"சம்பளம் ரூ.30,000 தான்!" ஆனா பங்களா, சொகுசு கார்! அரசு பெண் ஊழியரின் உல்லாச வாழ்க்கை! மிரண்ட போலீஸ்
இந்தூர்: இந்தியாவில் லஞ்சம் என்பது பெரிய பிரச்சினையாக மாறியுள்ள நிலையில், சாதாரண அரசு ஊழியர் வீட்டில் இருந்து பல கோடி மதிப்பிலான சொத்து கைப்பற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் அரசு வேலைக்காக இங்கே பல லட்சம் பேர் ஒவ்வொரு ஆண்டும் ரெடியாகி வருகின்றனர். சில நூறு காலியிடங்களை என அரசு வேலை குறித்த அறிவிப்பு வந்தாலே பல லட்சம் பேர் விண்ணப்பிப்பதில் இருந்தே இதைப் புரிந்து கொள்ளலாம்.

நம்ம ஊரிலும் கூட ஒவ்வொரு முறையும் க்ரூப் தேர்வுகள் நடக்கும் போது இதை உணர முடியும். அதேநேரம் இப்படிக் கஷ்டப்பட்டு அரசு வேலைகளைப் பெறுவோரில் சிலர் நேர்மையாக இருப்பதில்லை.
லஞ்சம்: பெரும்பாலான அரசு அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. பல அரசு அலுவலகங்களில் A டூ Z வரை எந்தவொரு வேலையைச் செய்ய வேண்டும் என்ற போதிலும் பெருந்தொகை லஞ்சமாகக் கொடுக்க வேண்டி இருக்கிறது. இதனால் ஏழைகள் மட்டுமின்றி நடுத்தர வர்க்கத்தினரும் கூட கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊழல் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தியே வருகின்றனர்.
இதற்கிடையே மத்தியப் பிரதேசத்தில் ஊழலுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையில் பகீர் சம்பவம் நடந்துள்ளது. அங்கே அரசு அதிகாரி ஒருவரது வீட்டில் நடந்த ரெய்டில் 5-7 சொகுசு கார்கள் உட்பட 20 கார்கள். இரண்டு டஜன் கால்நடைகள், ₹ 30 லட்சம் விலையில் உயர் ரக 98 இன்ச் டிவி கைப்பற்றப்பட்டன. மேலும், அவருக்குச் சொந்தமாக 20000 சதுர அடி நிலம் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பளம்: இத்தனைக்கும் இவருக்குச் சம்பளம் வெறும் ₹ 30,000 ஆயிரம் ரூபாய் தானாம்.. 36 வயதான இந்த மத்தியப் பிரதேச அரசு அதிகாரி தான் இப்போது ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் சிக்கியுள்ளார். மத்தியப் பிரதேச காவல்துறை வீட்டு வசதிக் கழகத்தில் உதவிப் பொறியாளரான ஹேமா மீனா கடந்த 10 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார்.
30 ஆயிரம் சம்பளத்தை மட்டுமே பெற்று அவர், தன் பெயரிலும் தனது குடும்பத்தினரின் பெயரிலும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார்.
அவரது வளாகத்தை ஊழல் அதிகாரிகள் சோதனை செய்தனர். அவரது குடியிருப்பில் 100 நாய்கள், வயர்லெஸ் தகவல் தொடர்பு அமைப்பு, மொபைல் ஜாமர்கள் என இருந்த வசதிகளைப் பார்த்து போலீசாரே மிரண்டுவிட்டனர்.
அதிரடி சோதனை: முதலில் சோலார் பேனலை ரிப்பேர் செய்யும் ஊழியர்கள் போலச் சென்ற அதிகாரிகள் அதிரடியாகச் சோதனை நடத்தினர். ஒரே நாளில் 7 கோடிக்கும் அதிகமான சொத்தை அவர்கள் கண்டுபிடித்தனர். இது அவரது வருமானத்தை விட 232 சதவீதம் அதிகமாகும்.
முதற்கட்ட விசாரணையில் மீனா தனது தந்தையின் பெயரில் 20,000 சதுர அடி விவசாய நிலத்தை வாங்கியுள்ளார். பின்னர் சுமார் ₹ 1 கோடி மதிப்பிலான பெரிய வீட்டைக் கட்டியிருக்கிறார். அந்த வீடு மட்டுமின்றி பல மாவட்டங்களில் நிலத்தையும் வாங்கி குவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச போலீஸ் வீட்டு வசதிக் கழகத்தின் கட்டுமானத்திற்குப் பயன்படுத்தும் பொருட்களை வைத்து அவர் தனது வீட்டைக் கட்டியுள்ளதும் தெரிய வந்துள்ளது. மேலும், அறுவடை இயந்திரங்கள், கனரக விவசாய இயந்திரங்களையும் போலீசார் கைப்பற்றப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக அவரிடம் 5 முதல் 7 கோடி மதிப்பிலான சொத்துகள் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சாதாரண ஊழியர் வீட்டில் இப்படிப் பல கோடி மதிப்பிலான சொத்து கண்டறியப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications