சகோதரிக்கு தொல்லை! தட்டிக்கேட்ட 10ம் வகுப்பு மாணவன் உயிருடன் எரித்துக்கொலை.. ஆந்திராவில் பயங்கரம்
அமராவதி: ஆந்திராவில் மைனர் பெண்ணான தனது சகோதரிக்கு தொல்லை கொடுத்த இளைஞரை தட்டிக்கேட்ட 10 ம் வகுப்பு மாணவன் பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தை சேர்ந்தவர் அமர்நாத் (வயது 15). இவர் அங்குள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு ஒரு சகோதரி உள்ளார்.
அதேபோல் அமர்நாத் வசிக்கும் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வர். இவருக்கு வயது 21. இந்நிலையில் தான் வெங்கடேஸ்வர் அமர்நாத்தின் சகோதரியை பின்தொடர்ந்து தொல்லை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி அமர்நாத் அறிந்தார். மேலும் தனது சகோதரிக்கு தொல்லை கொடுத்தை வெங்கடேஸ்வரிடம் அமர்நாத் தட்டிக்கேட்டுள்ளார். இந்த வேளையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த வெங்கேடேஸ்வர் தனது நண்பர்களுடன் சேர்ந்து பெட்ரோலை எடுத்து அமர்நாத் மீது ஊற்றி தீவைத்துள்ளனர்.
இதனால் அமர்நாத்தின் உடலில் தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து அவர் காப்பாற்றும்படி கூச்சலிட்ட நிலையில் அந்த பகுதியில் இருந்தவர்களை தீயை அணைத்து அவனை மீட்டனர். அதன்பிறகு அருகே உள்ள மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அழைத்து சென்று அனுமதித்தனர். அங்கு அமர்நாத்தை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
முன்னதாக ஆம்புலன்ஸில் சிகிச்சைக்கு அழைத்து சென்றபோது அமர்நாத் சம்பவம் குறித்து சில விஷயங்களை கூறியுள்ளார். அப்போது அவர் வெங்கடேஸ்வர் உள்பட 3 பேரின் பெயர்களை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமர்நாத்தின் குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதோடு அமர்நாத்தின் சகோதரிக்கு (மைனர்பெண்) தொல்லை கொடுத்த புகாரில் போக்சோ வழக்கையும் போலீசார் பதிவு செய்துள்ள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications