ஹோலி கொண்டாட்டத்திற்காக சிறப்பு ஆரத்தி! கோயில் கருவறையில் பற்றிய தீ! 14 பேர் படுகாயம்! ம.பியில் ஷாக்
போபால்: நாடு முழுவதும் ஹோலி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜயினியில் உள்ள மஹாகாலேஷ்வர் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டிருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹோலி பண்டிகையை கொண்டாடும் விதமாக இன்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக 'பஸ்ம ஆரத்தி' எடுக்கப்பட்டது. கற்பூரங்கள் நிரம்பிய பெரிய விளக்கை கொண்டு எடுக்கப்படும் ஆர்த்தியை பஸ்ம ஆரத்தி என சொல்லப்படுவதுண்டு. இந்த ஆரத்தியின்போது கற்பூரம் தவறி விழுந்து தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதிகாலை 5.50 மணிக்கு இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாக உஜ்ஜைன் ஆட்சியர் நீரஜ் குமார் சிங் கூறியுள்ளார்.

இந்த விபத்தில் 14 பூசாரிகள் காயமடைந்துள்ளனர். அவர்களில் பலர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எட்டு பேர் மட்டும் மேல்சிகிச்சைக்காக இந்தூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. பஞ்சாயத்து தலைமை நிர்வாக அதிகாரி மிருணாள் மீனா மற்றும் கூடுதல் ஆட்சியர் அனுகூல் ஜெயின் ஆகியோர் விசாரணை நடத்தி 3 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்வார்கள்.
விபத்து வேதனையளிப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். அதாவது, "உஜ்ஜயினியின் மஹாகாலேஷ்வர் கோயிலில் நடந்த விபத்து மிகவும் வேதனை அளிக்கிறது. இதில் காயமடைந்த பக்தர்கள் அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உள்ளூர் நிர்வாகம் மாநில அரசின் மேற்பார்வையின் கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது" என்று தனது x தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஹோலி பண்டிகையின்போது கோயிலில் தீ விபத்து ஏற்பட்டு 14 பூசாரிகள் காயமடைந்திருப்பது மத்தியப் பிரதேசம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications