தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அரசியல் சாசனத்தை மீறுகிறார்: சு.சாமி குற்றச்சாட்டு!
தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அரசியல் சாசனத்தை மீறுவதாக சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லி: சசிகலாவை முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்காமல் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அரசியல் சாசனத்தை மீறுவதாக பாரதிய ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும் எம்.பி.,யுமான சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டியுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக விவகாரங்களில் அதிகம் தலையிடுவார் என எதிர்பார்க்கப்பட்டவர் சுப்பிரமணியன் சுவாமி. அதுவும் மன்னார்குடி கோஷ்டி, அதிமுகவை கைப்பற்றியது தொடர்பாக கடும் எதிர்ப்பை தெரிவிப்பார் சுப்பிரமணியன் சுவாமி என கூறப்பட்டது.

அதேபோலத்தான் சசிகலாவுக்கு எதிராக சில கருத்துகளை கூறி வந்தார் சுப்பிரமணியன் சுவாமி. ஆனால் திடீரென சசிகலா முதல்வராவார்; ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசை கலைக்க வேண்டும் என்றெல்லாம் டிவிட்டரில் போட்டு பரபரப்பை கிளப்பினார் சுப்பிரமணியன் சுவாமி.
இந்நிலையில் சசிகலாவை முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைக்காமல் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அரசியல் சாசனத்தை மீறுவதாக சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, அதிமுக சட்டப்பேரவை குழுத் தலைவராக ஒருமனதாக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து சசிகலாவை உடனடியாக முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும். ஆனால் தமிழக பொறுப்பு ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனநாயகம் மீறப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சட்டத்தின்படியே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications