"ஜெகஜால கில்லாடி!" புருஷனை மாட்டிவிட எந்த எல்லைக்கும் சென்ற ஆர்த்தி.. 2ஆம் கணவரிடம் போய்.. அடப்பாவமே
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் தனது கணவரைப் போலீசிடம் மாட்டிவிட்ட மனைவி எந்த எல்லைக்கும் சென்றுள்ளார். இதில் என்ன வினோதம் என்றால் போலீசாரும் இதற்கு ஏமாந்துவிட்டனர்.
இந்தியாவில் மட்டுமின்றி உலகெங்கும் கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவுகள் ஏற்படுவது இயல்புதான். ஆனால், அதை அந்த தம்பதி எப்படி கையாள்கிறார்கள் என்பதை பொறுத்து அவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.
பல நேரங்களில் ஏதாவது சண்டை ஏற்பட்டால் சமாதானம் செய்ய உறவினர்கள் இருப்பார்கள். ஆனால், சில நேரங்களில் விஷயம் கையை மீறி சென்றுவிடும். சில மோசமான நிகழ்வுகளில் அது குற்றச் சம்பவமாகக் கூட மாறும் அபாயம் இருக்கிறது

வினோத சம்பவம்
அப்படித்தான் ஒரு வினோதமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு, உயிரிழந்துவிட்டதாகக் கருதிய பெண்ணை மீண்டும் அவரது முதல் கணவர் கண்டுபிடித்துள்ளார். அந்த பெண் தனது இரண்டாவது கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்த நிலையில், அந்த பெண்ணை கொலை செய்ததற்காக அந்த அப்பாவி முதல் கணவர் சுமார் 18 மாதங்கள் வரை சிறையில் இருக்கிறார். இரண்டு பெயர், இரண்டு ஆதார், இரண்டு பிறந்த தேதி, என அந்த பெண் போட்ட திட்டத்தில் போலீசார் கூட ஏமாந்துவிட்டனர் என்பதே உண்மை.

தந்தைக்கு தெரியாமல் திருமணம்
உத்தரப் பிரதேச மாநிலம் விருந்தாவனம் பகுதியைச் சேர்ந்தவர் ஆர்த்தி. கடந்த 2015ஆம் ஆண்டு அவர் ராஜஸ்தானின் கரௌலி எல்லையில் அமைந்துள்ள மெஹந்திபூர் பாலாஜி கோயிலுக்கு அவரது தந்தை சூரஜ் பிரகாஷ் குப்தாவுடன் சென்றிருந்தபோது சோனு சைனி என்ற இளைஞரைச் சந்தித்துள்ளார். அவர்களுக்கு இடையே பார்த்த உடன் காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் நீதிமன்றத்தின் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த திருமணம் நடந்தது ஆர்த்தியின் தந்தைக்குத் தெரியாது.

பணம், நிலம்
இதையடுத்து அந்த ஜோடி அதே விருந்தாவனம் பகுதியில் தனியாக வாடகைக்கு ஒரு வீட்டை எடுத்துள்ளனர். அப்போது சோனு பெயரில் இருந்த நிலத்தை ஆர்த்தி தனது பெயரில் மாற்றித் தரும்படி கேட்டுள்ளார். மேலும், பணத்தையும் கேட்டுள்ளார். திருமணம் செய்து கொண்டாலும் உடனே இப்படிக் கேட்டதால் சற்று தயங்கியுள்ளார் சோனு. ஆர்த்தியும் சில நாட்கள் தொடர்ந்து பணத்தையும் நிலத்தையும் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்துள்ளார். இதற்கு சோனு பதிலளிக்கவில்லை.

மாயம்
இதனால் கடுப்பான ஆர்த்தி, திருமணமான எட்டே நாட்களில் வீட்டை விட்டு யாரிடமும் சொல்லாமல் வெளியேறிவிட்டார். தன்னை திருமணம் செய்த பெண் திடீரென மாயமானதால் பதறிய சோனு எல்லா இடங்களிலும் அவரை தேடியுள்ளார். இருப்பினும், அவரால் அந்த பெண்ணை கண்டுபிடிக்கவே முடியவில்லை. இதனால் என்ன செய்வதென்ற புரியாமல் துக்கத்தில் இருந்துவிட்டார். அப்போது தான் மதுராவின் மகோரா கால்வாயில் ஒரு பெண்ணின் சடலத்தை அம்மாநில போலீசார் கண்டுபிடித்தனர். அந்தப் பெண்ணின் பிரேதப் பரிசோதனை செய்யப்படாததால், போலீஸார் அவரை தகனம் செய்துவிட்டனர்.

கொலை புகார்
இதற்கிடையே சுமார் 6 மாதங்கள் கழித்து ஆர்த்தியின் தந்தை போலீசாரிடம் வந்துள்ளார். தனது மகளை காணவில்லை என்றும் போலீசார் விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அப்போது மகோரா கால்வாயில் கண்டுபிடிக்கப்பட்ட சடலத்தின் போட்டோவையும் துணிகளையும் காட்டியுள்ளனர். இதைப் பார்த்த ஆர்த்தியின் தந்தை அது தனது மகள்தான் எனக் கதறி அழத் தொடங்கியுள்ளார். இதையடுத்து அந்த சடலம் ஆர்த்தியின் சடலம் என்ற முடிவுக்கு உபி போலீசார் வந்துவிட்டனர்.

கைது
இந்த விவகாரத்தில் விசாரணை நடத்திய போலீசார் ஆர்த்தியை சோனு திருமணம் செய்து கொண்டு சில நாட்கள் வாழ்ந்ததைக் கண்டுபிடித்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மனைவி மாயமானது குறித்து புகார் அளிக்காதது உள்ளிட்ட விஷயங்கள் அவருக்கு எதிராக திரும்பியுள்ளது. இதையடுத்து கடந்த 2016 கொலை குற்றத்திற்காக அவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவருக்கு உதவியதாக கோபால் சைனி என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் இருவரும் அதே பகுதியில் உணவகம் ஒன்றில் வேலை செய்து வந்தனர்.

செம கில்லாடி தான்
காணாமல் போன நபர் உயிரிழந்துவிட்டதாக நினைத்து. அவரை கொன்றது கணவன் தான் என நினைத்து அவரையும் கைது செய்துவிட்டது உத்தரப் பிரதேச போலீசார். கொலைக் குற்றத்திற்காக சோனுவுக்கு 18 மாதங்கள் சிறையும், அவருக்கு உதவியதற்கு கோபாலுக்கு 18 மாதங்கள் சிறையும் விதிக்கப்பட்டது. இதில் கொடுமை என்னவென்றால் இந்த கேஸை முடித்ததற்காகச் சம்மந்தப்பட்ட போலீசாருக்கு 15 ஆயிரம் ரூபாய் சன்மானமும் வழங்கப்பட்டது. தான் சொல்வதை யாரும் நம்பாததால் சோனு சிறையில் இருக்க நேர்ந்துள்ளது. இருப்பினும், சில மாதங்களில் சோனு, ஜாமீன் வாங்கி வெளியே வந்துவிட்டார். அதன் பின் அவர் சும்மா இருந்துவிடவில்லை.

விடிவு காலம்
தன்னை இப்படிச் சிக்கலில் சிக்கிவிட்ட ஆர்த்தியை கண்டுபிடிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். அதன்படி பல்வேறு இடங்களில் தேடி திரிந்த அவர், ஆறு ஆண்டுகள் கழித்து இப்போது ஒரு வழியாகக் கண்டுபிடித்துவிட்டார். அந்த பெண் தனது இரண்டாவது கணவருடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்துள்ளார். இதைக் கண்டுபிடித்த சோனு, மதுரா போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். அதன்படி போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இரண்டு பெயர், இரண்டு ஆதார், இரண்டு பிறந்த தேதி என பக்காவாக அந்தப் பெண் போட்ட திட்டத்தில் போலீசாரே ஏமாந்துவிட்டனர். இப்போது நியாயம் கிடைக்கும் என நம்பிக்கையில் உள்ளார் முதல் கணவர் சோனு..!












Click it and Unblock the Notifications