ஜம்மு காஷ்மீர் தேர்தலில் பாஜக கடும் சரிவு.. கிங் மேக்கராகும் மெஹபூபா முஃப்தி
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் தேர்தலில் தேசிய மாநாடு, காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகிக்கும் என்றே பல்வேறு கருத்துக் கணிப்புகளும் கூறி வருகின்றன. காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாஜக கடும் சரிவை சந்திக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கும் கிங் மேக்கராக மெஹபூபா முஃப்தி இருப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் கடந்த 2014ம் ஆண்டுக்கு பிறகு, சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இருந்தது. ஆனால் இப்போது ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக உள்ளது. அதோடு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் சந்தித்த முதல் தேர்தல் இதுவாகும்.

இந்த தேர்தலில் 3 முனை போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் கட்சியும், முன்னாள் முதல்வர் பாரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சியும் கூட்டணி அமைத்துள்ளது. பாஜகவும், முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியும் தனித்து களமிறங்கி உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க 46 இடங்களில் வெல்ல வேண்டும் என்ற நிலையில், 3 கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது. கடந்த மாதம் 18 ம் தேதி 24 தொகுதிகளுக்கு, கடந்த மாதம் 25ம் தேதி 26 தொகுதிகளுக்கும், அக்டோபர் 1ம் தேதி 40 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடந்தது.
இதில் பதிவான ஓட்டுகள் அக்டோபர் 8 ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் தொடர்பான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் இன்று மாலை 6 மணி முதல் வெளியாகி வருகின்றன. இந்தியா டுடே சி வோட்டர்ஸ் கருத்துக் கணிப்பு, என்டிடிவி, தைனிக் பாஸ்கர், பீப்பிள்ஸ் பல்ஸ் ஆகியோரின் கருத்துக் கணிப்புப் படி தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகிப்பதாக கூறப்பட்டுள்ளது.
இந்த மும்முனைப் போட்டியில் தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் கூட்டணி நூலிழையில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறியுள்ளனர். பாஜக இந்த தேர்தலில் பல்வேறு வியூகங்களை வகுத்தது. நயா காஷ்மீர் என்ற முழக்கத்துடன் அந்தக் கட்சியின் அனைத்துத் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
தேசிய மாநாடு - காங்கிரஸ் கூட்டணியும் களத்தில் தீவிரமாக பணியாற்றியது. இந்த மும்முனைப் போட்டியில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைப்பது சந்தேகம் என்று தகவலும் பரவி வருகிறது. அப்படி நடந்தால் மெஹபூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயக கட்சியும், ரஷீதின் அவாமி இத்தியாட் கட்சியும் கிங் மேக்கர்களாக இருப்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கடைசியாக நடந்த ஜம்மு காஷ்மீர் 2014 சட்டமன்ற தேர்தலில், மக்கள் ஜனநாயக கட்சி 28 சீட்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவானது. தற்போது அவர்களின் செல்வாக்கு குறைந்து 6-12 சீட்கள் பெறுவார்கள் என்றே பலரும் கூறுகின்றனர். பாஜக ஜம்மு மாகாணத்தில் அதிக இடங்களை பெற்றாலும், காஷ்மீர் மாகாணத்தில் பாஜக படுதோல்வியை சந்திக்கும் என்றே பல கருத்துக் கணிப்புகளும் கூறுகின்றனர்.
அந்த காஷ்மீர் மாகாணத்தில் தேசிய மாநாடு - காங்கிரஸ் கூட்டணி 29-33 சீட்களிலும், மக்கள் ஜனநாயக கட்சி 17% வாக்குகளுடன் 6-10 சீட்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்பில் கூறியுள்ளனர். எனவே வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக மெஹபூபா மற்றும் ரஷீத் இருப்பார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications