ஜெகன் மோகன் ரெட்டி கார் டயரில் சிக்கி தொண்டர் பலி.. 6 பேர் மீது வழக்குப் பதிவு.. கார் ஓட்டுநர் கைது
அமராவதி: ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை வரவேற்க அவரது காரில் பூத்தூவிய தொண்டர் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கார் ஓட்டுநரான ரமண ரெட்டியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஆந்திர முன்னாள் முதல்வரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர மாநிலத்தில் உள்ள பல்நாடு மாவட்டம், ரெண்டபல்லா கிராமத்து கட்சியைச் சேர்ந்த ஒருவரின் வீட்டின் துக்க நிகழ்ச்சிக்குச் சென்றுள்ளார். அங்கு அவர்களுடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிவிட்டு, ஜெகன்மோகன் ரெட்டி காரில் வீடு திரும்பியுள்ளார்.

அப்போது, ஜெகன்மோகன் ரெட்டியின் கார் ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்துக்குள் சென்று கொண்டிருந்தது. அப்போது, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தொண்டரான செல்லி சிங்கையா (55) ஜெகன்மோகன் ரெட்டியை வரவேற்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது அவரைப் பார்ப்பதற்காக தொண்டர்கள் பலர் முண்டியடித்துக் கொண்டு சென்றுள்ளனர். ஆரவாரங்களுக்கு மத்தியில் செல்லி சிங்கையா ஜெகன்மோகன் ரெட்டியின் கார் மீது மலர்களை தூவினார்.
அப்போது, ஜெகன் மோகன் ரெட்டியின் காரின் மீது தொண்டர்கள் சிலர் ஏறினர். செல்லி சிங்கையாவும் காரின் மீது ஏற முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது, கால் தவறி காரின் அடியில் செல்லி சிங்கையா கீழே விழுந்துள்ளார். இதனை ஜெகன்மோகன் ரெட்டி, தொண்டர்கள் என, யாரும் கவனிக்காத நிலையில், ஓட்டுநரும் காரை முன்னோக்கி இயக்கியுள்ளார்.
இதில், காரின் சக்கரம் செல்லி சிங்கையாவின் தலையின் மீது ஏறி இறங்கியதில் அவருடைய தலை நசுங்கியது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் தொண்டர்கள் செல்லி சிங்கையாவை மீட்டு அருகே உள்ள குண்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
ஜெகன்மோகன் ரெட்டியை வரவேற்க பூத்தூவி காரின் சக்கரத்தில் செல்லி சிங்கையா சிக்கியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரை கண் கலங்கச் செய்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஜெகன் மோகன் ரெட்டி, உதவியாளர் நாகேஸ்வர ரெட்டி, முன்னாள் எம்பி சுப்பா ரெட்டி, முன்னாள் அமைச்சர் விடதலா ரஜினி, முன்னாள் எம்எல்ஏ பேர்னி நானி ஆகிய 6 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஜெகன் மோகன் ரெட்டியின் கார் ஓட்டுநரான ரமண ரெட்டியை போலீஸார் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications