சட்டென மாறும் ஆந்திர அரசியல்.. நேரடியாக "அவரை" சந்திக்கும் ஜெகன்.. சந்திரபாபு நாயுடுவுக்கு செக்?
அமராவதி: ஆந்திராவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் ஜெகன் மிக மோசமான தோல்வியைச் சந்தித்தார். சந்திரபாபு நாயுடு வென்று முதல்வராகப் பதவியேற்றார். இதற்கிடையே ஆந்திர அரசியல் திடீர் மாற்றம் நடக்கத் தொடங்கியுள்ளது. இது ஜெகனின் கம்பேக்கிற்கு வழிவகுக்கும் என்று சொல்லப்படுகிறது.
நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் சமீபத்தில் தான் சட்டசபைத் தேர்தல் முடிந்தது. இதில் சந்திரபாபு நாயுடு பிரம்மாண்ட வெற்றி பெற்று முதல்வராகப் பொறுப்பேற்றார். இதற்கிடையே ஆந்திர அரசியலை மீண்டும் சுவாரசியமாக மாறி வருகிறது.

ஜெகன்: கடந்த சட்டசபைத் தேர்தலில் தோல்வியடைந்த ஜெகன் தரப்பில் தான் இந்த மாற்றம் நடந்துள்ளது. ஜெகன் முதல்வராக இருந்த போது அவரது அரசுக்கும் மக்களுக்கும் இடையே இருந்த இடைவெளி அதிகரித்தது. இதுவே ஜெகனின் தோல்விக்குக் காரணம் என்று சொல்லப்பட்டது. ஆனால், இப்போது ஜெகனின் செயல்பாடுகளில் மாற்றம் தென்படத் தொடங்கியுள்ளது.
ஜெகன் மோகன் ரெட்டி இப்போது தனது கட்சி நிர்வாகிகளுடன் தொடர்ச்சியாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார். ஒவ்வொரு விஷயத்திலும் ஊடகங்களைப் பேட்டி அளிக்கிறார் தன்னை பார்க்க வரும் அனைவருக்கும் நேரம் ஒதுக்கிச் சந்திக்கிறார். இந்த மாற்றங்கள் அவர் தனது தவறை உணர தொடங்கிவிட்டார் என்பதையே காட்டுகிறது.
பிரசாந்த் கிஷோர்: இந்த நேரத்தில் ஜெகன் மோகன் ரெட்டியை மீண்டும் பிரசாந்த் கிஷோர் சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி பேசுபொருள் ஆகியிருக்கிறது. இதனால் ஆந்திர அரசியலில் பிரசாந்த் கிஷோர் மீண்டும் ஹாட் டாபிக்காக மாறி இருக்கிறார்.

கடந்த 2019ல் நடந்த ஆந்திர சட்டசபைத் தேர்தல் சமயத்தில் ஜெகன் மோகன் ரெட்டி உடன் இணைந்து பிரசாந்த் கிஷோர் பணியாற்றினார். வாக்குறுதிகள், பிரச்சார யுக்தியை மாற்றுவது, வேட்பாளர் தேர்வு என்று அனைத்து விஷயங்களிலும் ஜெகன் தரப்புக்கு பிரசாந்த் கிஷோர் உதவினார். அந்தத் தேர்தலில் தான் ஜெகன் ஆந்திராவில் உள்ள 175 இடங்களில் 151ஐ கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தார்.
மாற்றங்கள்: அதன் பிறகு பல மாற்றங்கள் நடந்துவிட்டது. பிரசாந்த் கிஷோர் 2021 வரை திமுக உட்பட பல கட்சிகளுடன் பணியாற்றினார். அதன் பிறகு பீகாரில் தனது சொந்த கட்சியை வளர்த்தெடுப்பதில் கவனம் செலுத்தத் தொடங்கினார். பிரசாந்த் கிஷோர் டீமில் இருந்த ரிஷி ராஜ் சிங், 2024 சட்டசபைத் தேர்தல் வரை ஜெகன் உடன் இணைந்து பணியாற்றினார்.
இந்தாண்டு லோக்சபா தேர்தலுடன் ஆந்திர சட்டசபைத் தேர்தலும் நடந்த சூழலில், அப்போது நிலைமை மொத்தமாக மாறியது. பிரசாந்த் கிஷோர் நேரடியாக அமராவதி வந்தார். அங்கு அவர் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து ஹைதராபாத்திலும் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
எதிர்ப்பு: அதைத் தொடர்ந்து ஜெகனுக்கு எதிராக வெளிப்படையாகவே பிரசாந்த் கிஷோர் பேசினார். ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி மிக மோசமான ஒரு தோல்வியை அடைவார் என்று வாக்குப்பதிவுக்கு முன்பு இருந்தே கூறி வந்தார். நில உரிமைச் சட்டம் மற்றும் மது விற்பனை சார்ந்து ஜெகன் எடுத்த முடிவுகள் அவருக்கு எதிராகத் திரும்பி இருப்பதாக பிரசாந்த் கிஷோர் கூறியிருந்தார். இந்தச் சூழலில் தான் அங்கு இப்போது மீண்டும் அரசியல் மாற்றம் நடக்கத் தொடங்கியிருக்கிறது.
சந்திப்பு: ஜெகன் மோகன் ரெட்டி இப்போது பெங்களூரில் இருக்கிறார். ஜெகனுக்கு நெருக்கமான தேசிய தலைவர் ஒருவர் மீண்டும் பிரசாந்த் கிஷோருடன் பணியாற்றுமாறு அட்வைஸ் செய்துள்ளார். இருப்பினும், ஜெகனுக்கு இந்த திட்டத்தில் விருப்பம் இல்லையாம். ஆனால், கட்சியை முன்னோக்கி எடுத்துச் செல்வதில் புதிய ஆலோசனைகள் தேவை என்பதால் ஜெகனை அவரது சகாக்கள் இதற்குச் சம்மதிக்க வைக்க முயன்று வருகிறார்கள். எனவே, மிக விரைவில் இருவருக்கும் இடையே சந்திப்பு நடக்கும் எனத் தெரிகிறது.
தற்போது ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தரப்பிற்கு பிகே டீம் வேலை செய்து வருவதால், ஜெகனுக்காக நேரடியாக பணியாற்ற முடியாது என்ற போதிலும் தேவையான ஆலோசனைகளைத் தனிப்பட்ட முறையில் வழங்க பிரசாந்த் கிஷோர் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications