பீகார் சட்டசபை தேர்தல்: தோல்வி பயத்தால் வியூகங்களை விறுவிறுவென மாற்றும் பா.ஜ.க.?

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷாவை முன்னிறுத்தி வந்த பா.ஜ.க. திடீரென மாநிலத் தலைவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து விளம்பரங்களை மேற்கொண்டு வருகிறது. பீகார் தேர்தலில் பா.ஜ.கவுக்கு பெரிய அளவில் வெற்றி வாய்ப்புகள் இல்லை என்பதை உணர்ந்ததையடுத்தே இந்த வியூகம் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பீகாரில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளுக்கு 5 கட்டமாக வாக்குப் பதிவு நடத்தப்படுகிறது. இதில் 2 கட்ட வாக்குப் பதிவு முடிவடைந்துள்ளது.

Is PM Modi no more the face of BJP in Bihar polls?

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக நிதிஷ்குமார் முன்னிறுத்தப்பட்டுள்ளார். ஆனால் பா.ஜ.க. அணி யாரையும் முதல்வர் வேட்பாளராக நிறுத்தவில்லை.

அத்துடன் பீகாரில் பா.ஜ.கவின் முகங்களாக பிரதமர் மோடி மற்றும் அமித்ஷதான் முன்னிறுத்தபட்டனர். மேலும் மத்திய அமைச்சர்களும் பீகாரில் முகாமிட்டு இரவு பகலாக தேர்தல் வேலை பார்த்து வருகின்றனர்.

பீகார் தேர்தல் தொடர்பான தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளில் இரு அணிகளுக்கும் இடையேயான சமமான போட்டி இருக்கும் என்பதே வெளிப்பட்டிருந்தது.

இந்நிலையில் முதல் கட்ட வாக்குப் பதிவு முடிவடைந்த நிலையிலேயே இந்தியா டுடே குழும மூத்த பத்திரிகையாளர் ராகுல் கன்வால், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான அணிக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என பதிவிட்டிருந்தார். இது கடும் சர்ச்சையை கிளப்பிவிட்டது.

தேர்தல் நடந்து கொண்டிருக்கும் போதே எக்ஸிட் போலை எப்படி வெளியிடலாம் என்று பா.ஜ.க.தரப்பு பாய்ந்து பிராண்டியது.

இந்த நிலையில் பீகாரில் பாரதிய ஜனதா கட்சி அதிரடியாக தமது தேர்தல் வியூகங்களை மாற்றத் தொடங்கியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.

இதுவரை பா.ஜ.க. அணி விளம்பரங்களில் பிரதமர் மோடி, அமித்ஷா படங்கள் இடம்பெற்றிருந்தன. தற்போது இருவரது படங்களும் அகற்றப்பட்டு மாநில பா.ஜ.க. தலைவர்களின் படங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதே போல பத்திரிகைகளுக்கு தரப்பட்ட விளம்பரங்களில் முதலில் மாநிலத் தலைவர்கள் படங்களே இல்லை.

மோடியும் அமித்ஷாவும் தான் இருந்தனர். அதிலும் மாற்றம். மோடி, அமித்ஷாவுக்கு பதிலாக மாநிலத் தலைவர்கள் படங்கள் விளம்பரங்களில் இடம் பெற ஆரம்பித்துவிட்டன.

இதுவரை இத்தேர்தலில் பா.ஜ.க. முன்வைத்த முழக்கமே இந்த முறை பீகாரில் மோடி சர்க்கார்தான் என்பதுதான். இப்போது இதுவும் மாற்றப்பட்டு 'அரசாங்கத்தை மாற்றுவோம்; பீகாரை மாற்றியமைப்போம்' என்ற பொத்தாம் பொதுவான முழக்கத்தை பா.ஜ.க. பேசி வருகிறது.

மேலும் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருந்த 6 பிரசார பொதுக்கூட்டங்கள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அதுவும் பீகார் தேர்தலில் பா.ஜ.க. தோற்றால் பிரதமர் பதவியை மோடி ராஜினாமா செய்வாரா? என்று லாலுபிரசாத் கேள்வி எழுப்பி பிரசாரம் செய்து வரும் நிலையில் பிரதமர் மோடி, அமித்ஷா முகங்கள் மறைக்கப்படுவதும் பிரதமர் மோடியின் கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதும் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

பீகார் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோற்றுவிடக் கூடும் என்ற அச்சத்தில்தான் இந்த வியூகத்தை அக்கட்சி மேற்கொள்வதாக எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்கின்றன. தோற்றால் அதற்கு மோடியும் அமித்ஷாவும் தான் காரணம் என்ற பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே மற்றவர்களை பாஜக முன்னிலைப்படுத்த ஆரம்பித்துவிட்டதாக ஊடகங்கள் எழுத ஆரம்பித்துவிட்டன.

ஆனால் மோடி எந்த பொதுக் கூட்டத்தையும் ரத்து செய்யவில்லை என்றும், நவராத்திரி காலங்களில் பிரதமர் மோடி உண்ணாவிரதத்தைக் கடைபிடிப்பவர் என்றும் அதனால்தான் அவரது பிரசார கூட்டங்கள் தாமதமாகின்றன என்றும்; 3வது கட்ட வாக்குப் பதிவுக்குப் பின்னர் பிரதமர் மோடி விஸ்வரூப பிரசாரம் மேற்கொள்வார் என்கிறது பா.ஜ.க. தரப்பு.

பிரதமர் மோடி பதவியேற்ற பின்னர் நடைபெறும் மாநிலத் தேர்தல்களில் பா.ஜ.க. இப்படி தடுமாறுவது இதுதான் முதல் முறை. ஆகையால் பீகார் தேர்தல் களம் பா.ஜ.க.வுக்கு மட்டுமல்ல...பிரதமர் மோடிக்கு அக்னி பரீட்சைதான்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+