அந்தக் கால்கள் ஓடிய அழகைப் பார்த்து மெய் சிலிர்த்தேன்.. கலாம் நெகிழ்ந்து போன அந்த தருணம்
டெல்லி: அப்துல் கலாமைப் பற்றி பேசிப் பேசித் தீராது.. அவரைப் பற்றி, அவரது மறுபக்கத்தைப் பற்றி எழுதிக் கொண்டே இருக்கலாம், பேசிக் கொண்டே இருக்கலாம். கலாம் ராக்கெட் மட்டும் விடவில்லை, ஏவுகணைகளை மட்டும் உருவாக்கவில்லை. மாறாக, சத்தம் போடாமல் பல அருமையான சமூக சேவைகளை அவர் செய்துள்ளார்.
அதில் முக்கியமானது போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாதத்தால் பாதிக்கப்பட்டோர் அணியும் ஷூக்களின் (கேலிப்பர்) பிட்மென்ட் (இணைப்புப் பகுதி) எடையைக் குறைத்த அருமையான செயல் ஆகும்.
இளம்பிள்ளைவாதத்தால் பாதிக்கப்பட்டோர் மிகவும் எடை அதிகமான ஷூக்களை போட்டுக் கொண்டு இயங்குவதைப் பார்த்திருப்போம். முன்பு இதை விட அதிக எடை கொண்டதாக இந்த கேலிப்பர்கள் இருந்தன. ஆனால் அப்துல் கலாமும், அவரது குழுவினரும் இணைந்து இதன் எடையைக் குறைக்கும் அருமையான காரியத்தைச் செய்தவர்கள் ஆவர்.
தனது வாழ்வில் தான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தது எடை குறைக்கப்பட்ட காலிப்பர்களை போலியோவால் பாதிக்கப்பட்ட சிறார்கள் போட்டுக் கொண்டு சந்தோஷத்துடன் நடந்தபோதுதான் என்று கலாமும் அதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். இதுகுறித்து ஒருமுறை கலாமே கூறியது இது...

போலியோ சிறார்கள்
போலியோவால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு காலிப்பர்கள் தயாரிக்கப்படுகின்றன. முன்பு நான் ஹைதராபாத்தில் உள்ள சில மருத்துவமனைகளுக்குச் சென்றிருந்தபோது அங்கு செயற்கைக் கால்கள் பொருத்தப்பட்ட பலர் நடக்கவே மிகவும் சிரமப்படுவதை பார்த்தேன். காரணம், அந்த காலிப்பர்களின் எடை. அது 4 கிலோ வரைக்கும் இருப்பதாக டாக்டர்கள் கூறினர்.

எடை அதிகமான பிட்மென்ட்
அப்போது என்னிடம் பேசிய நிம்ம்ஸ் மருத்துவமனையின் பேராசிரியர் டாக்டர் பி.என். பிரசாத், இதற்கு ஏதாவது வழி உள்ளதா. எடையைக் குறைத்தால் பலருக்கு பலன் கிடைக்கும் என்று என்னிடம் கேட்டார். திரும்பி வந்த நான், உடனடியாக எனது அக்னி (ஏவுகணை) நண்பர்களைத் தொடர்பு கொண்டேன். நாம் ஏன் அக்னிக்காக பயன்படுத்தப்படும் காம்போசிட் மெட்டீரியல்களை ரீசைக்கிள் செய்து இந்த காலிப்பர்களுக்குத் தேவையான மெட்டீரியல்களைத் தயாரிக்க பயன்படுத்த முடியாது என்று கேட்டேன்.

களத்தில் குதித்த அக்னி நண்பர்கள்
அவர்களும் இது சாத்தியமானதுதான் என்றனர். உடனடியாக நாங்கள் களத்தில் குதித்தோம். அனைவரும் சேர்ந்து ஒரு குழுவாக செயல்பட்டு புதிய மெட்டீரியலை உருவாக்கினாோம். அதைக் கொண்டு முதலில் 25 காலிப்பர்களை உருவாக்கினோம். காலிப்பர்களில் உள்ள பிட்மென்ட்தான் அதிக எடை கொண்டது. அதைத்தான் நாங்கள் குறைக்க முயற்சித்தோம். அதற்கு முன்பு வரை 4 கிலோ எடையுடன் இருந்த பிட்மென்ட் பகுதியை நாங்கள் 400 கிராமாக குறைத்தோம். டாக்டர்கள் மகிழ்ந்தனர்.

ஓடியதைக் கண்டு ஆனந்தக் கண்ணீர்
ஆனால் எனக்கு அதை விட பெரிய மகிழ்ச்சி என்னவென்றால் அந்த காலிப்பர்களைப் போட்டுக் கொண்டு சிறார்கள் மகிழ்ச்சியுடன் முன்பை விட வேகமாக, சந்தோஷமாக, உற்சாகமாக நடந்தார்கள் பாருங்கள். அதுதான் எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்தது. எனது வாழ்க்கையில் நான் மிக மிக அதிக அளவிலான மகிழ்ச்சியை அடைந்தது அந்த சிறார்களைப் பார்த்துத்தான்.

பெற்றோரின் மகிழ்ச்சி என் மகிழ்ச்சி
தங்களது பிள்ளைகள் நடப்பதைப் பார்த்து அவர்களின் பெற்றோர்கள் விட்ட ஆனந்தக் கண்ணீர் மிகவும் நெகிழ்ச்சியானது. தங்களது பிள்ளைகளும் மற்றவர்களைப் போல ஓடியாட முடிகிறதே என்ற மகிழ்ச்சியால், சந்தோஷத்தால் வழிந்த கண்ணீர் அது. அதே அளவிலான மகிழ்ச்சியில்தான் நானும் இருந்தேன்.

வலியைப் போக்கிய சந்தோஷம்
அந்தக் குழந்தைகளின் வலியைப் போக்கிய மகிழ்ச்சி எனக்கு. அவர்களும் மற்றவர்களைப் போல இயல்பாக நடக்க முடிகிறதே என்ற மகிழ்ச்சி எனக்கு. அவர்களது வாழ்க்கையில் ஒரு புதிய ஒளி பாய்ச்சப்பட்டதாக நான் உணர்ந்தேன். அந்த சந்தோஷத்தை அதற்கு முன்பும் சரி, பின்னரும் சரி நான் அடைந்ததில்லை, உணர்ந்ததில்லை என்றார் கலாம்.

கலாம் போட்ட விதை
கலாம் கூறிய அந்த மெட்டீரியலானது ஏவுகணைகள், விமானங்கள், போர் விமானங்கள் போன்றவற்றி்ல பயன்படுத்தப்படும் மெட்டல் ஆகும். இதன் கழிவைத்தான் ரீஇன்போர்ஸ் செய்து மாற்றியமைத்து காலிப்பர்களின் பிட்மென்ட் பகுதியாக மாற்றி அற்புதம் செய்தது கலாம் குழு. இன்று நாடு முழுவதும் காலிப்பர்கள் எடை குறைந்து காணப்படுகிறது என்றால் அதற்கு கலாம் போட்ட அந்த விதைதான் காரணம். காலிப்பர்களுடன் நடந்து வரும் ஒவ்வொருவரும் கலாமுக்கு நன்றிக் கடன் பட்டுள்ளனர்.

நன்றி சொல்வோம் கலாமுக்கு
கலாமின் இந்த செயல் இன்னொரு விஷயத்தை நமக்குப் போதிக்கிறது. இந்த உலகில் எதுவுமே வீண் இல்லை. வீண் என்று நாம் நினைப்பது வேறு ஒரு காரியத்துக்கு பெரிய நிவாரணமாக இருக்கலாம் என்பதுதான் அந்த போதனை.












Click it and Unblock the Notifications