ஒரே நாளில் சொர்க்கம் இடியாது.. பாஜக எப்படி ஆட்சி அமைத்தது.. இரவு வழக்கில் நீதிபதிகள் கூறியது என்ன?
நேற்று இரவு எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைத்ததற்கு எதிரான வழக்கில் விசாரணை நடந்தது.
Recommended Video

பெங்களூர்: நேற்று இரவு எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைத்ததற்கு எதிரான வழக்கில் விசாரணை நடந்தது. இந்த விசாரணையில் வாதிடப்பட்ட விஷயங்கள் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது. கர்நாடகா சட்டசபையில் எம்எல்ஏக்கள் பதவி ஏற்கும் முன் அவர்கள், வேறு கட்சிக்கு மாற்றி வாக்களித்தால் அது கட்சி தாவல் தடை சட்டத்தில் வராது என்று நேற்று நடந்த வழக்கில் பாஜக வித்தியாசமான விளக்கம் அளித்துள்ளது.
கர்நாடகாவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காத காரணத்தால் பெரிய குழப்பமான சூழ்நிலை நிலவி வந்தது. பாஜக 104 தொகுதிகளில் வென்று இருந்தாலும் அந்த கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. 78 இடங்களில் வென்ற காங்கிரஸ், 38 தொகுதிகளில் வென்ற மஜத உடன் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரி இருந்த போதும், ஆளுநர் அவர்களை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை.
பல்வேறு பரபரப்புகளுக்கும், களேபரங்களுக்கும் மத்தியில் கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்றுள்ளார். எடியூரப்பா ஆளுநரிடம், பெரும்பான்மையை நிரூபிக்க 7 நாள் அவகாசம் கேட்டு இருந்தார், ஆளுநர் அவருக்கு 15 நாள் அவகாசம் கொடுத்துள்ளார். உச்ச நீதிமன்றம் பதவி ஏற்பிற்கு தடை விதிக்க மறுத்த நிலையில் தற்போது, எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.

எந்த அடிப்படையில் அழைத்தார்
நேற்று இரவு நடந்த வழக்கில், காங்கிரஸ் தரப்பு முக்கியமான வாதம் ஒன்றை வைத்தது, பாஜக கட்சிக்கு பெரும்பான்மை இல்லவே இல்லை, அவர்களை ஆட்சி அமைக்க அழைத்துவிட்டு பெரும்பான்மையை நிரூபிக்க சொல்வது குதிரை பேரத்திற்கு வழி வகுக்கும் என்று கூறியது. காங்கிரஸ் தரப்பின் இந்த வாதத்தை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏற்றுக்கொண்டு, ஆளுநர் எந்த அடிப்படையில் பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தார் என்று கேள்வி கேட்டு இருந்தனர்.

குதிரை பேரம் நடக்குமா
மேலும், பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைத்த பின் குதிரை பேரம் மூலம் எம்எல்ஏக்களை வாங்குவது கட்சி தாவல் தடை சட்டத்திற்கு எதிரானது என்றும் காங்கிரஸ் கட்சி வாதிட்டது. இதற்கு பதில் அளித்த மத்திய அரசின் வழங்கறிஞர் வேணுகோபால், எம்எல்ஏக்கள் யாரும் இன்னும் எம்எல்ஏக்களாக பதவி ஏற்கவில்லை, இதனால் அவர்கள் கட்சி மாறினால் அது கட்சி மாறும் தடை சட்டத்திற்குள் வராது, அவர்கள் சட்டமன்றத்தில் வாக்களிக்கும் முன் கட்சி மாறுவதை யாரும் தடை செய்ய முடியாது என்று வித்தியாசமான பதில் அளித்தார்.

தடை இல்லை
ஆனால் நீதிபதிகள் இந்த வாதத்தை ஏற்கவில்லை. அதே சமயம் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தீர்ப்பளிக்கவும் மறுத்துவிட்டனர். பாஜக தரப்பில் ஆஜாரான இரண்டு வழக்கறிஞர்களும், காங்கிரஸ் கட்சியின் மனுவை உடனடியாக தள்ளுபடி செய்யும்படி கோரிக்கை வைத்தனர். அதிசயமாக, நீதிபதிகள் அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்கள். எடியூரப்பா பதவி ஏற்க தடை விதிக்க முடியாது என்று தீர்ப்பளித்தனர்.

சொர்க்கம் ஒன்றும் இடிந்துவிழுந்து விடாது
இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை அதேபோல் நீதிபதிகள் பாஜகவிற்கு கொடுக்கப்பட்ட 15 நாட்கள் அவகாசத்தை குறைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த முடிவையும் நீதிபதிகள் ஏற்கவில்லை. எடியூரப்பா பதவி ஏற்றால், ஒரே நாளில் சொர்க்கம் ஒன்றும் இடிந்துவிழுந்து விடாது என்று பாஜக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதிட்டது கொஞ்சம் சர்ச்சையையும், கவனத்தையும் பெற்றது.












Click it and Unblock the Notifications