இந்தியாவை சப்தமில்லாமல் செல்லாய் அரிக்கும் புற்றுநோய்
டெல்லி: புற்றுநோயால் இரண்டு முறை பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்த அமித் வைத்யா என்பவர் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் ரசித்து வாழ்கிறார். இந்தியாவில் வசிக்கும் மக்களை புற்றுநோய் அதிக அளவில் தாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அமித் வைத்யா பொருளாதாரத்தில் பி.ஹெச்.டி. பட்டம் பெற்றுள்ளார். அவருக்கு இரண்டு முறை புற்றுநோய் ஏற்பட்டு குணமடைந்துள்ளார். அவர் ஹீலிங் வைத்யா என்ற என்ஜிஓவை துவங்கி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் உள்பட மக்களிடையே சுகாதாரம் பற்றிய தனது கருத்துகளை தெரிவித்து வருகிறார். இது குறித்து வைத்யா கூறுகையில்,
புற்றுநோயில் இருந்து குணமடைந்த பலர் அந்த வார்த்தையை கேட்டாலே ஓடுகிறார்கள். ஆனால் எனக்கு கிடைத்த இரண்டாவது வாழ்க்கையை நினைவூட்டும் விதமாக புற்றுநோய் என்ற வார்த்தையை பார்க்கிறேன். எனக்கு புற்றுநோய் ஏற்பட்ட இரண்டு முறையும் சிகிச்சை பெறும் போது பிற புற்றுநோயாளிகளுடன் நட்பு வைத்துக் கொண்டேன். அவர்கள் அனைவரும் இறந்துவிட்டனர் என்றார்.
இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

புற்றுநோய்
2004ம் ஆண்டில் 0.26 மில்லியன் பேர் புற்றுநோய்க்கு பலியாகினர், 0.82 மில்லியனுக்கும் மேற்பட்டோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். 2012ம் ஆண்டில் 0.7 மில்லியன் பேர் புற்றுநோயால் பலியாகினர், 1.8 மில்லியன் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்தியா
இந்தியாவில் வயிற்றுப்போக்கு, சுவாசப் பிரச்சனைகளை விட புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்தியாவில் புற்றுநோயின் பிடி நாளுக்கு நாள் இறுகி வருகிறது.

மார்பக புற்றுநோய்
1990ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரையிலான காலத்தில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 166 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே காலகட்டத்தில் கனைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 220 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் கருப்பை வாய் புற்றுநோயால் பலியானவர்களின் எண்ணிக்கை 123 சதவீதமும், வாய் புற்றுநோயால் இறந்த ஆண்களின் எண்ணிக்கை 134 சதவீதமும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் வாழ்க்கை முறை மாறியுள்ளதால் தான் புற்றுநோய் அதிக அளவில் ஏற்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கை முறை
சுகாதாரமற்ற வாழ்க்கை முறைக்கும் புற்றுநோய்க்கும் அதிக தொடர்பு இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். புற்றுநோய் ஏற்படுபவர்களில் ஆண்களில் 45.4 சதவீதம் பேரும், பெண்களில் 16.8 சதவீதம் பேரும் புகையிலை பழக்கத்தால் நோய் வாய்ப்பட்டுள்ளனர். நுரையீரல் புற்றுநோய்க்கு புகைப்பிடுக்கும் பழக்கம் தான் முக்கிய காரணம் ஆகும். ஆனால் புகைப்பிடிப்பவர்கள் அருகில் நிற்பவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுகிறது என்று டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி புற்றுநோய் மற்று ஆய்வு மைய தலைவர் ஏ.கே. தீவான் தெரிவித்துள்ளார்.

காரணங்கள்
காலம் தாழ்ந்த கர்ப்பம், கருத்தடை மாத்திரைகள் உட்கொள்வது, நைட் ஷிப்ட் வேலை, ரசாயனம் அதிகம் உள்ள உணவு, அழகுசாதன பொருட்களை பயன்படுத்துவதாலும் புற்றுநோய் ஏற்படுகிறது. பழங்கள், காய்கறிகள் உண்பதில் இருந்து ஜங்க் புட், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை இந்தியர்கள் அதிக அளவில் சாப்பிடுகிறார்கள். பதப்படுத்தப்பட்ட உணவுகளில் ஊட்டச்சத்து குறைவாகவும், கொழுப்பு அதிகமாகவும் உள்ளது.

உடல் பருமன்
இந்தியர்கள் கொழுப்புச் சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதுடன் உடற்பயிற்சி செய்வது இல்லை. இதனால் இந்தியாவில் தற்போது 30 லட்சம் பேர் உடல் பருமனால் அவதிப்படுகின்றனர். அமெரிக்காவில் புற்றுநோய் அதிகம் ஏற்படுகிறது. அதற்கு உடல் பருமனும் ஒரு முக்கிய காரணம் ஆகும். இந்தியாவும் அமெரிக்காவை பார்த்து உணவுப் பழக்க வழக்கங்களை மாற்றி வருகிறது. அமித் வைத்யா அமெரிக்காவில் இருக்கையில் அவரது 26வது வயதில் முதன்முதலாக புற்றுநோய் ஏற்பட்டது. அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து அவருக்கு மீண்டும் புற்றுநோய் ஏற்பட்டது.

காரணிகள்
ஹெபடிட்டிஸ் பி வைரஸ், ஹெபடிட்டிஸ் சி வைரஸ், பாபிலோமா வைரஸ் உள்ளிட்டவையாலும் புற்றுநோய் ஏற்படலாம். தொடர்ந்து மன அழுத்தம் இருந்தால் உடலின் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்பட்டு புற்றுநோய் ஏற்படலாம். 2009ம் ஆண்டில் வைத்யா புற்றுநோயில் இருந்து குணமடைந்த ஒரு மாதத்தில் அவரின் தாய்க்கு மூளையில் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வைத்யாவின் தாய் 2011ம் ஆண்டு மரணம் அடைந்தார்.

தடுப்பு நடவடிக்கைகள்
புற்றுநோயை தடுக்க இவை தான் செய்ய வேண்டும் என்ற ஒன்றும் இல்லை என மும்பையில் உள்ள டாடா நினைவு மைய இயக்குனர் ராஜேந்திர பாத்வே தெரிவித்துள்ளார். புகையிலை பழக்கத்தை விட்டுவிட்டு, சத்தான உணவை சாப்பிடுவதுடன் உடற்பயிற்சி செய்வது நல்லது என்கிறார் பாத்வே.

உணவு
பழங்கள், காய்கறிகளில் வைட்டமின்கள், அயோடின், இரும்புச்சத்து உள்ளிட்டவை உள்ளன. மஞ்சள், கடுகு உள்ளிட்ட மசாலாக்கள் அடங்கிய இந்திய சைவ உணவால் வாய், மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. புற்றுநோயை துவக்கத்திலேயே கண்டுபிடித்துவிட்டால் குணப்படுத்துவது எளிதாகும்.

டாக்டர்கள்
நகரங்களில் வசிக்கும் மக்கள் புற்றுநோய் ஏற்பட்ட உடனேயே மருத்துவரை அணுகுகிறார்கள். ஆனால் கிராமப்புறங்களில் உள்ள மக்கள் இறுதி கட்டத்தில் தான் மருத்துவரிடம் செல்கிறார்கள்.

சிகிச்சை முறைகள்
வைத்யாவுக்கு முதல் முறை புற்றுநோய் ஏற்பட்டபோது கீமோதெரபி மூலம் குணப்படுத்தப்பட்டது. மீண்டும் 2011ம் ஆண்டில் அவருக்கு புற்றுநோய் ஏற்பட்டபோது வைத்யா அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்து குஜராத்தில் மாட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டார். அவருக்கு நெய், தயிர், பால், கோமியம் மற்றும் சாணம் ஆகிய மாட்டின் ஐவகை பொருட்களில் செய்யப்பட்ட பஞ்சகவ்யாவையை வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இது தவிர அவர் யோகா, தியானமும் செய்தார். தற்போது அவர் அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து யோகா, தியானம் செய்வதுடன் சத்தான உணவை சாப்பிடுகிறார். வைத்யாவை போன்று அனைவருக்கும் பஞ்சகவ்யா முறை செயல்படாது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications