ஐஎஸ்ஐஎஸ் இந்திய தலைவர் கைது.. அசாமில் சிறப்பு அதிரடிப்படையினர் அதிரடி! சதித்திட்டம் முறியடிப்பு
திஸ்பூர்: ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் இந்திய தலைவர் அசாம் மாநிலம் துப்ரியில், அசாம் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் பயங்கரவாத செயலுக்காக நிதியை திரட்டவும், ஆட்களை திரட்டவும் முயன்றிருப்பதாக அசாம் காவல்துறையினர் கூறியுள்ளனர். துப்ரியின் தர்மசாலா பகுதியில், அசாம் சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அப்பகுதி முழுவதும் திடீர் ரெய்டு மேற்கொள்ளப்பட்டது.

இதில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இந்திய தலைவர் ஹரிஸ் ஃபரூக்கி மற்றும் அவரது உதவியாளர் அனுராக் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்கள் இருவரும் கவுகாத்தியில் உள்ள அசாம் சிறப்பு அதிரடிப்படை அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளனர். அங்கு இவர்களது அடையாளங்கள் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இது குறித்து அசாம் போலீசார் கூறுகையில், “கைது செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் தலைவர் ஹரிஸ் ஃபரூக்கி உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்தவர். அதேபோல அவரது உதவியாளரான அனுராக் சிங் பானிபட்டை சேர்ந்தவர். இவருடைய மனைவி வங்கதேசத்தை சேர்ந்தவர். இவர் இந்து குடும்பத்தில் பிறந்திருந்தாலும், பின் நாட்களில் இஸ்லாமியராக மதம் மாறிவிட்டார். இருவரும் இந்தியாவில் பயங்கரவாத செயல்களை செய்யவும், அதற்கான நிதி திரட்டும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தனர்” என்று கூறியுள்ளனர்.
ஏற்கெனவே இவர்கள் மீது என்ஐஏ, டெல்லி போலீஸ், ஏடிஎஸ் மற்றும் லக்னோ போலீஸ் சார்பில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. எனவே இருவரும் தேடப்படும் குற்றவாளியாக இருந்தனர். இந்நிலையில் அசாமில் இவர்கள் பிடிபட்டிருக்கின்றனர். இவர்கள் பிடிபட்ட இடம் சர்வதேச எல்லையை ஒட்டி இருந்ததால், அண்டை நாடுகளின் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தார்களா? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
அசாம் சிறப்பு அதிரடிப்படை விசாரணை முடிந்த பின்னர், விரைவில் இவர்கள் என்ஐஏ வசம் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 30 நாட்களே இருக்கும் நிலையில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இந்திய நாட்டு தலைவரும், அவரது உதவியாளரும் தொக்காக சிக்கியிருப்பது விவாதங்களை கிளப்பியுள்ளது. அதேபோல பெரும் அசம்பாவிதம் ஏதும் நடப்பதற்கு முன்னர், அவர்கள் கைது செய்யப்பட்டதற்கு சிறப்பு அதிரடிப்படையினருக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications