ராகுல் விமர்சனங்களை கண்டுகொள்ளாத ராஜஸ்தான் காங்.. அம்பானி, அதானி ரூ.1.68 லட்சம் கோடி முதலீடு!
ஜெய்ப்பூர்: பாஜகவின் முதலாளிகள் என்று ராகுல் காந்தி விமர்சித்து வரும் அதானி மற்றும் அம்பானி ஆகியோர் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தில் ரூ.1.68 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு செய்யவுள்ளதாக உறுதியளித்துள்ளன.
Recommended Video
கடந்த டிசம்பர் மாதம் ராஜஸ்தான் மாநிலத்தில் விலைவாசி உயர்வுக்கு எதிரான பேரணியில் ராகுல் காந்தி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், இந்தியாவில் விமான நிலையம், துறைமுகம், நிலக்கரிச் சுரங்கம், டெலிபோன், சூப்பர் மார்க்கெட் என்று எங்கு பார்த்தாலும் அதானி மற்றும் அம்பானி ஆகிய இரு பெயர்களை தான் பார்க்க முடியும். இது அவர்களின் தவறல்ல. இலவசமாக ஏதாவது கொடுத்தால் அதை வேண்டாம் என்று மறுப்பவர்கள் உண்டா? அப்படி யாரும் நீங்கள் செய்யமாட்டார்கள். அதனால் அது அவர்களின் தவறல்ல. பிரதமரின் தவறு என்று கூறியிருந்தார்.

இப்படி தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்ச்சிகளிலும் இந்தியாவில் உள்ள சிறுகுறு தொழில் செய்து வந்த முதலாளிகளை பாஜக அரசு ஒழித்துவிட்டு, அம்பானி மற்றும் அதானி ஆகியோருக்கு சேவகம் செய்து வருவதாக ராகுல் காந்தி விமர்சித்து வருகிறார். ஆனால் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தில் அம்பானி மற்றும் அதானி நிறுவனங்கள் சுமார் ரூ.1.68 லட்சம் கோடி முதலீடு செய்வது உறுதி செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டுல் எப்படி முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படுகிறதோ, அதேபோல் ராஜஸ்தான் மாநிலத்தில் இன்வெஸ்ட் ராஜஸ்தான் என்ற திட்டத்தை அசோக் கெலாட் தலைமையிலான அரசு முன்னெடுத்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் இந்த மாநாடு நடக்கவிருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக வரும் அக்டோபர் மாதம் நடக்கவுள்ளது.
இந்தநிலையில் இன்வெஸ்ட் ராஜஸ்தான் திட்டத்தில் கீழ், இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான கவுதம் அதானி தலைமையிலான அதானி குழுமம் மற்றும் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் ஆகியவை மிகப் பெரிய முதலீட்டை ராஜஸ்தானில் செய்ய முன்வந்துள்ளன.
ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், ராஜஸ்தான் மாநிலத்தின் முதலீட்டு ஊக்குவிப்பு பணியகம் வழங்கிய தரவுகளின்படி, இரு கார்ப்பரேட் நிறுவனங்களும் இணைந்து கடந்த டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரை ரூ.1.68 லட்சம் மதிப்பிலான முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் போடப்பட்டுள்ளன. இது அந்த மாநிலத்தில் முதலீடு செய்யப்பட இருக்கும் தொகையில், 18 சதவீதமாகும்.
ஆர்டிஐ மூலம் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், ராஜஸ்தான் மாநிலத்தில் ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார் லிமிடெட் நிறுவனம் ரூ. ஒரு லட்சம் கோடியும், அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனம் ரூ. 60 ஆயிரம் கோடியும், அதானி இன்ஃப்ரா லிமிடெட் நிறுவனம் ரூ. 5 ஆயிரம் கோடியும் முதலீடு செய்வதாக உறுதியளித்துள்ளன. அதுமட்டுமல்லாமல், டோட்டல் கேஸ் லிமிடெட் நிறுவனம் ரூ. 3 ஆயிரம் கோடியும், அதானி வில்மர் லிமிடெட் நிறுவனம் ரூ. 246 கோடியும் முதலீடு செய்யவுள்ளன.
அம்பானி மற்றும் அதானி ஆகியோருக்கு எதிராக தொடர்ந்து எதிர்ப்புக்குரலை ராகுல் காந்தி எழுப்பி வருகிறார். ஆனால் அதற்கு மாறாக காங்கிரஸ் கட்சி ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் இருவரும் லட்சக்கணக்கான கோடிகளை முதலீடு செய்வது பேசுபொருளாகியுள்ளது.












Click it and Unblock the Notifications