ஆப்கனில் கடத்தப்பட்ட தமிழக பாதிரியார் பத்திரமாக உள்ளார்... இந்தியத் தூதரகம் நம்பிக்கை
டெல்லி: ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட தமிழக பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார் பத்திரமாக இருப்பதாக இந்திய தூதரக அதிகாரிகள் அலெக்சிஸ் பிரேம்குமாரின் குடும்பத்தினருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டையை அடுத்த வாரியன்வயல் கிராமத்தைச் சேர்ந்தவர் பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார். இவர் ஆப்கானிஸ்தானில் உள்ள தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.
பெண்களுக்கு கல்வி போதித்தல் மற்றும் இளைஞர்கள் தீவிரவாத இயக்கத்தில் சேர்வதைத் தடுக்கும் பணிகளில் பாதிரியார் பிரேம்குமார் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2ஆம் தேதி பாதிரியார் பிரேம்குமாரை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கடத்திச் சென்றனர். இதையடுத்து அவரை உடனடியாக மீட்க வேண்டுமென்று பிரேம்குமாரின் உறவினர்கள் மத்திய மாநில அரசுகளுக்குக் கோரிக்கை விடுத்தனர்.
அதன் தொடர்ச்சியாக, பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார் பத்திரமாக இருப்பதாக இந்திய தூதரக அதிகாரிகள் அலெக்சிஸ் பிரேம்குமாரின் குடும்பத்தினருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளனர்.
மேலும், இது தொடர்பாக ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதர் அமர்சின்கா காபூலில் செய்தியாளர்கள் மத்தியில் கூறியதாவது:-
துரதிருஷ்டவசமாக அவரை எங்களால் உடனடியாக மீட்க முடியவில்லை. ஆனால் அவர் குறித்த தொடர்பில் இருக்கிறோம். கடத்தப்பட்ட அவர் பத்திரமாக இருக்கிறார்.
ஆப்கானிஸ்தான் நிறுவனங்களுடன் இணைந்து அவரை விடுவிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். கடந்த 14-ந்தேதி ஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் அவரை மீட்பது தொடர்பாக அந்நாட்டு அரசு அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications