உபியில் வாக்களிக்க விடாமல் விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்கள்? போலீஸ் தடியடி.. பரபரப்பான குற்றச்சாட்டு
லக்னோ: உத்தர பிரதேசத்தில் இன்று நடந்த லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்க விடாமல் முஸ்லிம்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். மேலும் அவர்களின் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டைகள் போலி எனக்கூறி போலீசார் திருப்பி அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நம் நாட்டில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக லோக்சபா தேர்தல் முடிவடைந்தது. இதையடுத்து இன்று 3வது கட்டமாக லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில் தான் உத்தர பிரதேச மாநிலத்தில் இன்று நடந்த லோக்சபா தேர்தலில் முஸ்லிம்களை ஓட்டுப்போட விடாமல் போலீசார் தடியடி நடத்தி விரட்டியதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது சமூக வலைதளங்களில் தற்போது வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் முஸ்லிம்களை போலீசார் விரட்டி விரட்டி ‛‛லத்தி சார்ஜ்'' செய்வது பதிவாகி உள்ளது. மேலும் பெண்கள், குழந்தைகளும் போலீசார் விரட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ என்பது உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள சாம்பல் லோக்சபா தொகுதிக்குட்பட்ட அஸ்மாலி அருகே ஓவாரி கிராமத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
ஓவாரி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளான 181, 182, 183 மற்றும் 184 ஆகியவற்றில் ஓட்டளிக்க முஸ்லிம்கள் நின்றுள்ளனர். இந்த வேளையில் தான் போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்துள்ளனர். மேலும் அவர்களை ஓட்டளிக்க விடவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதுபற்றி அங்கிருந்த முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த ஆண்களும், பெண்களும் கூறுகையில், ‛‛நாங்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை. எங்களின் ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகள் போலி எனக்கூறி போலீசார் எடுத்து சென்றனர். எங்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. போலீசார் எங்களை தாக்க துளியும் தயங்கவில்லை'' என்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications