இந்தியாவின் முதல் சவுண்ட் ப்ரூப் சாலை.. ஒரே மழைக்கு இரண்டாக பிளந்து பல்லை காட்டிய கொடுமை
போபால்: இந்தியாவின் முதல் சவுண்ட் ப்ரூப் சாலை இரண்டாக பிளந்து பல் இளிக்கிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் வனவிலங்குகளுக்கு இரைச்சலால் ஏற்படும் பாதிப்பை தடுக்க சுமார் ரூ. 960 கோடியில் போடப்பட்ட சாலை, மழையால் இரண்டாக பிளந்துள்ளது. இதனால் ஒரு பகுதி சாலை மூடப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தையும் மகாராஷ்டிரா மாநிலத்தையும் இணைக்கும் பகுதியில் மிகப்பெரிய மலைத்தொடர் உள்ளது. இதில் தான் பென்ச் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. நாக்பூர் ஜபல்பூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சியோனி என்ற ஊர் அருகே தான் பென்ச் புலிகள் காப்பகம் உள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலை தென்னிந்தியாவையும், வட இந்தியாவையும் இணைக்கும் nh44 சாலையாகும்.

பென்ச் புலிகள் காப்பகத்தை கடந்து தான் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த குறிப்பிட்ட சாலை தான் இந்தியாவின் முதல் சவுண்ட் புரூப் சாலையாகும். அதாவது ஒளி, ஒலி இரண்டுமே வனவிலங்குகளை பாதிக்காத வகையில், பென்ச் புலிகள் காப்பக பகுதியில் சுமார் 960 கோடி ரூபாய் செலவில் சாலை அமைக்கப்பட்டது. இந்த தேசிய நெடுஞ்சாலையை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திறந்து வைத்தார்.
இந்த சாலை எப்படி என்றால் வனவிலங்குகள் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கத்தில் உயர்த்தப்பட்ட வழித்தடத்தில் (பாலம்) நான்குபுறமும் இரும்புச்சுவருடன் ஒலித்தடைகள் மற்றும் ஹெட்லைட் ரீட்யூசர்கள் அமைக்கப்பட்டிருந்தது. வனவிலங்குகள் சாலையில் அடியில் எளிதாக இடம் பெயர முடியும்.
இந்நிலையில் சியோனியில் உள்ள பென்ச் புலிகள் காப்பகத்தை ஒட்டிய பகுதியில் தொடர்ந்து மழை பெய்தது. உயர்த்தப்பட்ட சாலையின் நடுப்பகுதியிலும், ஓரங்களிலும் விரிசல் ஏற்பட்டது. இதனால் ஒரு சாலையில் நடுவே இரண்டாக பிளந்துள்ளது. இருவழிச் சாலையின் 200 மீட்டர் பகுதி மூடப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இந்த சாலை கட்டிய விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.
காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ராஜ்குமார் குரானா கூறும்போது, "பாஜக அரசின் ஊழல் காரணமாகவே இந்த சாலை இப்படி சிதைந்து போய்இருக்கிறது. முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு ஆதரவாக திலீப் பில்ட்கான் அமைத்த சாலை, மூன்று ஆண்டுகளில் மோசமடைய தொடங்கி உள்ளது. அமைச்சர் கட்கரி முதல் மொத்த பாஜக அரசாங்கமும் இந்த சாலையை ஆசியாவின் சிறந்த சாலைகளில் ஒன்று என்று கூறிவந்தார்களே" என்று விமர்சித்துள்ளார்.
இதனிடையே இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) மற்றும் பாலம் கட்டிய திலீப் பில்ட்கான் நிறுவன அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை ஆய்வு செய்தனர். மீண்டும் சாலையை சீரமைக்கும் பணியை தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications