உடைகிறது மூட நம்பிக்கை... தீபாவளி கொண்டாடத் தயாராகும் விருந்தாவன் கைம்பெண்கள்
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் விருந்தாவனைச் சேர்ந்த கணவரை இழந்த கைம்பெண்கள் காலம் காலமாக தங்களை அடக்கி வைத்திருந்த மூட நம்பிகைகளுக்கும், சமுதாய கட்டுப்பாடுகளுக்கும் இந்த தீபாவளியன்று விடை கொடுக்கவுள்ளனர்.
கணவரை இழந்த பிறகு தீபாவளி உள்ளிட்ட கொண்டாட்டங்ளில் ஈடுபடுவதற்கு சமுதாயக் கட்டுப்பாடுகள் போட்டிருந்த தடை வேலியைத் தகர்த்தெறிந்து இந்த முறை இவர்களும் தீபாவளியைக் கொண்டாடப் போகிறார்கள்.
விருந்தாவனில் உள்ள ஆயிரக்கணக்கான விதவைப் பெண்கள் இந்த தீபாவளியை விளக்கேற்றி வைத்து, பட்டாசு வெடித்துக் கொண்டாட உற்சாகமாக தயாராகி வருகின்றனர்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள்
விருந்தாவனில் உள்ள விதவைப் பெண்களில் பெரும்பாலானவர்கள் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். கடந்த பல காலமாக இவர்களது வாழ்க்கை பெரும் சோகத்துக்குரியதாகவே இருந்தது. கணவர் இறந்ததும் இந்தப் பெண்களை குடும்பத்தினர் விருந்தாவனுக்கு அனுப்பி விடுகின்றனர்.

வெள்ளைச் சேலையில்...
வெள்ளைச் சேலை அல்லது காவி சேலையை மட்டுமே இவர்கள் கட்ட வேண்டும். எந்தவிதமான அடிப்படை வசதியும் இவர்களுக்குக் கிடைக்காது. கொண்டாட்டங்கள், சந்தோஷங்கள் என்று எதுவுமே இவர்களுக்குக் கிடையாது.

மீட்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்
சுலப் இன்டர்நேஷனல் என்ற நிறுவனம்தான் இவர்களது நிலையை உச்சநீதி்மன்றத்தின் பார்வைக்குக் கொண்டு போய் விமோச்சனம் தேடிக் கொடுத்தது. உச்சநீதிமன்றம் இந்தப் பெண்களுக்குப் போதிய பாதுகாப்பும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் சுலப் நிறுவனத்தை கேட்டுக் கொண்டது.

குடும்பத்தால் கைவிடப்பட்டவர்கள்
இந்தப் பெண்களில் பலர் கணவர்களை இழந்த பின்னர் குடும்பத்தினரால் கைவிடப்பட்டவர்கள் ஆவர். வாழ வேண்டுமே என்ற ஒரே காரணத்திற்காக உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நாட்களை ஓட்டிக் கொண்டிருந்தனர்.

விருந்தாவன் கோவில்களில் அடைக்கலம்
இப்பெண்கள் விருந்தாவனில் உள்ள பல்வேறு கோவில்களில் அடைக்கலம் புகுந்து வாழ்ந்து வருகின்றனர். அங்குள்ள கோவில்களில் பாட்டுப் பாடி பக்தர்கள் தரும் பணத்தைக் கொண்டு காலத்தைக் கழித்து வருகின்றனர்.

இந்தத் தீபாவளி சந்தோஷ தீபாவளி
தீபாவளி உள்ளிட்ட எந்தப் பண்டிகையையும் கொண்டாடியிராத இவர்களுக்கு சுலப் மற்றும் உச்சநீதிமன்றத்தின் மூலம் இந்த ஆண்டு தீபாவளி மகிழ்ச்சியான பண்டிகையாக மாறியுள்ளது.

ஒளிமயமான எதிர்காலம்
இதுகுறித்து சுலப் அமைப்பின் தலைவரான பிந்தேஸ்வர் பதக் கூறுகையில், இவர்களின் வருங்கலாம் மிகுந்த ஒளிமயமானாக மாறப் போகிறது. இவர்களும் மற்றவர்களைப் போல பண்டிகையைக் கொண்டாடவுள்ளனர். இவர்களைச் சுற்றியிருந்த மூட நம்பிக்கைகளுக்கு முடிவு பிறந்துள்ளது. இவர்களுக்காக 3 நாள் தீபாவளிக் கொண்டாட்டத்திற்கு நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம் என்றார்.

அக்டோபர் 31 முதல்
அக்டோபர் 31ம் தேதி முதல் நவம்பர் 3ம் தேதி வரை விருந்தாவனில் உள்ள நூறாண்டு கால விதவைகள் அடைக்கல மையமான மீராசபாக்னி ஆசிரமத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்திற்கு சுலப் ஏற்பாடு செய்துள்ளது.

ஆயிரக்கணக்கான விளக்குகள்
இவர்கள் ஏற்றுவதற்காக ஆயிரக்கணக்கான அகல் விளக்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த விளக்குகளை இந்த கைம்பெண்களே அழகுபடுத்தியுள்ளனர். மெழுகுவர்த்திகளையும் இவர்கள் தீபாவளியின்போது ஏற்றவுள்ளனர்.

பட்டாசு வெடிப்போம்...
அதேபோல இவர்களுக்காக பட்டாசுகளுக்கும் பெருமளவில் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமாக அறுசுவை விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.












Click it and Unblock the Notifications