தேசிய மாநாட்டு கட்சி-காங்கிரஸ் கூட்டணி வெற்றி! 370-வது பிரிவு ரத்துக்கு எதிராக காஷ்மீர் வாக்காளர்கள்!
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்தியில் ஆளும் பாஜக அரசு ரத்து செய்த முடிவுக்கு அந்த மாநில மக்கள் கடும் எதிர்ப்பை சட்டசபை தேர்தலில் வெளிப்படுத்தி இருக்கின்றனர். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை மீண்டும் வழங்க நெருக்கடி தருவோம் என வாக்குறுதி அளித்த காங்கிரஸ்- தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணிக்கே அம்மாநில மக்கள் வாக்களித்துள்ளனர்.
1947ஆம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையின்போது ஜம்மு காஷ்மீர் சுதந்திர நாடாகவே இருக்க விரும்பியது. ஜம்மு காஷ்மீரின் கடைசி மன்னர் ஹரிசிங் இதில் உறுதியாக இருந்தார். ஆனால் திடீரென ஜம்மு காஷ்மீர் மீது பாகிஸ்தான் படையெடுத்ததால் இந்தியாவுடன் இணைய ராஜா ஹரிசிங் ஒப்புக் கொண்டார். அப்போது ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க உறுதியளிக்கப்பட்டது. இதன்படி ஜம்மு காஷ்மீருக்கு தனி அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு அதுவும் 1957- ஆண்டு அமலுக்கு வந்தது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்ததுதான் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு. இந்த சரத்தின் படி பாதுகாப்பு, வெளி விவகாரம் மற்றும் தகவல் தொடர்பு தரவி ஜம்மு காஷ்மீர் குறித்து எந்த ஒரு சட்டத்தை செயல்படுத்தவும் அம்மாநிலத்தின் அனுமதியை மத்திய அரசு பெற வேண்டும்; மாநிலங்களைக் கலைக்கும் மத்திய அரசின் அதிகாரமான அரசியல் சாசனத்தின் 356-வது பிரிவு ஜம்மு காஷ்மீருக்கு பொருந்தாது; ஜம்மு காஷ்மீர் அரசைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது; ஜம்மு காஷ்மீர் மாநில மக்களுக்கு இரட்டை குடியுரிமை; மாநிலத்துக்கு தனி கொடி; சட்டசபை பதவி காலம் ஆறு ஆண்டுகள் என்பது உள்ளிட்டவை 370-வது பிரிவின் கீழான முக்கிய அம்சங்கள்.
அரசியல் சாசனத்தின் 370-ன் ஒரு பகுதியான 35ஏ-வானது இந்தியாவின் இதர மாநிலங்களில் வசிப்பவர்கள் ஜம்மு காஷ்மீரில் நிலம் அல்லது சொத்து வாங்க முடியாது என்றது. இந்தியாவில் பொருளாதார அவசர நிலையை அமல்படுத்தும் அதிகாரமான அரசியல் சாசனத்தின் 360 பிரிவும் கூட ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு பொருந்தாது என்ற நிலைமைதான் இருந்தது.
ஜம்மு காஷ்மீருக்கான இந்த சிறப்பு அந்தஸ்தை நீக்க வேண்டும் என்பதை கொள்கைகளில் ஒன்றாக வைத்திருந்தது பாஜக. 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவடைந்து மீண்டும் பாஜக ஆட்சி அமைத்த உடனேயே ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலம் என்பது 2 யூனியன் பிரதேசங்களாக கூறு போடப்பட்டது. மேலும் ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர். ஜம்மு காஷ்மீரில் 5 ஆண்டுகளாக ஜனநாயக அரசியல் முடக்கி வைக்கப்பட்டிருந்தது. உச்சநீதிமன்றத்தின் நெருக்கடியால் தற்போது ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்தப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் தேர்தல் களத்தில் 370-வது பிரிவு ரத்து விவகாரம் மிக முதன்மையான பேசுபொருளாக இருந்தது. 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை நியாயப்படுத்தியது பாஜக. ஆனால் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர நெருக்கடி தருவோம்; ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கிடைக்க போராடுவோம் என முழங்கியது காங்கிரஸ்- தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி.
தற்போது காங்கிரஸ்- தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணிக்கே ஜம்மு காஷ்மீர் மாநில மக்கள் வாக்களித்துள்ளனர். 90 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச தேர்தலில், தேசிய மாநாட்டுக் கட்சி 42; அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 6 இடங்களில் வென்றுள்ளது. ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு தேவை 46 இடங்கள். தேசிய மாநாட்டுக் கட்சி- காங்கிரஸ்- இடதுசாரி கூட்டணி 46-க்கும் அதிகமான இடங்களைப் பெற்றுள்ளது.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதலாவது ஆட்சியை காங்கிரஸ் கூட்டணிதான் அமைக்கிறது. ஜம்மு காஷ்மீர் மாநில அந்தஸ்தை பறித்து,, 370-வது பிரிவை ரத்து செய்த மத்திய பாஜக அரசுக்கு எதிராகவே அம்மாநில மக்கள் வாக்களித்துள்ளதையே இந்த தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.












Click it and Unblock the Notifications