எம்எல்ஏக்களை நியமனம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம்.. ஜம்மு காஷ்மீரில் அரசியல் கட்சிகள் கொதிப்பு- பின்னணி
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஐந்து எம்.எல்.ஏக்களை நியமனம் செய்ய துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. செவ்வாய்க்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், தொங்கு சட்ட சபை அமைந்தால், ஆளுநர் நியமிக்கும் எம்.எல்.ஏக்களின் பங்கு முக்கியத்துவம் பெறும் என்பதால், அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன.
ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (8ஆம் தேதி) எண்ணப்படுகின்றன. 10 ஆண்டுகளுக்கு பிறகு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளதால், நாடு முழுவதும் இந்த தேர்தல் முடிவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 90 தொகுதிகள் உள்ளன. காங்கிரஸ் - தேசிய மாநாட்டு காட்சிகள் கூட்டணி அமைத்தும், பாஜக, மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி தனியாகவும் போட்டியிட்டு உள்ளன.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ் - தேசிய மாநாடு கட்சி கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமையவும் வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. மெகபூபா முப்தி தான் கிங் மேக்கராக இருப்பார் என்பதும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் சொல்லும் முடிவாக உள்ளது.
இந்த நிலையில், தான் ஜம்மு காஷ்மீரில் ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள நியமன அதிகாரம் குறித்து அரசியல் கட்சிகள் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளன. ஜம்மு காஷ்மீரை பொறுத்தவரை யூனியன் பிரதேசம் என்பதால், புதுச்சேரி சட்டசபையில் துணை கவர்னரால் 3 எம்.எல்.ஏக்கள் நியமிக்கப்படும் முறை இருக்கிறதோ? அதுபோல, ஜம்மு காஷ்மீரிலும் 2019 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மறுசீரமைப்பு சட்டத்தில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க துணை நிலை ஆளுநர் 2 பேரை நியமனம் செய்ய வகை செய்யப்பட்டிருந்தது.
இதில் கடந்த 2023 ஆம் ஆண்டில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதன்படி, 2 பெண் நியமன உறுப்பினர்களுடன் கூடுதலாக 3 உறுப்பினர்கள், அதாவது காஷ்மீரில் புலம்பெயர்ந்த சமுதாயத்தில் இருந்து 2 பேரும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள ஜம்மு காஷ்மீர் பகுதியில் இருந்து குடிவந்த மக்களில் இருந்து ஒருவரையும் நியமிக்க முடியும். இதன்படி பார்த்தால் 5 எம்.எல்.ஏக்களை நியமிக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது.
இந்த எம்.எல்.ஏக்களுக்கு ஓட்டுரிமையும் உண்டு என்பதால், புதிய அரசை அமைக்க அவர்களின் பங்கு முக்கியமாக இருக்கும். காஷ்மீரில் தொங்கு சட்ட சபை அமைந்தால் இந்த 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவு மிகுந்த முக்கியத்துவம் பெறும். இது பாஜகவிற்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. இதனால், காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன.
மக்களின் ஆணையை நீர்த்து போக வைக்கும் வகையில், ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் இருப்பதாகவும் பாஜகவிற்கு இதனால் பலன் கிடைக்கும் எனவும் இந்தக் கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன. எம்.எல்.ஏக்கள் நியமன முறையில் நியமிக்கப்பட்டால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என தேசிய மாநாட்டு கட்சி தெரிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கைக்கு இடையே, ஆளுநருக்கு உள்ள நியமன அதிகாரம் ஜம்மு காஷ்மீர் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications