ஆந்திரா தலைநகர் செப்டம்பரில் மாற்றம்! அமராவதிக்கு பதில் விசாகப்பட்டினம்! சாதிக்கும் ஜெகன்மோகன்!
விசாகப்பட்டினம்: ஆந்திராவில் இருந்து தெலங்கானா தனிமாநிலமாக பிரிந்ததை தொடர்ந்து ஆந்திராவின் புதிய தலைநகராக அமராவதி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் புதிய தலைநகராக விசாகப்பட்டினத்தை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தார். இதில் குழப்பம் ஏற்பட்ட நிலையில் தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை ஜெகன் மோகன் ரெட்டி வெளியிட்டுள்ளார்.
ஆந்திராவில் இருந்து கடந்த 2014ல் தெலங்கானா தனி மாநிலமாக பிரிந்தது. இதையடுத்து தெலங்கானாவின் தலைநகராக ஹைதரபாத் மாறியது. இதனால் ஆந்திராவுக்கு புதிய தலைநகரை உருவாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதையடுத்து அமராவதி தலைநகராக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து அமராவதியில் தலைமை செயலகம், சட்டசபை அமைக்கப்பட்டு கூட்டங்கள் நடக்க தொடங்கின. தற்போது ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி உள்ளார். இவர் வேறு பிளானை கையில் எடுத்தார்.
அதாவது ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி ஆந்திராவில் அமைந்ததும், ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் அமைக்கப்படும் என அறிவித்தார். அதன்படி, அமராவதியில் சட்டசபையும், கர்னூலில் உயர்நீதிமன்றமும், விசாகப்பட்டினத்தில் தலைமைச் செயலகமும் அமைக்க முடிவு செய்தார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.
மேலும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த ஆந்திர உயர்நீதிமன்றம் அமராவதியை தலைநகராக்க உத்தரவிட்டது. இதனை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கில் ஆந்திர உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. மேலும் அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இதையடுத்து சமீபத்தில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி விரைவில் விசாகப்பட்டினம் ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரமாக மாற உள்ளது. நானும் கூட விரைவில் விசாகப்பட்டினத்துக்கு குடிபெயர உள்ளேன் என அறிவித்தார். இதற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் தான் ஆந்திராவின் தலைநகர் குறித்து நேற்று ஜெகன் மோகன் ரெட்டி முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

இதுதொடர்பாக ஜெகன் மோகன் ரெட்டி கூறுகையில், ‛‛இந்த ஆண்டு செப்டம்பர் முதல் மாநிலத்தின் நிர்வாக ரீதியிலான தலைநகராக விசாகப்பட்டினம் செயல்படும். அங்கு இருந்து தான் பணி செய்ய உள்ளேன். மாநில தலைநகராக விசாகப்பட்டினம் இருக்க வேண்டும் என்பது தான் ஒருமித்த கருத்தாக உள்ளது. இதனால் நிர்வாக பரவல் கொள்கையின்படி நான் விசாகப்பட்டினத்தில் இருந்து பணியா்ற உள்ளேன்'' என்றார்.
இதன்மூலம் விரைவில் ஆந்திராவின் தலைநகராக விசாகப்பட்டினம் மாற உள்ளது. இந்த அறிவிப்புக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் மற்றவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கி உள்ளனர். ஆந்திராவை பொறுத்தமட்டில் கடந்த 4 ஆண்டுகளாக தலைநகர் குறித்த பிரச்சனை இருந்து வருகிறது. ஜெகன் மோகன் ரெட்டியின் தற்போதைய அறிவிப்பின் படி அந்த பிரச்சனை முடிவுக்கு வருமா? இல்லையென்றால் மீண்டும் நீதிமன்ற வழக்குகளில் தடை விழுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications