றார். வெற்றி துரைசாமியுடன் அவரது உதவியாளரான கோபிநாத் என்பவரும் உடன் சென்றிருந்தார்.

சுற்றுலாவை முடித்து விட்டு சென்னை திரும்புவதற்காக நேற்று, வெற்றி துரைசாமி அங்குள்ள விமான நிலையத்துக்கு காரில் புறப்பட்டார். காரை டென்சின் என்பவர் ஓட்டினார். கார் கஷங் நாலா என்ற மலைப் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, டிரைவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கார் தாறுமாறாக ஓடி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சட்லஜ் ஆற்றுக்குள் கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்தவர்களும் படுகாயமடைந்தனர். மேலும், காரின் சக்கரங்கள் நீரில் இருந்து வெளியே தெரிந்ததன் காரணமாகவே இந்த விபத்து வெளியில் தெரிந்துள்ளது. அதாவது அந்த வழியாக சுற்றுலா சென்றவர்கள் தான் கார் ஏதோ தண்ணீருக்குள் கிடப்பதாக பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்து இருக்கின்றனர்.
இதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் அந்த காரை மீட்ட போது அதில் ஓட்டுநர் டென்சின் சடலமாக மீட்கப்பட்டார். கார் விழுந்த வேகத்தில் கீழே விழுந்த கோபிநாத் காயங்களுடன் மீட்கப்பட்டார். அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். எனினும், காரில் பயணம் செய்த வெற்றியின் நிலை என்ன என்பதுதான் தெரியவில்லை.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆற்றங்கரையில் இருந்து மனித உடலின் மூளை பகுதி மீட்டெடுக்கப்பட்டது. இந்த பகுதி டி.என்.ஏ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. எனினும் இன்னொரு புறம் இமாசல பிரதேச போலீசார் மற்றும் மீட்பு படையின் தண்ணீரில் மூழ்கி தேடும் பயிற்சி பெற்றவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
என்.டி.ஆர்ப், ஐடிபிபி, ஊர்க்காவல் படை, காவல்துறையினர் உள்ளிட்டோரும் காவல்துறையினருடன் சேர்ந்து தேடி வருகின்றனர். இந்த நிலையில் இன்றும் 7வது நாளாக மீட்பு பணியில் ஈடுபட்ட போலீசார், வெற்றி துரைசாமியின் எடை, உயரத்திற்கு ஏற்ற பொம்மையை சட்லஜ் நதியில் விட்டு அது செல்லும் திசையை வைத்து தேடி வருகின்றனர். இதற்காக வெற்றி துரைசாமியிம் உயரம், எடை கொண்ட ஒரு பொம்மையை ஏற்பாடு செய்து இதனை சட்லஜ் ஆற்றில் வீசி அந்த பொம்மை செல்லும் திசையை வைத்து கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications