ஜம்மு காஷ்மீர் தாக்குதல்: ராஜ்நாத்சிங், அமித்ஷா தலைமையில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்?
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கோர வெறியாட்டத்தில் 27 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு நாளை அனைத்து அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியுள்ளது. மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா தலைமையில் நாளை டெல்லியில் அனைத்து அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது.
ஜம்மு காஷ்மீரின் சுற்றுலா தலமான பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் ரத்த வெறியுடன் சுற்றுலா பயணிகளை ஈவிரக்கம் இல்லாமல் சுட்டுப் படுகொலை செய்தனர். பயங்கரவாதிகளின் இந்த வெறியாட்டத்தில் 27 அப்பாவி சுற்றுலா பயணிகள் பலியாகினர். ஒட்டுமொத்த உலக நாடுகளையும் இந்த கொடூர படுகொலைத் தாக்குதல் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, உடனடியாக சவூதியில் இருந்து இந்தியா திரும்பி ஆலோசனை நடத்தினார். ஜம்மு காஷ்மீருக்கு நேற்றே சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அடுத்தடுத்து பாதுகாப்பு தரப்பினருடன் ஆலோசனை நடத்தினார். இன்றும் அமித்ஷா காஷ்மீரில் முகாமிட்டு பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு டெல்லி திரும்பினார். இதேபோல மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கும் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைகளைத் தொடர்ந்து டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அமித்ஷா மற்றும் முப்படைகளின் தளபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பிரதமர் மோடி இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் என்ணிக்கையை குறைப்பது; இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியர்கள் 48 மணிநேரத்தில் வெளியேற கெடு; இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் ஒரு வாரத்தில் வெளியேற கெடு; இந்தியா- பாகிஸ்தான் இடையேயான சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தம் ரத்து; இந்தியா- பாகிஸ்தான் இடையேயான வாகா- அட்டாரி எல்லைகள் மூடல்; பாகிஸ்தானியர்களுக்கு விசா ரத்து என பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது மத்திய அரசு.
மேலும் நாட்டின் முப்படைகளும் உஷார் நிலையில் இருக்கவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இத்தகைய நடவடிக்கைகளைத் தொடர்ந்து அனைத்து அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை டெல்லியில் நாளை நடத்துகிறது மத்திய அரசு. இந்தக் கூட்டத்துக்கு மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் அமித்ஷா தலைமை வகிக்கக் கூடும் என்கின்றன டெல்லி தகவல்கள்.












Click it and Unblock the Notifications