ராம ஜென்ம பூமி.. அயோத்தி ராமர் கோவிலுக்கு வெளிநாட்டு பக்தர்கள் நன்கொடை.. உள்துறை அமைச்சகம் அனுமதி
அயோத்தி: ராம ஜென்ம பூமியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கட்டுமானத்துக்கு வெளிநாடுகளில் இருந்து நன்கொடைகள் பெறுவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. நன்கொடைகளை, டெல்லி சன்சத் மார்க்கில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி பிரதான கிளையில் உள்ள ராமர் கோவில் அறக்கட்டளையின் கணக்குக்கு மட்டுமே அனுப்ப வேண்டும் என்று அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார்.
ராமஜென்ம பூமி: ராமருக்கு ஆலயம் எழுப்ப வேண்டும் என்பது பாஜகவின் கனவு. அதையே தேர்தல் வாக்குறுதியாக கூறி ஆட்சியை பிடித்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பினை அடுத்து உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி ராமர் கோயில் கட்டுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இதனை அடுத்து ராமர் கோயில் கட்டுவதற்கு ராமஜென்ம பூமி அறக்கட்டளை உருவாக்கப்பட்டு, அதன் பிறகு கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.

பிரம்மாண்ட ஆலயம்: 54,700 சதுர அடி பரப்பளவில் 360 அடி நீளமும் 235 அடி அகலமும், தரையில் இருந்து 16.5 அடி உயரமும் கொண்ட இத்திருக்கோயில் ஐந்து குவி மாடங்கள் மூன்று தளங்களுடன் உருவாக்கப்படுகிறது. ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் உடையதாக , அமைக்கப்பட்டுள்ளது. தரை தளத்தில் 160 தூண்களும் , முதல் தளத்தில் 132 தூண்களும் , இரண்டாவது தளத்தில் 74 தூண்களும்,அமைக்கப்படுகின்றன. 12 நுழைவு வாயில்கள் உடைய இக்கோயிலின் திருக்கோபுரம் 161 அடியாகும்.
ஜெய் ஸ்ரீராம்: ராமர் கோவிலை கட்ட வேண்டும் என்பதற்காக, நாடு முழுக்க இருந்த பல்வேறு மொழிகளில் ஸ்ரீராம் என்று பெயர் செதுக்கப்பட்டுள்ள செங்கல்கள் கடந்த 30 வருடங்களாக அனுப்பப்பட்டு தொடர்ந்து வந்து சேர்ந்த இந்தச் செங்கல்கள் பூஜை செய்யப்பட்டு இராமர் கோயில் கட்டுமான பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
நிதி உதவி: இந்த ராமர் கோயில் கட்டுமான பணிகளுக்காக பொதுமக்கள், தொழிலதிபர்கள் என பலரும் தங்களால் முடிந்த நிதியுதவியையும் அளித்து வருகின்றனர். ரூபாய் 1800 கோடி மதிப்பீட்டில், நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் உழைப்பில் இந்த பிரம்மாண்ட கோயில் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
குவியும் நிதி: ஸ்ரீ இராம பக்தர்களின் காணிக்கையாக மட்டும் 3400 கோடிகளுக்கு மேல் பொருள் உதவி கிடைத்துள்ளது. கட்டுமான செலவு போக மீதமிருக்கும் பணத்தை அயோத்தியின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படும் கோயில் அறக்கட்டளையினர் சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் 'ராமர் கோவில் கட்டுமானத்துக்கு வெளிநாடுகளில் இருந்து, வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குபடுத்தல் சட்டப்படி நன்கொடைகள் பெற மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
அறக்கட்டளைக்கு வெளிநாட்டு நிதி: இது தொடர்பாக ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய், நேற்று 'எக்ஸ்' தளத்தில் வௌியிட்ட பதிவில், 'ராமர் கோவில் கட்டுமானத்துக்கு வெளிநாடுகளில் இருந்து, வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குபடுத்தல் சட்டப்படி நன்கொடைகள் பெற மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
நன்கொடைகளை எப்படி அனுப்புவது: அதுபோன்ற நன்கொடைகளை, டெல்லி சன்சத் மார்க்கில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி பிரதான கிளையில் உள்ள ராமர் கோவில் அறக்கட்டளையின் கணக்குக்கு மட்டுமே அனுப்ப வேண்டும் என்று அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார். ராமர் கோவிலின் தரைத்தள கட்டுமானம் வருகிற டிசம்பர் இறுதியில் முடிவடையும். குடமுழுக்கு விழா அடுத்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி நடைபெறும் என்று நிருபேந்திர மிஸ்ரா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
அன்னதானம்: ஜனவரியில் நடைபெறும் விக்கிரக பிரதிஷ்டை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்வார். அதற்கான தேதியை பிரதமர் அலுவலகம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளார். விழாவிற்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000க்கும் மேற்பட்ட இந்து மதத் தலைவர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. விரைவில் அவர்களுக்கு அறக்கட்டளைத் தலைவர் மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் கையெழுத்துடன் அழைப்புக் கடிதம் அனுப்பப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அயோத்தியில் நடைபெறும் கும்பாபிஷேக விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு சுமார் ஒரு மாதத்திற்கு இலவச உணவு வழங்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications